நான் நம்பர் ஒன் பேட்ஸ்மேனா? இனிமேல் தான் ரொம்ப கஷ்டப்பட போறேன் – வியப்புடன் சூரியகுமார் பேசியது என்ன

Suryakumar YAdav.jpeg
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ள நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக நடைபெறும் கடைசி போட்டியில் வென்று அரை இறுதிக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் வெற்றி நடைக்கு பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் மட்டுமே அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்கள்.

அதிலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடியை துவக்கி தனக்கே உரித்தான சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் விளையாடி வரும் சூரியகுமார் யாதவ் பெர்த் நகரில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி உட்பட இதர பேட்ஸ்மேன்கள் திண்டாடிய போது தனி ஒருவனாக 68 (40) குவித்து இந்தியா 133 ரன்கள் குவிக்க உதவினார். உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து 20 வயதில் அறிமுகமாகும் வீரர்களுக்கு மத்தியில் நீண்ட வருடங்கள் காத்திருந்த அவர் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த ஒன்றரை வருடத்தில் பெரும்பாலான போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்துள்ளார்.

- Advertisement -

சவாலே இனிமேல் தான்:
அதிலும் பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை கடினமான இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேனாக மைதானத்தின் நாலாபுறமும் சுழன்றுடிக்கும் அவர் தொடர்ச்சியாக வெளிப்படுத்திய அற்புதமான செயல்பாடுகளால் குறுகிய காலத்திலேயே பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை முந்தி உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். அதிலும் குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிரான போட்டி துவங்கிய போது அந்த அந்தஸ்தை பெற்ற அவரிடம் போட்டி முடிந்த போது நீங்கள் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக வந்துள்ளீர்கள் என்று செய்தியாளர் சொன்னார். அப்போது அதை அறியாததால் “அப்படியா” என்று பதிலளித்த சூரியகுமார் யாதவ் ரியாக்சன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இது கடந்த ஒரு வருடமாக கடினமாக உழைத்த தன்னுடைய உழைப்பிற்கு கிடைத்த பரிசு என்று தமக்கு தாமே தன்னம்பிக்கை பாராட்டு தெரிவித்த அவர் இனிமேல் இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வது தான் தமக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் நம்பர் ஒன் இடத்திற்கு வந்து விட்டேனா? அது பற்றி எனக்கு தெரியாது. போட்டி முடிந்ததும் என்னுடைய மொபைல் போனை எடுத்த நான் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனுப்பிய செய்திகளை மட்டுமே படித்தேன்”

- Advertisement -

“அதற்காக (நம்பர் ஒன் இடம்) நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அது கடின உழைப்பின் வழியில் வந்துள்ளது. இந்த நம்பர் ஒன் இடத்தை அடைவது மிகவும் சுலபமாகும். ஆனால் அதை தக்க வைத்துக் கொள்வது தான் மிகவும் எனக்கு மிகப்பெரிய சவாலாகும். அந்த சவாலில் என்னால் முடிந்த வரை நான் சிறப்பாக செயல்பட முயற்சிக்க உள்ளேன். இந்திய அணி நிர்வாகத்தில் எனக்கு கொடுக்கப்படும் ஆதரவு எனக்கு எப்போதும் மிகப்பெரிய புத்துணர்ச்சியை கொடுக்கிறது”

“ஏனெனில் நான் பேட்டிங் செய்யும் இடத்தில் களமிறங்கும் போதெல்லாம் அதிகப்படியான அழுத்தம் இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அணி நிர்வாகம் எனக்கு பச்சை கொடி காட்டியது போல் ஆதரவு கொடுக்கிறார்கள். அதனால் அவுட்டானாலும் கூட அதைப் பற்றி கவலைப்படாமல் என்னால் பயமின்றி சுதந்திரமாக செயல்பட முடிகிறது. அந்த அணுகு முறையில் 10 போட்டிகளில் 7இல் நான் சிறப்பாக செயல்பட்டால் அதைத் தொடர்ந்து நான் ஏன் பின்பற்றக் கூடாது?” என்று கூறினார்.

Advertisement