என்னய்யா உருட்டு இது? ஸ்டம்ப்பை நொறுக்கி அம்பயரை வெளுத்த ஹர்மன்ப்ரீத் கௌர் – சொதப்பிய இந்தியா, நடந்தது என்ன

Harmanpreet Kaur
- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி அங்கு முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றதால் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி ஜூலை 22ஆம் தேதி டாக்காவில் நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் 225/4 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை சுல்தானா 52 ரன்களும் பர்கனா ஹோய்க் சதமடித்து 7 பவுண்டரியுடன் 107 (160) ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஸ்னே ரனா 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை தொடர்ந்து 226 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஷபாலி வர்மா 4 (3) ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த யாஸ்திகா பாட்டியா 5 (7) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 32/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவுக்கு மறுபுறம் நிதானமாக ரன்களை குவித்த நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனாவும் அடுத்து வந்த ஹர்லின் தியோல் ஜோடி சேர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

சொதப்பிய இந்தியா:
குறிப்பாக 6வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் 29வது ஓவர் வரை நிலைத்து நின்று 3வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் மீண்டெழுந்த இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்போது மந்தனா 5 பவுண்டரிகளுடன் 59 (85) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 14 (21) ரன்கள் எடுத்திருந்த போது எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஆனால் அந்தப் பந்து தம்முடைய பேட் பட்டதால் அவுட்டில்லை என்று உறுதியாக இருந்த அவர் நடுவர் அவுட் கொடுத்ததால் ஸ்டம்ப் மீது அடித்து கோபத்தை வெளிப்படுத்தி திட்டிக்கொண்டே சென்றார்.

அப்போது அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிகஸ் நங்கூரமாக பேட்டிங் செய்த நிலையில் எதிர்புறம் அரை சதம் கடந்த ஹர்லின் தியோல் 9 பவுண்டரியுடன் 77 (108) ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டாகி சென்றது போட்டியில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. ஏனெனில் அதே ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் எடுக்க முயற்சித்த ஜெமிமா தப்பு கணக்கு போட்டதால் அடுத்ததாக வந்த தீப்தி சர்மா 1 ரன்னில் ரன் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

அதை விட அடுத்ததாக வந்த அம்ஜோட் கௌர் 10 ரன்னில் அவுட்டாக ஸ்னே ரனா, தேவிகா வைத்யா ஆகியோர் டெயில் எண்டர்கள் என்பதற்கு மிகச்சிறந்த அடையாளமாக அடுத்தடுத்த ஓவர்களில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் கடைசியாக வந்த மேக்னா சிங் 49வது ஓவரில் பவுண்டரி அடித்ததால் வெற்றியை நெருங்கிய இந்தியாவுக்கு கடைசி ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதிலும் முதல் பந்தில் சிங்கிள் எடுத்த மேக்னா வெற்றியை உறுதி செய்தார் என்று சொல்லலாம்.

ஏனெனில் அடுத்ததாக 33* ரன்களுடன் இருந்த ஒரே பேட்டிங் வீராங்கனையான ஜெமிமா ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கொஞ்சம் கூட பொறுப்பை வெளிப்படுத்தாத அவர் என்னமோ எதிரில் மந்தனா இருப்பது போல் கூலாக சிங்கிள் எடுத்ததால் ஸ்கோர் சமமானது. ஆனால் 3வது பந்தில் மேக்னா கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததால் ஒரு கட்டத்தில் 191/4 என்ற நல்ல நிலைமையில் இருந்த இந்தியா 225 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெற்றியையும் கோட்டை விட்டது.

சரி அப்போது சூப்பர் ஓவர் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போட்டியின் துவக்கத்தில் மழை வந்து தாமதம் ஏற்பட்டதால் போட்டி நேரம் முடிந்த காரணத்தால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் அமைந்தது. ஏனெனில் சூப்பர் ஓவர் நடத்துவதற்கு வெறும் 10 – 20 நிமிடங்கள் போதுமானது என்ற நிலையில் என்னய்யா புது உருட்டா இருக்கு என்று இந்திய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

அத்துடன் கடைசியில் மேக்னா எட்ஜ் கொடுக்கவில்லை என்று அதிருப்தியை தெரிவித்ததால் அடுத்த முறை வங்கதேசத்துக்கு வரும் போது நடுவர்களுக்கு எதிராகவும் நாங்கள் விளையாட கற்றுக்கொள்ள வேண்டும் என கேப்டன் ஹர்மன்பிரீத் போட்டியின் முடிவில் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement