ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பர்மிங்கம் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கியது. குறிப்பாக அந்த போட்டியில் முதல் நாளிலேயே அதிரடியாக செயல்பட்டு 393/8 ரன்கள் குவித்தும் தைரியமாக டிக்ளேர் செய்கிறோம் என்ற பெயரில் கையிலிருந்த வெற்றியை கோட்டை விட்ட அந்த அணியின் அதிரடியாக விளையாடும் அணுகுமுறை பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. இருப்பினும் ஒரு போட்டியில் சந்தித்த தோல்வியால் பின்வாங்க போவதில்லை என்று அறிவித்த இங்கிலாந்து இந்த தொடர் முழுவதும் அதே போல் அதிரடியாக விளையாட உள்ளதாக கூறியுள்ளது.
அந்த நிலையில் ஜூன் 28ஆம் தேதி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இருப்பினும் ஆரம்பத்திலேயே மழை பெய்ததால் சுமார் ஒரு மணி நேரம் தாமதமான அந்த போட்டி ஒரு வழியாக துவங்கியது. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகிய தொடக்க வீரர்கள் பேட்டிங் செய்வதற்காக களமிறங்கி முதல் ஓவரை எதிர்கொண்டனர்.
மைதானத்தில் போராட்டம்:
அந்த நிலைமையில் ஸ்டுவர்ட் ப்ராட் 2வது ஓவரை வீசுவதற்கு பந்தை கையில் எடுத்து தயாராக இருந்த நிலையில் திடீரென “எண்ணெய் போராட்டத்தை நிறுத்துங்கள்” என்ற ஆர்ப்பாட்டக் குழுவைச் சேர்ந்த 3 பேர் மைதானத்திற்குள் உள்ளே புகுந்தனர். அதில் ஒருவரை ஆரம்பத்திலேயே மைதான காவலர்கள் தடுத்த நிலையில் எப்படியோ தப்பிய எஞ்சிய 2 பேர் நேரடியாக களத்திற்குள் சென்று கையில் வைத்திருந்த ஆரஞ்சு வண்ணப் பொடிகளை டேவிட் வார்னர் போன்ற வீரர்கள் மீது வீச முயற்சிக்கு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அப்போது பென் ஸ்டோக்ஸ், வார்னர் ஆகியோர் அவர்களை பிடிக்குமாறு காவலர்களை அழைத்தனர். ஆனால் மறுபுறம் தாமே களத்தில் இறங்கிய இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ அந்த 2 பேரில் ஒருவரை குழந்தையைப் போல் அசால்ட்டாக அலேக்காக தூக்கி அசராமல் ஓடிச் சென்று மைதானத்திற்கு வெளியே இருந்த காவலர்களிடம் ஒப்படைத்து விட்டு மீண்டும் உள்ளே வந்தார். அப்படி போராட்டக்காரர்களை தாமே தன்னுடைய முரட்டுத்தனமான உடம்பால் தூக்கிச் சென்று வெளியே போட்ட அவருடைய வீரத்தை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கைதட்டி பாராட்டினர்.
அந்த சமயத்தில் மற்றொருவரையும் காவலர்கள் பிடித்து மைதானத்திற்கு வெளியே அழைத்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து உள்ளே வந்த பின் தம்முடைய ஜெர்ஸி அந்த ஆரஞ்சு பவுடர்களால் அழுக்கானதை உணர்ந்த ஜானி பேர்ஸ்டோ மீண்டும் பெவிலியன் சென்று புதியதை அணிந்து வந்தார். அந்த வகையில் விக்கெட் கீப்பராக பந்தை பிடிக்கும் அவர் இந்த போட்டியில் போராட்டக்காரர்களை பிடித்து அதிக எடையை தூக்கி சாகசம் நிகழ்த்தியதை இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டரில் கலாய்த்து பாராட்டியுள்ளார்.
Good start to the 2nd test.
Bairstow has done some heavy lifting already😂😂 #Ashes2023 pic.twitter.com/f0JcZnCvEr— Ashwin 🇮🇳 (@ashwinravi99) June 28, 2023
மொத்தத்தில் திடீரென போராட்டக்காரர்கள் உள்ளே புகுந்ததால் சுமார் 10 நிமிடம் வரை தாமதமான அந்த போட்டி மீண்டும் துவங்கியது. இந்த நிலையில் அவர்கள் ஏன் மைதானத்திற்கு வந்து போராட்டம் செய்தார்கள் என்பது இந்திய ரசிகர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அதற்கான காரணம் என்னவெனில் புதைபடிவ எரிபொருள் உரிமம் மற்றும் உற்பத்தியை முடிவுக்கு கொண்டு வர பிரிட்டிஷ் அரசாங்கம் விரும்புவதை ஒரு தரப்பினர் எதிர்க்கின்றனர்.
இதையும் படிங்க:தோனியை முதல் முறை பாத்த போது அந்த கஷ்டமான அட்வைஸ் கொடுத்தாரு – இந்தியாவுக்கு தேர்வானது பற்றி ஜெய்ஸ்வால் பேட்டி
எனவே இங்கிலாந்து அரசாங்கத்தின் அந்த முடிவை எதிர்க்கும் வகையிலேயே அவர்கள் இவ்வாறு இப்போட்டியின் உள்ளே புகுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அதற்காக பழமை வாய்ந்த ஆஷஸ் தொடரில் அதுவும் கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ளே புகுந்ததற்காக அவர்களுக்கு அந்த மைதானம் அதிகாரப்பூர்வமான கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா முதல் நாள் உணவு இடைவெளியில் 76/1 ரன்கள் எடுத்துள்ளது.



