ஓவரா சிரிக்காதிங்க, ரிக்கி பாண்டிங்கை நேரலையில் கலாய்த்த டிகே – கணிப்பு நிஜமானதால் ரசிகர்கள் வியப்பு

Dinesh Karthik 2
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதி வந்த வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 டெஸ்ட் தொடர் கடந்த ஒரு மாதமாக டி20 போட்டிகளுக்கு நிகரான த்ரில்லர் தருணங்களை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்து 2 – 2 (5) என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றாலும் 3வது போட்டியில் வென்று இங்கிலாந்து பதிலடி கொடுத்தது. அதே போல 4வது போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு போராடிக் கொண்டு வந்த வெற்றியை மழை தடுத்ததால் டிராவில் முடிந்தது.

அதனால் நடப்பு சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா கோப்பையை தக்க வைத்துக் கொண்ட நிலையில் லண்டனில் நடைபெற்ற கடைசி போட்டியில் தோல்வியை தவிர்க்க நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு 49 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. அதன் காரணமாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தாலும் 2001க்குப்பின் 21 வருடங்களாக சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை காப்பாற்றிய இங்கிலாந்து இத்தொடரை சமன் செய்தது.

- Advertisement -

கலாய்த்த டிகே:
முன்னதாக இப்போட்டியில் 384 ரன்கள் துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா 72 ரன்களும் டேவிட் வார்னர் 60 ரன்களும் எடுத்து 140 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான துவக்கம் கொடுத்ததால் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் காரணமாக மகிழ்ச்சியடைந்த ஆஸ்திரேலிய ரசிகர்களைப் போலவே வர்ணனையாளர்களாக செயல்பட்ட முன்னாள் கேப்டன்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் மார்க் டெய்லர் ஆகியோர் இங்கிலாந்து தோல்வியடையப் போகிறது என்பதை நினைத்து ஆனந்தமாக பேசிக் கொண்டிருந்தனர்.

குறிப்பாக ஓய்வு அறிவித்த ஸ்டுவர்ட் ப்ராட் தம்முடைய கடைசி போட்டியில் தோல்வியுடன் விடைபெற வேண்டிய பரிதாப நிலைமை ஏற்படப்போகிறது என்று அவர்கள் நேரலையில் பேசினர். அப்போது அவர்களுடன் வர்ணனையாளர்களாக செயல்பட்ட இந்தியாவைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் வெற்றி பெறுவதற்கு முன்பாக கொண்டாடுவது தோல்வியை கொடுக்கும் என்பதை அவர்களது வழியிலேயே சுட்டிக்காட்டினார்.

- Advertisement -

குறிப்பாக கடந்த 2005இல் இதே இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் 4வது போட்டியில் 546 ரன்களை சேசிங் செய்த இங்கிலாந்துக்கு பாண்டிங் – ஹசி ஆகியோர் 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து டாப் ஆர்டரில் மிகச்சிறந்த துவக்கத்தை கொடுத்தனர். அதனால் ஆஸ்திரேலியா உலக சாதனை வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 66 ரன்கள் எடுத்திருந்த ரிக்கி பாண்டிங்கை முக்கிய தருணத்தில் ஆண்ட்ரூ பிளின்ஃடாப் ரன் அவுட் செய்தார். அதனால் ஹசி 121* ரன்கள் எடுத்தும் இறுதியில் 197 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா 2 – 1 (5) என்ற கணக்கில் அந்த தொடரையும் இழந்தது.

அந்த தருணத்தை ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிர்வாகத்திடம் கேட்டு வாங்கி ஒளிபரப்பிய தினேஷ் கார்த்திக் சில ஆஷஸ் தொடர்களுக்கு முன்பாக நடைபெற்றதை நினைத்துப் பாருங்கள் என்று ரிக்கி பாண்டிங் மற்றும் மார்க் டைலர் ஆகியோரை கலாய்த்தது பேசியது பின்வருமாறு. “இங்குள்ள 2 ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களும் ஆஸ்திரேலியா எவ்வளவு சிறப்பாக வெற்றியை நோக்கி செல்கிறது என்பதை பற்றி ஆனந்தமாக பேசுகின்றனர். அவர்களுக்கு சில ஆஷஸ் தொடர்களுக்கு முன்பாக நடந்த இதோ ஒரு தருணம்”

- Advertisement -

“இதற்கு முன் ஹசி – பாண்டிங் ஜோடி 127 ரன்களை சேர்த்தனர். ஆனால் அதன் பின் என்ன நடந்தது என்பதை பாண்டிங் விளக்குவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் அப்போட்டியுடன் தொடரையும் இழந்தனர்” என்று கூறினார். அதற்கு “ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அடுத்த வருடமும் வர்ணனையாளராக ஒப்பந்தமாவதற்கு தேவையான வேலைகளை தினேஷ் கார்த்திக் சரியாக செய்கிறார். அவரை இங்கேயே வைத்துக் கொள்ளுங்கள் ஸ்கை பாக்ஸ். நல்ல வேலை செய்தீர்கள் டிகே. அவர் ஆஸ்திரேலியர்களை கெட்டவர்களைப் போல் காட்டி இங்கிலாந்தினரிடம் பாராட்டுகளைப் பெறுகிறார்” என்று ரிக்கி பாண்டிங் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

இதையும் படிங்க:ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வழங்கப்பட்ட பதவியால் அதிருப்தியடைந்த சஞ்சு சாம்சனின் ரசிகர்கள் – காரணம் என்ன?

அதே போல ஒரே நாள் இரவில் நீங்கள் இங்கிலாந்தினராக மாறிவிட்டீர்கள் என்று அவருக்கு மார்க் டெய்லரும் கலகலப்பான பதிலளித்தார். இறுதியில் தினேஷ் கார்த்திக் கணித்தது போலவே சொதப்பிய ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கும் ஆச்சர்யமாக அமைந்தது.

Advertisement