வீடியோ : தேவையா இது? கொண்டாட்டத்தால் காயமடைந்து சென்ற வார்னர் – உண்மை பின்னணி இதோ

David Warner Injury
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலியா முதல் போட்டியில் வென்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதை தொடர்ந்து டிசம்பர் 26ஆம் தேதியன்று பாக்ஸிங் டே போட்டியாக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 189 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 59 ரன்களும் கெய்ல் வெரின் 52 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 5 விக்கெட்கள் எடுத்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா 1, மார்னஸ் லபுஸ்ஷேன் 14 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். இருப்பினும் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த தொடக்க வீரர் டேவிட் வார்னருடன் கைகோர்த்து ரன்களை சேர்த்தார். நேரம் செல்ல செல்ல தென்னாப்பிரிக்கா பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 239 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

உண்மை என்ன:
ஆனால் தொடர்ந்து அசத்திய டேவிட் வார்னர் அவுட்டாகாமல் அடம் பிடித்து 16 பவுண்டரி 2 சிக்ஸருடன் இரட்டை சதமடித்தார். முன்னதாக தன்னுடைய 100வது போட்டியாக அமைந்த இப்போட்டியில் சதமடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய 10வது போட்டியில் சதமடித்த 10வது வீரர் மற்றும் 2வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனை படைத்தார். அதோடு நிற்காமல் இரட்டை சதமும் அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 100வது டெஸ்டில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற வரலாற்றை படைத்து உலக அளவில் 2வது வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரமான அவர் கடைசியாக கடந்த 2020 ஜனவரியில் சதமடித்திருந்த நிலையில் அதன் பின் பார்மை இழந்து சுமார் 3 வருடங்களாக அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் தவித்தார். அதனாலேயே கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவருக்கு ஸ்டீவ் ஸ்மித் போல் அல்லாமல் 2018 பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கை காரணமாக காண்பித்து கேப்டன்ஷிப் பொறுப்பை வழங்காமல் ஆஸ்திரேலிய வாரியம் கழற்றி விட்டது. அத்துடன் விளையாடும் 11 பேர் அணியிலும் அவருக்கான இடத்திற்கு சமீப காலங்களில் ஆஸ்திரேலிய அணி மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் எதிர்ப்புகள் நிலவுகின்றன.

- Advertisement -

அப்படிப்பட்ட நிலையில் அவை அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தன்னுடைய 100வது டெஸ்டில் இரட்டை சதமடித்த டேவிட் வார்னர் விமர்சனங்களை அடித்து நொறுக்கி தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்தார். அதனாலேயே தமக்கே உரித்தான ஸ்டைலில் சதமடித்த போது வேகமாக ஓடி காற்றில் பறந்து சூப்பர் மேன் பஞ்ச் கொடுத்த அவர் வெறித்தனமாக கொண்டாடினார். அதை விட இரட்டை சதமடித்த போது தன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் சூப்பர் மேன் பஞ்ச் கொடுத்த அவர் மிகுந்த உணர்ச்சிபூர்வமாக கொண்டாடினார்.

ஆனால் இம்முறை கதையில் ட்விஸ்ட் போல வெறித்தனமாக கொண்டாடிய காரணத்தால் தசைப் படிப்பை சந்தித்த அவர் வலியால் தடுமாறினார். உடனடியாக மருத்துவர் சோதித்த போதிலும் அதிகப்படியான வலியை உணர்ந்ததால் மேற்கொண்டு பேட்டிங் செய்ய முடியாத அவர் 2 வீரர்களின் உதவியுடன் ரிட்டையர்ட் ஹர்ட்டாகி பெவிலியன் திரும்பினார். அதனால் இதெல்லாம் தேவையா? என்று சில ரசிகர்கள் சமூகவலைகளில் கிண்டலடிப்பதை பார்க்க முடிகிறது.

- Advertisement -

ஆனால் உண்மை என்னவெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய இன்னிங்ஸ் விளையாடும் போது இது போல தசைப்பிடிப்பு காயங்கள் ஏற்படுவது வழக்கமாகும். அந்த வகையில் இப்போட்டியில் சதத்தை அடிப்பதற்கு முன்பே தசைப்பிடிப்பை சந்தித்த அவர் அதற்கான முதலுதவிகளை எடுத்துக்கொண்டு தொடர்ந்து விளையாடி இரட்டை சதடித்து சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: எதையும் எடுக்க விடாம இரவு 2 மணிக்கு அனுப்பிட்டாங்க – பதவி நீக்கத்தின் அதிர்ச்சி பின்னணியை பகிர்ந்த ரமீஸ் ராஜா

ஆனால் அது தெரியாமல் சில ஊடகங்கள் தவறான தகவலை பரப்பி ரசிகர்களை கிண்டலடிக்க வைத்துள்ளது. இருப்பினும் அதை நேரில் பார்த்த காரணத்தாலேயே அவர் வெளியேறிய போது மெல்போர்ன் மைதான ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றார்கள். மொத்தத்தில் அவர் அதிரடியால் 2வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 386/3 ரன்கள் குவித்து 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement