வீடியோ : கப் எங்களுக்கு தான் – ஜாலியாக சைக்கிள் ரெய்டில் வந்த பாண்டியாவிடம் இப்போதே சவால் விட்ட வில்லியம்சன், விவரம் இதோ

Hardik Pandya Kane Williamson
Advertisement

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்ற முடிந்த 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் நாக் அவுட் சுற்றில் வழக்கம் போல சொதப்பி பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இத்தொடரில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் போன்ற ஒரு சிலரை தவிர்த்து கேப்டன் ரோகித் சர்மா உட்பட பெரும்பாலான சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் காலம் கடந்த அவர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அடுத்த உலக கோப்பைக்கு முன்பாக புதிய அணியை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் குவிந்துள்ளன.

Pandya-and-Williamson

அந்த நிலையில் ஏமாற்றமான உலகக் கோப்பைக்கு பின் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் நாடு திரும்பிய நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் பக்கத்தில் இருக்கும் நியூசிலாந்துக்கு பயணித்துள்ள இந்தியா அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. குறிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை போலவே பெரும்பாலும் இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ள இந்த தொடரிலிருந்து 2024 டி20 உலக கோப்பையை வெல்லும் பயணத்தில் இந்தியா களமிறங்குவதாக நம்பப்படுகிறது. ஏனெனில் இத்தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா வரும் காலங்களில் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகின்றன.

- Advertisement -

சூப்பர் சவால்:

இதை தொடர்ந்து வலுவான நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் இந்தியா நவம்பர் 18ஆம் தேதியன்று முதல் டி20 போட்டியில் விளையாடுகிறது. அதற்கு முன்பாக இரு நாடுகளைச் சேர்ந்த கேப்டன்கள் கேன் வில்லியம்சன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இத்தொடருக்கான கோப்பையை அறிமுகப்படுத்தி பேசினார்கள். அதற்காக முதல் போட்டி நடைபெறும் வெலிங்டன் நகரில் இருக்கும் கடற்கரைக்கு 2 பேர் அமரக்கூடிய மிதிவண்டியில் இருவரும் ஜாலியாக ரெய்டில் வந்து இறங்கினார்கள். அதைத்தொடர்ந்து இருவரும் கூலாக கோப்பையை பிடித்தவாறு கேமராக்களுக்கு போஸ் கொடுக்க முயற்சித்தார்கள்.

INDvsNZ

ஆனால் பொதுவாகவே நியூசிலாந்து நாட்டில் எப்போதுமே காற்றின் வேகம் சற்று அதிகப்படியாக இருக்கும். அதிலும் கடற்கரை ஓரத்தில் நின்று போஸ் கொடுக்க தயாரான போது அவர்களுக்கு முன்பாக ஒரு சிறிய அட்டை வடிவிலான பெட்டியின் மேல் இந்த டி20 தொடருக்கான வெற்றிக் கோப்பை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த சமயம் பார்த்து அதிகப்படியான காற்று அடித்ததால் அட்டைப்பெட்டியும் கோப்பையும் காற்றில் பறக்க துவங்கியது. அந்த நொடி பொழுதில் கச்சிதமாக செயல்பட்ட நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கோப்பையை லாவகமாக கீழே விடாமல் கையில் பிடித்து “சொந்த மண்ணில் கோப்பை எங்களுக்கே” என்ற வகையில் சிரித்துக் கொண்டே விளையாட்டாக பேசினார்.

- Advertisement -

மறுபுறம் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா அட்டைப்பெட்டியை காற்றில் பறக்க விடாமல் பாதுகாப்பாக பிடித்து கேன் வில்லியம்சன் சொன்னதை கேட்டு புன்னகைத்தார். அதைத்தொடர்ந்து இருவரும் கோப்பையை பிடித்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள். ஒருவேளை இத்தொடரின் இறுதியிலும் இதே போல நியூஸிலாந்து சொந்த மண்ணில் சவாலாக செயல்பட்டு கோப்பையை வெல்லுமா அல்லது இந்தியா அதற்கு களத்தில் சிறப்பாக செயல்பட்டு பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

முன்னதாக இந்த 2 கேப்டன்களில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் கூட அதிரடியாக செயல்பட்டு தற்சமயத்தில் நல்ல பார்மில் உள்ளார். ஆனால் எல்போ காயத்தால் சமீப காலங்களாகவே ரன்களை குவிக்க தடுமாறும் கேன் வில்லியம்சன் பாகிஸ்தானுக்கு எதிரான மெதுவாக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

அதனால் அவர் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலக வேண்டுமென்ற கோரிக்கைகள் அந்நாட்டில் எழுந்துள்ளன. இருப்பினும் ஏற்கனவே ட்ரெண்ட் போல்ட் போன்ற முக்கிய வீரர்கள் பணத்திற்கு மதிப்பளித்து மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகி விட்டதால் இவரையும் நீக்கி அணியை பலவீனப்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்துடன் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement