ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஜூன் 20ஆம் தேதி பார்படாஸ் நகரில் தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் இந்தியா விளையாடுகிறது. அந்தப் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியினர் அங்குள்ள மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
அங்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் வீரர் சர் வேஸ்லே வின்பீல்ட் ஹால் இந்திய வீரர்களை சந்தித்தார். 1958 முதல் 1969 வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வேகப்பந்து வீச்சாளராக 48 போட்டிகளில் விளையாடிய அவர் 192 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்தார். மேலும் 170 முதல் தர போட்டிகளில் விளையாடி 546 விக்கெட்டுகளையும் எடுத்துள்ள அவர் ஓய்வுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் வாரியத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
கபில் தேவ் போல:
அத்துடன் அரசியலிலும் ஈடுபட்டு பார்படாஸ் சுற்றுலாத்துறை அமைச்சராக செயல்பட்ட அவர் தன்னுடைய வாழ்க்கை அனுபவம் பற்றிய புத்தகத்தை எழுதியுள்ளார். அதை இந்திய அணியை சந்தித்த போது அவர் ரோகித் சர்மா, விராட் கோலி, மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அன்பு பரிசாக வழங்கினார். இந்நிலையில் தம்முடைய காலத்திலிருந்த இந்திய அணி தற்போது பன்மடங்கு உயர்ந்துள்ளதாக வேஸ்லே ஹால் பாராட்டியுள்ளார்.
மேலும் கபில் தேவுக்கு அடுத்தபடியாக ஜஸ்ப்ரித் பும்ரா தமக்கு மிகவும் பிடித்த இந்திய பவுலராக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்ருமாறு. “இந்த வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்ப்பது அற்புதமாக இருக்கிறது. ஆனால் பேட்ஸ்மேன்கள் 20 ஓவர்கள் விளையாடுகிறார்கள் என்பதை நான் விரும்பவில்லை. நவீன கிரிக்கெட்டில் பவுலர்கள் மீது அதிகப்படியான கட்டுப்பாடுகள் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை”
“டி20 கிரிக்கெட்டுக்காக பவுலர்கள் தங்களுடைய கேரியரை குறைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. குறைந்த காலங்களில் அதிக பணத்தை சம்பாதிப்பதால் அவர்கள் நீண்ட காலம் விளையாடுவதில்லை. இந்தியா என்று சொன்னதும் கபில் தேவ் மட்டுமே நீண்ட காலமாக எனக்கு நினைவுக்கு வருவார். ஆனால் தற்போது அனைத்தும் மாறியுள்ளது. தற்போதைய இந்திய அணியின் அட்டாக்கை பாருங்கள்”
இதையும் படிங்க: கேப்டன்சியை மட்டுமல்ல மற்றொரு முக்கிய அதிரடி முடிவை கையிலெடுத்த கேன் வில்லியம்சன் – என்ன தெரியுமா?
“ஜஸ்ப்ரித் பும்ராவை நான் மிகவும் விரும்புகிறேன். அவரைப் போலவே இன்னும் சில வீரர்கள் நன்றாக செயல்படுகின்றனர். அந்த வகையில் இந்தியா நீண்ட தூரத்தை பயணித்து இந்த இடத்தை பிடித்துள்ளது. ராகுல் டிராவிட் கையில் அற்புதமான அணி இருக்கிறது. இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்கள் இருக்கின்றனர்” என்று கூறினார்.



