வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜூலை மாதம் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த புஜாரா போன்ற சீனியர் வீரர்கள் நீக்கப்பட்ட நிலையில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு யசஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கைக்வாட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்த இருவரில் ருதுராஜை விட ஜெயஸ்வால் மிகவும் திறமை வாய்ந்த அதே சமயம் இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதால் வருங்காலத்தில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக நிரந்தர தொடக்க வீரராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பானி பூரி விற்பவரின் மகனாக பிறந்து கிரிக்கெட்டின் மீதான காதலால் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்ட அவர் கடந்த 2020ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அண்டர்-19 உலக கோப்பையில் அதிக ரன்கள் (400) அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அத்துடன் ரஞ்சிக் கோப்பையில் 15 போட்டியில் 1845 ரன்களை 80.21 என்ற அபாரமான சராசரியிலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 32 போட்டிகளில் 1511 ரன்களை 53.96 என்ற சிறப்பான சராசரியிலும் எடுத்துள்ள அவர் ஐபிஎல் 2023 தொடரில் 625 ரன்கள் அடித்து ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக ரன்கள் குவித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற சரித்திர சாதனை படைத்தார்.
தோனியின் அட்வைஸ்:
குறிப்பாக வரலாற்றின் 1000வது ஐபிஎல் போட்டியில் 124 (62) ரன்களை விளாசி மும்பையை தெறிக்க விட்ட அவர் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரிலேயே உச்சகட்டமாக 26 ரன்கள் அடித்து வெறும் 13 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு அதிவேகமாக அரை சதமடித்த வீரராக சாதனை படைத்தார். அப்படி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் காரணத்தால் 21 வயதில் இந்தியாவுக்கு தேர்வாகியுள்ள அவர் 2024 உலகக்கோப்பை போன்ற வருங்கால தொடர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 2020 ஐபிஎல் தொடரில் தோனியை முதல் முறையாக பார்த்த ஜெய்ஸ்வால் கையெடுத்து கும்பிட்டு வெளிப்படுத்திய மரியாதையை யாராலும் மறக்க முடியாது. அந்த தருணத்தில் பின்பற்றுவதற்கு கடினமாக இருந்தாலும் மிகவும் எளிமையான ஆலோசனை தோனி கொடுத்ததாக தெரிவிக்கும் ஜெய்ஸ்வால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதை பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அது எனது வாழ்வில் மகத்தான தருணமாகும். அப்போது தான் முதல் முறையாக தோனியை நான் மிகவும் அருகில் பார்த்தேன்”
“அந்தப் போட்டியின் நடுவில் நான் அவருடன் பேசுவதற்கு முயற்சித்தேன். அப்போது அவர் என்னிடம் “உன் மீது ஆழமான நம்பிக்கை வைத்து உன்னுடைய மனதை அமைதியாக வைத்திருந்து தொடர்ந்து இதே போன்ற ஷாட்களை அடி” என்று கூறினார். இதுபோன்ற வார்த்தைகள் மிகவும் எளிதானது என்றாலும் எதார்த்தமான வாழ்க்கையில் பின்பற்றுவது மிகவும் கடினமாகும். அதைப் பின்பற்றுவதற்கு உங்களுக்கு அதிகப்படியான பொறுமை வேண்டும்”
“மேலும் என்னுடைய கேரியரில் நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதே செய்கிறேன். மற்ற எதைப் பற்றியும் அதிகமாக யோசிப்பதில்லை. ஒருவேளை என்னுடைய விளையாட்டில் முன்னேற்றுவதற்கு ஏதேனும் விஷயம் கிடைத்தால் அதை நான் செய்வேன். இப்போது எனக்கு கிடைத்துள்ள வாய்ப்புக்காக நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவனாக கருதி அதை மதிக்கிறேன். ஏனெனில் இதற்காக நான் கனவு கண்டேன். என்னுடைய திறமையை வைத்து ரசிகர்களை மகிழ்விக்க முடியும் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்”
இதையும் படிங்க:ஒவ்வொரு வருசமும் உ.கோ வருது இப்போவாச்சும் இந்தியாவுக்காக அதை செய்ங்க – விராட், ரோஹித்துக்கு கங்குலி கோரிக்கை
“அத்துடன் “வாவ் யசஸ்வி நீங்கள் என்ன மாதிரியான ஷாட் அடித்துள்ளீர்கள். எப்பேர்ப்பட்ட கேட்ச் பிடித்துள்ளீர்கள். அற்புதமான ரன் அவுட் செய்துள்ளீர்கள்” என்று யாரேனும் பாராட்டினால் அதை நான் ஆசீர்வாதமாக கருதுகிறேன். எனவே இந்த நிலைமையில் என்னுடைய விளையாட்டை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன். எனக்கு கடவுள் கொடுத்த இந்த வாய்ப்பை மதித்து அமைதியாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட உள்ளேன்” என்று கூறினார்.