IND vs SA : கேப்டன் ரோஹித் சர்மாவை தாறுமாறாக கலாய்த்த டிகே – பிணைப்பை பார்த்து ரசிகர்கள் நெகிழ்ச்சி, 2 வைரல் வீடியோ உள்ளே

Dinesh Karthik Rohit Sharma
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்ற இந்தியா வரலாற்றில் முதல் முறையாக அந்த அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டி20 தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த ஒரு வருடமாக ரோஹித் சர்மா தலைமையில் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் ஒன் 20 அணியாக முன்னேறிய இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்று பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் அதிலிருந்து மீண்டெழுந்து டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தற்போது தென் ஆப்பிரிக்காவையும் சாய்த்துள்ள இந்தியா மீண்டும் வெற்றிப் பாதையில் பயணித்து உலகக் கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட தயாராகியுள்ளது.

முன்னதாக ஒரு கட்டத்தில் இந்திய கேரியர் முடிந்து விட்டதாக கருதப்பட்ட தமிழக மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் தம்மால் உலகக் கோப்பையில் விளையாட முடியும் என்ற நம்பிக்கையுடன் கடினமாக உழைத்து ஐபிஎல் 2022 தொடரில் அசத்தலாக செயல்பட்டு 3 வருடங்கள் கழித்து இந்திய அணியில் கமபேக் கொடுத்தார். அதில் கிடைத்த வாய்ப்புகளில் அற்புதமாக செயல்பட்டு 37 வயதுக்குப்பின் அதிக ரன்கள் மற்றும் 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் போன்ற சாதனைகளை படைத்த அவர் சிறந்த பினிஷராக அசத்தினார்.

- Advertisement -

கேப்டனின் நம்பிக்கை:
ஆனாலும் சூரியகுமார், பாண்டியா ஆகியோரும் ஃபினிஷிங் செய்வார்கள் என்பதால் அந்த வேலைக்காக மட்டும் அவரை உலகக் கோப்பையில் தேர்வு செய்யக் கூடாது என கம்பீர், ஸ்ரீகாந்த் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அந்த நிலையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பையில் அவரை நம்பாமல் சூப்பர் 4 சுற்றில் கழற்றிவிட்ட கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 2வது போட்டியில் அனைவரும் தடுமாறியபோது தாம் சிறப்பாக செயல்பட்டு உறுதி செய்த வெற்றியை 2 பந்துகளில் பினிஷிங் செய்த தினேஷ் கார்த்திக் திறமையை உணர்ந்த ரோகித் சர்மா உலகக் கோப்பைக்கு முன்பாக அவருக்கு தேவையான வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

அதன் காரணமாகவே இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் 4வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பையும் அவர் கொடுத்தார். அதில் தொடக்க வீரராக ரிஷப் பண்ட், 5வது இடத்தில் சூர்யாகுமாரை களமிறக்கிய சோதனை முயற்சிகள் பலனளிக்காத நிலையில் 4வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பைப் பெற்ற தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 46 (21) ரன்களை 219.05 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து கேப்டனின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டு தம்மால் அனைத்து சூழ்நிலைகளிலும் அசத்த முடியும் என்று நிரூபித்தார்.

- Advertisement -

நெகிழ்ச்சியான பிணைப்பு:
அப்படி நம்பிக்கையைப் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக்கிடம் ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சத்தமாக அப்பீல் செய்யாத காரணத்தால் தாடையை பிடித்து கோபத்துடன் ரோகித் சர்மா நடந்து கொண்டது அனைவரையும் அதிருப்தியடைய வைத்தது. ஆனால் முடிவில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வென்றபோது அத்தொடரில் வேறு எந்த இளம் இந்திய வீரரும் அறிமுகமாகாத காரணத்தால் 37 வயதிலும் இளம் வீரரைப் போல அசத்தும் தினேஷ் கார்த்திக்கிடம் வாங்க மறுத்தும் கோப்பையை கொடுத்த ரோகித் சர்மாவின் செயல் அனைவரின் பாராட்டுகளை பெற்றது.

அந்த வகையில் இவர்களுக்கிடையே நல்ல நட்பு உருவாகியுள்ள நிலையில் நேற்றைய போட்டி முடிந்ததும் ரோஹித் சர்மாவை ஏதோ ஒரு காரணத்தை வைத்து கலாய்க்கும் வகையில் தினேஷ் கார்த்திக் பேசியதாக தெரிகிறது. ஆனாலும் அதை மறுக்கும் வகையில் ரோகித் சர்மா பேசினாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் மீண்டும் கலாய்ப்பது போல் பேசியக் தினேஷ் கார்த்திக் பள்ளி மாணவர்களைப் போல அவரை மேலும் மேலும் கிண்டலடித்து கைதட்டி விழுந்து சிரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதேபோல் தென் ஆப்பிரிக்கா வென்றதும் மைதானத்திற்குள் நுழைந்த ரோகித் சர்மாவை ‘கமான் ரோஹித்” என்ற வகையில் கைதட்டி கிண்டலடிக்கும் வகையில் வரவேற்ற தினேஷ் கார்த்திக் முதுகின் மீது ரோகித் சர்மா நட்பாக ஒரு அடி வைத்த வீடியோவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 2007 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியிலிருந்து இப்போதும் விளையாடும் 2 வீரர்களாக காலத்தை கடந்து மூத்த வீரர்களாக செயல்படும் இவர்களுக்கிடையே இப்படி அற்புதமான பிணைப்பு இருப்பது பார்க்கும் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைக்கிறது.

Advertisement