இப்படியும் அவுட்டாக முடியுமா பாவம், டேவிட் வார்னர் விக்கெட்டால் ரசிகர்கள் பரிதாபம் – வீடியோ உள்ளே

David Warner AUs vs NZ Southee
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் முதல் சுற்று முடிந்து முக்கியமா சூப்பர் 12 சுற்று துவங்கியுள்ளன. அதில் அக்டோபர் 22ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் அசால்ட்டாக தோற்கடித்த நியூசிலாந்து 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புகழ்பெற்ற சிட்னி நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக 200/3 ரன்களை பதிவு செய்து சாதனையும் படைத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் டேவோன் கான்வே கடைசி வரை அவுட்டாகாமல் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 92* (58) ரன்களும் ஃபின் ஆலன் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 42 (16) ரன்களும் குவித்தனர். அதை தொடர்ந்து 201 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே நியூசிலாந்தின் அட்டகாசமான பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 17.1 ஓவரில் வெறும் 111 ரன்களுக்கு சுருண்டு டி20 கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் தன்னுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து பரிதாப சாதனை படைத்தது. அந்த அணிக்கு டேவிட் வார்னர் 5, ஆரோன் பின்ச் 13, மிட்செல் மார்ஷ் 16, மார்க்கஸ் ஸ்டோனிஸ் 7, டிம் டேவிட் 11, மேத்தியூ வேட் 2 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 28 (20) ரன்களை எடுத்தார்.

- Advertisement -

பரிதாப வார்னர்:
அந்த அளவுக்கு அற்புதமாக பந்து வீசிய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சௌத்தி மற்றும் மிட்சேல் சாட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினர். அதனால் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பை ஃபைனலில் தங்களை தோற்கடித்த ஆஸ்திரேலியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்த்தது. அத்துடன் 15 வருடங்களில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டி20 போட்டியில் வென்று வரலாறு படைத்த அந்த அணி உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

மறுபுறம் சொந்த மண்ணில் பேட்டிங்கில் சொதப்பிய ஆஸ்திரேலியா சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலை குனிந்து அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக 200 ரன்களை சேசிங் செய்யும் போது எந்த அணிக்குமே அதிரடியான தொடக்கம் அவசியமாகும் நிலையில் ஆஸ்திரேலியாவின் தூணாக கருதப்படும் டேவிட் வார்னர் டிம் சௌதீ வீசிய 2வது ஓவரின் முதல் பந்தில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். ஆம் பொதுவாக எட்ஜ் ஆகி போல்டானால் அன்றைய நாளில் அந்த பேட்ஸ்மேனுக்கு அதிர்ஷ்டமில்லை என்று வல்லுநர்கள் சொல்வார்கள்.

- Advertisement -

அந்த வகையில் சௌத்தீ வீசிய அந்த மித வேகப்பந்தை பவுண்டரிக்கு அடிக்க முயற்சித்த டேவிட் வார்னரின் பேட்டின் விளிம்பில் பட்ட பந்து பவுண்டரி நோக்கி செல்லாமல் அவருடைய காலில் பட்டு பின்னோக்கி சென்றது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பந்தை அடித்த பின் பின்னோக்கி சென்ற அவரது பேட்டின் மீது மீண்டும் ஒரு முறை விளிம்பில் பட்ட பந்து நேராக ஸ்டம்பில் பட்டு இன்றைய நாளில் உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை பெவிலியன் திரும்புங்கள் என்ற வகையில் அவுட்டாக்கியது.

அதனால் ஏமாற்றமடைந்த வார்னர் விரக்தியில் அப்படியே ஒரு காலை மண்டியிட்டு உட்கார்ந்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இறுதியில் மொத்த விரக்தியையும் சிரிப்பாக வெளிப்படுத்தினார். அதை பார்த்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் “என்னய்யா இது, இப்படியும் அவுட்டாக முடியுமா, இன்று இவருக்கும் நமக்கும் ராசியில்லை” என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தனர். வரலாற்றில் இதே போல வித்தியாசமான முறையில் முக்கிய வீரர்கள் அவுட்டாகியுள்ள நிலையில் மீண்டும் அது போன்ற வித்தியாசமான அவுட்டை நேற்று ரசிகர்கள் பார்க்க நேர்ந்தது.

அந்த துரதிர்ஷ்டவசமான தொடக்கமே இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு படு மோசமான தோல்வியையும் பரிசளித்தது. இந்த தோல்வியை தொடர்ந்து சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்கும் பயணத்தில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ள ஆஸ்திரேலியா அடுத்ததாக வரும் அக்டோபர் 25ஆம் தேதியன்று ஆசிய சாம்பியன் இலங்கையை தன்னுடைய 2வது கிரிக்கெட் போட்டியில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement