
ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 2007க்குப்பின் 15 வருடங்களாக 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் தங்களுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தனர். அக்டோபர் 23ஆம் தேதியன்று உலகப்புகழ் பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித், ராகுல், சூரியகுமார் என 3 முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர்.
அதனால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவின் கதை முடிந்ததாக இந்திய ரசிகர்கள் கவலையடைந்த போது நாங்கள் இருக்கிறோம் என்ற வகையில் நங்கூரத்தை போட்ட விராட் கோலி – ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் செயல்பட்டு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மூழ்கிய இந்தியாவை தூக்கி நிறுத்தினார்கள். அதில் 40 (37) ரன்கள் குவித்த பாண்டியா கடைசி ஓவரில் அவுட்டான நிலையில் ஃபினிஷிங் செய்ய வேண்டிய தினேஷ் கார்த்திக்கும் பதற்றத்தால் ஆட்டமிழந்தார். அதனால் ஏற்பட்ட பரபரப்பில் பதற்றமடையாத ரவிச்சந்திரன் அஷ்வின் அதே ஒய்ட் வலையில் சிக்காமல் கடைசி பந்தை தூக்கி அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
கலங்கிய கம்பீர்:
இந்த வெற்றியில் அனைவரும் முக்கிய பங்காற்றினாலும் ஒரு கட்டத்தில் கதை முடிந்ததாக கருதப்பட்ட போது காலத்திற்கும் மறக்க முடியாத அளவுக்கு அசாத்தியமான இன்னிங்சை விளையாடி 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82* (53) ரன்கள் குவித்து அசாத்தியமான வெற்றியைப் பெற்றுக்கொடுத்த விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்று இந்திய ரசிகர்களை தலைநிமிர வைத்து தீபாவளி பரிசளித்தார். அதே வெற்றியால் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தமது தலைமையிலான இந்திய அணியை முதல் முறையாக தோற்கடித்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த அவர் பழி தீர்த்தார்.
அப்படி பரபரப்பாக நடைபெற்ற அப்போட்டியில் இந்த உலகக் கோப்பையை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் ஹிந்தி சேனலில் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் வர்ணனையாளராக செயல்பட்டார். குறிப்பாக இந்த போட்டியின் கடைசி நேரத்தில் ஆகாஷ் சோப்ரா மற்றும் சஞ்சய் பங்கர் ஆகியோருடன் இணைந்து வர்ணனை செய்த அவர் கடைசி நேரத்தில் பாண்டியா, கார்த்திக் ஆகியோர் அவுட்டானதால் விராட் கோலி இருந்தும் கதை முடிந்து போனதாக நினைத்து பேச வார்த்தைகள் இல்லாமல் வர்ணனை செய்வதை நிறுத்தி விட்டார்.
அதைவிட பொதுவாகவே உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத அவர் கார்த்திக் அவுட்டானதும் அடுத்த பந்தை விராட் கோலி எதிர்கொள்ள முடியாது என்பதால் இந்தியாவின் தோல்வி உறுதியென்று முடிவு செய்து கண்ணீர் விட்டு அழுது அதை கைகளால் துடைத்தார். அப்போது ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை விடாமல் எழுந்து நின்று இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்து வர்ணனை செய்த நிலையில் அஷ்வின் எப்படி அடிக்கவேண்டும் என்று வர்ணனை செய்தார். அந்த பரபரப்பில் ஒய்ட் வலையில் சிக்காமல் ஒரு எக்ஸ்டார் ரன்னையும் பந்தையும் அஷ்வின் பெற்ற போது லேசாக புன்னகைத்த கம்பீர் அடுத்த பந்தை தூக்கி அடித்த பின்பு தான் முழுமையாக சிரித்து கை தட்டினார்.
நேரலையில் வர்ணனையாளர்கள் பேசுவது மட்டுமே நமக்கு கேட்கும் என்ற நிலையில் போட்டி முடிந்த பின் கடைசி நேர பரபரப்பில் வர்ணனையாளர்களின் ரியாக்சன் பற்றிய இந்த வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டு பின்னர் டெலிட் செய்து விட்டது. ஆனால் அதை கச்சிதமாக படம் பிடித்த சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றியதால் கவுதம் கம்பீரின் இந்த உணர்ச்சி மிகுந்த செயல் அனைவருக்கும் தெரிந்தது. இருப்பினும் கூட போட்டி முடிந்த பின் அனைவரும் விராட் கோலி மற்றும் அஸ்வினை சமூக வலைதளங்களில் கொண்டாடிய நிலையில் இவர் மட்டும் அவர்களது பெயரை ஒரு வார்த்தை கூட குறிப்பிடாமல் இந்தியா மட்டும் வென்றதாக பாராட்டியது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.