வீடியோ : கேட்ச், ரன் அவுட் எல்லாம் மிஸ் – காமெடி செய்த டெல்லி – 4 அல்வா அதிர்ஷ்ட சான்ஸ் கிடைத்தும் சொதப்பிய பஞ்சாப்

- Advertisement -

உச்சகட்ட பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 17ஆம் தேதி அழகான தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற 64வது லீக் போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 213/2 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 94 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் வார்னர் 46 (31) ரன்களும் நீண்ட நாட்கள் கழித்து வாய்ப்பு பெற்ற பிரிதிவி ஷா அரை சதமடித்து 54 (38) ரன்களும் எடுத்தனர்.

அதை விட கடைசி நேரத்தில் மிரட்டலாக பேட்டிங் செய்த ரிலீ ரோசவ் 6 பவுண்டரி 6 சிஸ்சருடன் 82* (37) ரன்களும் பில் சால்ட் 26* (14) ரன்களும் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்த நிலையில் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஷாம் கரண் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 214 ரன்களை துரத்திய பஞ்சாப்புக்கு ஆரம்பத்திலேயே கேப்டன் சிகர் தவான் கோல்டன் டக் அவுட்டாகிய ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் தடுமாற்றமாக செயல்பட்டு 4 பவுண்டரியுடன் 22 (19) ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

டெல்லியின் காமெடி:
இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த அதர்வா டைட் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் நிதானமாக ரன்களை சேர்த்தனர். அப்போது குல்தீப் யாதவ் வீசிய 8வது ஓவரின் கடைசி பந்தில் லிவிங்ஸ்டன் பவுண்டரி அடிக்க முயற்சித்த போதிலும் அது கேட்ச்சாக மாறியது. ஆனால் மிகவும் சரியான உயரத்தில் கொஞ்சம் கூட நகராமல் நின்ற இடத்திலேயே தம்மை நோக்கி வந்த பந்தை தென்னாப்பிரிக்க வீரர் அன்றிச் நோர்ட்ஜெ கோட்டை விட்டது வர்ணனையாளர்களையே கடுப்பாக்கியது.

அத்துடன் மீண்டும் அவர் வீசிய 10வது ஓவரின் 4வது பந்தில் அதர்வா டைட் அதே போல பவுண்டரி அடிக்க முயற்சித்தார். ஆனால் கேட்ச்சாக மாறிய அந்த பந்தை பவுண்டரி எல்லை அருகே நின்று கொண்டிருந்த இளம் இந்திய வீரர் யாஷ் துள் கைகளுக்கு கிடைத்தும் மீண்டும் பிடிக்காமல் நழுவ விட்டது ரசிகர்களை கடுப்பாக்கியது. அதை விட முகேஷ் குமார் வீசிய 11வது ஓவரின் கடைசி பந்தை அடித்த லிவிங்ஸ்டன் சிங்கிள் எடுக்க அழைத்து பின்னர் வேண்டாம் என்று சொன்னார்.

- Advertisement -

ஆனால் சொல்லி முடிப்பதற்குள் எதிர்ப்புறம் அதர்வா டைட் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியே வந்த நிலையில் பந்தை எடுத்த டேவிட் வார்னர் ஸ்டம்ப்பை குறி பார்த்து எரிந்து ரன் அவுட் செய்யும் வாய்ப்பை நழுவ விட்டார். அப்போது பேக்அப் செய்ய ஆள் இல்லாததால் லிவிங்ஸ்டன் மீண்டும் ரன் எடுக்க ஓடிய போது பின்புறத்தில் இருந்த ஃபீல்டர் பந்தை எடுத்து தூக்கி போட்டார். ஆனால் அதை விக்கெட் கீப்பர் பில் சால்ட் சரியாக பிடித்து அடிக்க தவறியதால் லிவிங்ஸ்டன் மீண்டும் தப்பி விட்டார்.

அப்படி அடுத்தடுத்த 3 ஓவர்களில் 4 அல்வா போன்ற வாய்ப்புகள் கிடைக்கும் அதில் ஒன்றில் கூட டெல்லி ஃபீல்டர்கள் பஞ்சாப் வீரர்களை அவுட் செய்யாமல் சொதப்பியது பார்க்கும் ரசிகர்களுக்கு காமெடியை போல் அமைந்தது. அதை தொடர்ந்து 3வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் மெதுவாகவே விளையாடிய அதர்வா டைட் 55 (42) ரன்களில் அணியின் நலனை கருதி ரிட்டையர்ட் அவுட்டாகி செல்ல அடுத்து வந்த ஜித்தேஷ் சர்மா 0, சாருக்கான் 6, சாம் கரண் 11 என முக்கிய லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

இதையும் படிங்க:PBKS vs DC : வெறியுடன் போராடிய லிவிங்ஸ்டன், பஞ்சாப் கனவை சிதைத்து – சிஎஸ்கே’வை குறி வைத்துள்ள டெல்லி

அதனால் மறுபுறம் தனி ஒருவனாக 5 பவுண்டரி 9 சிக்சரை பறக்க விட்டு 94 (48) ரன்கள் விளாசி போராடிய லிவிங்ஸ்டனை கடைசி ஓவரில் அவுட்டாக்கி 20 ஓவரில் பஞ்சாப்பை 198/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெல்லி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு பறி போனாலும் 5வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறியது. ஆனால் அல்வா போன்ற 4 அதிர்ஷ்டம் கிடைத்தும் அதை பயன்படுத்த தவறிய பஞ்சாப் 7வது தோல்வியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 90% நழுவ விட்டது.

Advertisement