வலது கை பேட்ஸ்மேனாக மாறியும் முன்னேறாமல் சொதப்பிய வார்னர் – கலாய்க்கும் ரசிகர்கள், காப்பாற்றிய அக்சர் பட்டேல்

Axar Patel David Warner
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 11ஆம் தேதியன்று நடைபெற்ற 16வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. தங்களுடைய ஆரம்ப கட்ட போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் திண்டாடும் இந்த அணிகள் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்க டெல்லிக்கு 3 பவுண்டரியுடன் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க முயற்சித்த பிரித்வி ஷா 15 (10) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

அந்த நிலையில் களமிறங்கிய மனிஷ் பாண்டே தனது பங்கிற்கு அதிரடியாக விளையாட முயற்சித்தாலும் 5 பவுண்டரியுடன் 25 (18) ரன்களில் ஏமாற்றத்துடன் சென்றார். அதனால் 76/2 ஓரளவு நல்ல நிலையில் இருந்த டெல்லிக்கு மறுபுறம் வழக்கம் போல டேவிட் வார்னர் நங்கூரமாக மெதுவாக பேட்டிங் செய்தார். ஆனாலும் மிடில் ஓவர்களில் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய பியூஸ் சாவ்லா அடுத்து வந்த யாஷ் துள் 2 (4) ரோவமன் போவல் 4 (4) லலித் யாதவ் 2 (4) என 3 முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி போட்டியில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

- Advertisement -

காப்பாற்றிய அக்சர்:
அதனால் 98/5 என திடீரென சரிந்த டெல்லியை அடுத்து களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் அக்சர் பட்டேல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். குறிப்பாக களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் பேட்டை சுழற்றிய அவர் வார்னருடன் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து டெல்லியை மீட்டெடுத்து அரை சதமடித்தார். அதே வேகத்தில் வெளுத்து வாங்கிய அவர் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 54 (25) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

ஆனால் மறுபுறம் மீண்டும் நன்கு செட்டிலாகி கடைசி வரை அதிரடியை துவக்காத வார்னர் அடுத்த சில பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 51 (47) ரன்களில் மீண்டும் ஏமாற்றத்தையும் பின்னடைவையும் கொடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் வேகமாக ரன்கள் எடுக்க முயற்சித்து மடமடவென விக்கெட்டுகளை கொடுத்ததால் 19.4 ஓவரில் டெல்லி 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா மற்றும் ஜேசன் பெரன்ஃடாப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் ரிலீ மெரிடித் 2 விக்கெட்களும் சாய்த்தனர்.

- Advertisement -

முன்னதாக இப்போட்டியில் 8வது ஓவரை வீசிய ரித்திக் சாக்கின் 2வது பந்தில் நோ பால் போட்டார். அதனால் நடுவர் பிரீ ஹிட் கொடுத்த அந்த பந்தை யாருமே எதிர்பாராத வகையில் முழுக்க முழுக்க வலது கை பேட்ஸ்மேனாக மாறி எதிர்கொண்ட டேவிட் வார்னர் சுமாராக அடித்து பவுண்டரியை அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். அதைப் பார்த்த ரசிகர்கள் தயவு செய்து இயற்கையாக வரும் ஸ்டைலை மட்டும் பின்பற்றி அதிரடியாக விளையாட முயற்சிக்குமாறு அதிருப்தியை வெளிப்படுத்தி கலாய்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: IPL 2023 : ஐபிஎல் வரலாற்றின் அருவருப்பான இன்னிங்ஸ், ஸ்கூல் கிரிக்கெட் மாதிரி இருக்கு – கேஎல் ராகுலை விளாசும் முன்னாள் வீரர்

மேலும் இந்த ஐபிஎல் தொடரில் காயமடைந்த ரிசப் பண்ட்டுக்கு பதிலாக டெல்லியின் கேப்டனாக செயல்பட்டு வரும் டேவிட் வார்னர் முதல் 3 போட்டிகளில் இதே போல மெதுவாக பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவிக்காமல் அவுட்டானது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் நிறைய விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக அதிரடியாக விளையாடுங்கள் இல்லையேல் ஐபிஎல் தொடரில் விளையாடாதீர்கள் என்று வெளிப்படையாகவே முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கடுமையாக விமர்சித்தார். அந்த நிலையில் மீண்டும் இப்போட்டியில் அதே போல செயல்பட்ட அவர் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement