ஐக்கிய அரபு நாடுகளில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022 தொடரில் செப்டம்பர் 4 ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 2வது சூப்பர் 4 போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 181/7 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு 54 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் தலா 28 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அந்த நிலைமையில் மிடில் ஆர்டரில் வந்த சூர்யகுமார் யாதவ் 12, ரிஷப் பண்ட் 14 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா டக் அவுட்டாகி மாபெரும் அதிர்ச்சி கொடுத்தார். அந்த சமயத்தில் வந்த தீபக் ஹூடாவும் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மறுபுறம் 3வது இடத்தில் களமிறங்கி சிம்ம சொப்பனமாக நின்ற நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தன்னுடைய விமர்சனங்களை தூளாக்கும் வகையில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் கடந்து 60 (44) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் ரவி பிஷ்னோய் 8* (2) ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சடாப் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
போராடி தோல்வி:
அதை தொடர்ந்து 182 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் ஆரம்பத்திலேயே 14 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த பகார் ஜமான் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும் 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த முகமது நவாஸ் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 42 (20) ரன்களிலும் அடுத்த ஓவரிலேயே அவருடன் ஜோடி சேர்ந்து அசத்திய தொடக்க வீரர் முகம்மது ரிஸ்வான் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 71 (51) ரன்களை விளாசி அவுட்டானார்கள்.
அப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்காக கடைசி நேரத்தில் இந்தியா போராடினாலும் குஷ்தில் ஷா 14* (11) ரன்களும் ஆசிப் அலி 16 (8) ரன்களும் எடுத்து 19.5 ஓவரில் 182/5 ரன்களை எடுக்க வைத்து பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தனர். அதனால் இந்த தொடரில் லீக் சுற்றில் தோல்வியை பரிசளித்த இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்த அந்த அணி சூப்பர் 4 சுற்றை வெற்றியுடன் துவக்கியுள்ளது.
மறுபுறம் பேட்டிங்கில் 200 ரன்கள் எடுக்க தவறிய இந்தியா பந்துவீச்சில் மிடில் ஆர்டரில் விக்கெட்டுக்களை எடுக்கத் தவறி கடைசி நேரத்தில் மொத்தமாக சொதப்பி போராடி தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான எஞ்சிய சூப்பர் 4 போட்டியில் வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையும் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
இப்போட்டியில் வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்திய கடைசிநேர 15 – 20 ரன்களை அடிக்கக்கூடிய தினேஷ் கார்த்திக்கை கழற்றிவிட்டது, 19வது ஓவரில் அனுபவத்தை காட்டாமல் 19 ரன்களை புவனேஸ்வர் குமார் வாரி வழங்கியது போன்ற அம்சங்கள் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. ஆனால் அதைவிட வெறும் 0 ரன்களில் இருந்த ஆசிப் அலி ரவி பிஷ்னோய் வீசிய 18வது ஓவரில் கொடுத்த அழகான கேட்ச்சை தேர்ட் மேன் திசையில் நின்று கொண்டிருந்த இளம் இந்திய வீரர் அர்ஷிதீப் சிங் கோட்டை விட்டது தோல்விக்கு மிகமிக முக்கிய காரணமானது.
எளிதான கேட்ச்:
ஏனெனில் அதன்பின் 2 பவுண்டரி 1 சிக்ஸரை பறக்க விட்டு 16 (8) ரன்கள் விளாசிய அவர் அதற்கான தண்டனையை உடனுக்குடன் கொடுத்தார். அப்படி பரபரப்பான நேரத்தில் வெற்றியை தீர்மானித்த அந்த கேட்ச்சை கோட்டை விட்டதால் கோபமடைந்த ரோகித் சர்மா கொந்தளித்தது போலவே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.
அதிலும் பாகிஸ்தானின் 12வது வீரராக செயல்பட்டார் என்று பெரும்பாலான ரசிகர்கள் அதிருப்தியுடன் கலாய்க்கும் நிலையில் சில ரசிகர்கள் அவரை கடும் சொற்களால் திட்டித் தீர்க்கிறார்கள்.
இதையும் படிங்க : IND vs PAK : 7 வருடங்கள் கழித்து தோற்ற இந்தியா – முடிவுக்கு வந்த அதிர்ஷ்ட தேவதையின் வெற்றிநடை, ரசிகர்கள் வேதனை
விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்ற நிலைமையில் கேட்ச்சை கோட்டை விட்டாலும் கடைசி ஓவர் உட்பட 3.5 ஓவரில் 1 விக்கெட்டை எடுத்து 27 ரன்களை மட்டும் கொடுத்து பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட அரஷ்தீப் சிங்க்கு நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இளம் வீரராக இருக்கும் அவர் இதுபோன்ற தோல்வி படங்களால் தான் தரமான வீரராக உருவாக்க முடியும் என்றே கூறலாம்.