பரபரப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 356/2 ரன்கள் குவித்தது. குறிப்பாக கடந்த போட்டியில் சவாலை கொடுத்த சாகின் அப்ரிடி போன்ற பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்ட கேப்டன் ரோஹித் சர்மா 56 ரன்களும் 58 ரன்களும் எடுத்தனர்.
இருப்பினும் அவர்களுக்குப் பின் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் பேட்டிங் செய்ய வந்த போது வந்த மழை மீண்டும் போட்டியை ரத்து செய்தது. ஆனாலும் ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டிருந்ததால் செப்டம்பர் 11ஆம் தேதி மீண்டும் நடைபெற்ற போட்டியில் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் பாகிஸ்தான் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறி கடைசி வரை அவுட்டாகாமல் 3வது விக்கெட்டுக்கு 233 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தினர்.
மிரட்டல் பவுலிங்:
அதில் விராட் கோலி சதமடித்து 122* (94) ரன்கள் விளாச காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய கேஎல் ராகுல் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சதமடித்து 111* (106) ரன்கள் விளாசி கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அதைத்தொடர்ந்து 357 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே தடுமாற்றமாக செயல்பட்ட இமாம்-உம்-ஹக் 5வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ராவின் ஸ்விங் பந்தின் லைனை தவறாக கணித்து 8 ரன்களில் எட்ஜ் வாங்கி சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர்.
அந்த நிலைமையில் வந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 2 பவுண்டரியை அடித்து 10 ரன்களுடன் நல்ல துவக்கத்தை பெற்றார். ஆனால் பவர் பிளே முடிந்ததும் வந்த ஹர்திக் பாண்டியா 11வது ஓவரின் முதல் 3 பந்துகளில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசி வந்தார். அதை சிறப்பாக எதிர்கொள்ள தவறிய பாபர் அசாம் 3 பந்துகளிலும் ரன்கள் எடுக்கவில்லை.
அதனால் அழுத்தமும் ஏற்பட்ட நிலையில் திடீரென 4வது பந்தை பிட்ச் செய்த பின் உள்ளே கொண்டு சென்ற பாண்டியா அவரை கிளீன் போல்ட்டாக்கினார். மறுபுறம் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் பாபர் அசாம் தம்முடைய தடுப்பையும் உடைத்து பாண்டியா கிளீன் போல்டாக்கியதை நம்ப முடியாமல் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
அதனால் 44/2 என்ற தடுமாற்றுமான துவக்கத்தை பெற்ற பாகிஸ்தானுக்கு களத்தில் பகார் ஜமான் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் விளையாடி வரும் நிலையில் மழை மீண்டும் வந்தது. அந்த நிலைமையில் 11 ஓவர்கள் விளையாடி முடித்துள்ள பாகிஸ்தான் இன்னும் 9 ஓவர்களை விளையாடி முடித்து விட்டால் மழை வந்தாலும் டிஎல்எஸ் முறைப்படி இந்தியா வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.