வீடியோ : தேய்க்க வேற இடமே இல்லையா – ரன் மழைக்கு மத்தியில் ஜோ ரூட் செய்த சேட்டையால் ரசிகர்கள் கலகலப்பு

ENG Joe Root Ben Sokes James Anderson
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அடுத்ததாக பாகிஸ்தானுக்கு பயணித்து 17 வருடங்கள் கழித்து 3 போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக டிசம்பர் 1ஆம் தேதியன்று ராவல்பின்டி மைதானத்தில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து இது டெஸ்ட் போட்டி என்பதை மறக்கும் அளவுக்கு உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணியாக கருதப்படும் பாகிஸ்தான் பவுலர்களை லோக்கல் பவுலர்களைப் போல் அடித்து நொறுக்கி முதல் இன்னிங்ஸில் 657 ரன்கள் சேர்த்தது.

குறிப்பாக முதல் நாளிலேயே 506 ரன்கள் குவித்த அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாளிலேயே 500 ரன்கள் கடந்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக இரட்டை உலக சாதனைகளை படைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 122, பென் டன்கட் 107, ஓலி போப் 108, ஹரி ப்ரூக் 153 என 4 வீரர்கள் சதமடித்து அதிரடியாக ரன்களை குவித்தனர். அதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய பாகிஸ்தான் தார் ரோட் போல இருந்த பிட்ச்சில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் ஆமை வேக ஆட்டத்தை கையிலெடுத்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தது.

- Advertisement -

வேற இடமே இல்லையா:
குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர்கள் அசாத் சபிக் 114 ரன்களும் இமாம்-உல்-ஹக் 121 ரன்களும் விளாசி 225 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில் அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் தனது பங்கிற்கு சதமடித்து 136 ரன்கள் குவித்தார். இருப்பினும் முகமத் ரிஸ்வான் 29, ஷகீல் 29, அசார் அலி 27 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி இங்கிலாந்து அசத்தியதால் 3வது நாள் ஆட்டநேர முடிவில் 499/7 ரன்கள் எடுத்துள்ள பாகிஸ்தான் இன்னும் 158 ரன்கள் பின்தங்கியுள்ளது.

முன்னதாக இப்போட்டி நடைபெறும் ராவல்பிண்டி பிட்ச்சில் வேகம், பவுன்ஸ், சுழல் என எதுவுமே கை கொடுக்காமல் தார் ரோடு போல சீராக வேகத்தில் இருப்பது அனைவரையும் கடுப்பாக வைத்து பாகிஸ்தான் வாரியத்தை தாறுமாறாக கலாய்க்க வைத்தது. அந்த நிலையில் எதற்குமே கை கொடுக்காத பிட்ச்சில் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் இங்கிலாந்து பந்தை தேய்ப்பதற்காக பயன்படுத்திய விதம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஏனெனில் நடுமண்டையில் வழுக்கையை கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜாக் லீச் தலையில் பக்கவாட்டு பகுதிகளில் முற்களைப் போல் உள்ள லேசான முடியை பயன்படுத்தி நட்சத்திர வீரர் ஜோ ரூட் பந்தை தேய்த்து மற்றொரு வீரர் ஓலி ராபின்சனிடம் வழங்கினார்.

- Advertisement -

கிரிக்கெட்டில் காலம் காலமாக இருந்து வந்த சலிவாவை பயன்படுத்தி பந்தை தேய்க்கும் முறைக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டதால் சமீப காலங்களாகவே வியர்வை மற்றும் ஜெர்ஸியை பயன்படுத்தி வீரர்கள் பந்தை தேய்த்து வருகிறார்கள். அந்த நிலைமையில் முற்றிலும் புதுமையாக தலையில் இருக்கும் முடியை பயன்படுத்தி இங்கிலாந்து வீரர்கள் பந்தை தேய்த்தது அனைத்து ரசிகர்களையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது. அதை விட அந்த தருணத்தை தொலைக்காட்சியில் வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் “தனது தலையும் வழுக்கையாக இருப்பதால் தயவு செய்து அதே யுக்தியை தம்மிடம் பயன்படுத்தலாம் என்று நினைக்காதீர்கள்” என அருகிலிருந்த மற்றொரு முன்னாள் வீரர் டேவிட் கோவரிடம் வெளிப்படையாக தெரிவித்தது மேலும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

அப்படி கலகலப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியில் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்தாலும் பவுலர்கள் சரியான அடி வாங்கி வருகிறார்கள். இன்னும் 2 நாட்கள் எஞ்சியிருக்கும் இபோட்டியில் தற்போதைய நிலைமையை பார்க்கும் போது டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் இங்கிலாந்து வெல்வதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

Advertisement