இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுத்த டாப் 3 நேபாள் வீரர்களுக்கு – விருது வழங்கிய பாண்டியா, கோலி, டிராவிட்

- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் நேபாளை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நேபாள் 48.5 ஓவரில் 230 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆசிப் ஷேக் 58 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதை தொடர்ந்து பேட்டிங்கை இந்தியா துவக்கிய போது மழை வந்ததால் 23 ஓவரில் 145 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக 74* (59) ரன்களும் சுப்மன் கில் 67* ரன்களும் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் நேபாள் இத்தொடரிலிருந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. இருப்பினும் கிரிக்கெட்டில் கத்துக்குட்டியாக அறியப்படும் நேபாள் ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக இந்த போட்டியில் தான் இந்தியாவை எதிர்கொண்டது.

- Advertisement -

பாராட்டிய இந்திய அணி:
அதில் முதலாவதாக பேட்டிங் செய்த அந்த அணி இந்தியாவின் பந்து வீச்சுக்கு 20 ஓவர்கள் கூட தாக்கு பிடிக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்திலேயே இந்திய ஃபீல்டர்கள் கோட்டை விட்ட கேட்ச்களை பயன்படுத்தி 62 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய நேபாள் 49 ஓவர்கள் வரை போராடி 230 என்ற நல்ல ஸ்கோரை எடுத்தது. அந்த வகையில் கத்துக்குட்டியாகவே இருந்தாலும் டாப் அணியான இந்தியாவுக்கு சவாலை கொடுத்த அந்த அணியை இந்திய ரசிகர்களை சமூக வலைதளங்களில் பாராட்டினர்.

அதைத்தொடர்ந்து போட்டியின் முடிவில் தங்களுடைய ரோல் மாடல்களாக கருதப்படும் விராட் கோலி, ரோஹித் சர்மா அவர்களுடன் நேபாள் வீரர்கள் புகைப்படம் எடுத்து ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டனர். அதே போல நேற்று பிறந்த நாள் கொண்டாடிய முகமது ஷமிக்கு கேக் வெட்டிய போது நேபாள் வீரர்களையும் இந்திய அணியினர் அழைத்து உபசரித்தனர். இறுதியில் இந்திய அணியினரை தங்களுடைய அணியின் உடைமாற்றம் அறைக்கு அழைத்த நேபாள் பயிற்சியாளர் இப்போட்டியில் அசத்திய டாப் 3 வீரர்களுக்கு 3 சிறப்பு விருதுகளை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

- Advertisement -

அவருடைய கோரிக்கையை ஏற்ற ஹர்திக் பாண்டியா 48 ரன்கள் எடுத்த ஆல் ரவுண்டர் சம்பல் கமிக்கு மெடலை கழுத்தில் மாட்டி கை கொடுத்து பாராட்டினார். அதே போல அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்த ஆசிப் சேக்கிற்கு இந்தியாவின் நட்சத்திரம் விராட் கோலி விருது வழங்கி பாராட்டினார். மேலும் ஃபீல்டிங்கில் அசத்திய திப்பெந்திராவுக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விருது வழங்கினார்.

இதையும் படிங்க: தமிழக வீரர்களுக்கு இடமில்லை – 2023 உ.கோ தொடருக்காக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள 15 பேர் இந்திய அணி – லிஸ்ட் இதோ

அதாவது சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய தங்களுடைய வீரர்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான உத்வேகத்தை கொடுப்பதற்காக இந்த விருதுகளை வழங்கிய நேபாள் பயிற்சியாளர் அதை இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திரங்களின் கையால் கொடுக்க வைத்தது அனைத்து ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement