போனில் பேசுவதை நிறுத்தி விட்டு சாதனை போட்டிக்கு முன் விராட் கோலி – இந்திய வீரர்களை வாழ்த்திய பிரைன் லாரா

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. மறுபுறம் அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அனுபவத்தால் மாயாஜாலம் நிகழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பெரிய இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்த இந்தியா 2வது போட்டியிலும் வென்று இத்தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியுடன் கோப்பையை வெல்ல தயாராகி வருகிறது.

அதற்கு சவாலை கொடுத்து குறைந்தபட்சம் சொந்த மண்ணில் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் போராட்ட தயாராகியுள்ள இந்த 2வது போட்டி ஜூலை 20ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ட்ரினிடாட் தலைநகரான போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் துவங்குகிறது. அங்குள்ள குயின்ஸ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டியில் வெல்வதற்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக ட்ரினிடாட் என்றாலே உலகம் முழுவதிலும் இருக்கும் ரசிகர்களுக்கு ஜாம்பவான் பிரைன் லாரா தான் முதலாவதாக நினைவுக்கு வருவார் என்று சொல்லலாம்.

- Advertisement -

வாழ்த்திய லாரா:
ஏனெனில் இந்திய ஜாம்பவான் சச்சின் போலவே தம்முடைய இளம் வயதில் 1990இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி அனைத்து டாப் பவுலர்களையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிகபட்ச ஸ்கோர் (400) பதிவு செய்த வீரராக உலக சாதனை படைத்து 11953 ரன்களையும் ஒருநாள் கிரிக்கெட்டில் 10405 ரன்களையும் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்த மகத்தானவராக போற்றப்படுகிறார். மேலும் கேப்டனாக 2004 சாம்பியன்ஸ் ட்ராபியை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வென்று கொடுத்த அவர் உலக அரங்கில் மகத்தான வீரர்களில் ஒருவராகவும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு ரோல் மாடலாகவும் திகழ்ந்து வருகிறார்.

அப்படிப்பட்ட அவர் தன்னுடைய சொந்த ஊரில் நடைபெறும் இந்த போட்டியை பார்ப்பதற்கு வந்த நிலையில் வலைப் பயிற்சிகளை முடித்து ஃபெவிலியன் திரும்பிய இந்திய வீரர்களை நேரில் சந்தித்து பேசினார். குறிப்பாக இந்த போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகளில் விளையாடும் 4வது இந்திய வீரர் என்ற மகத்தான சாதனை படைக்க உள்ள விராட் கோலியை “போனில் பேசிய நபரிடம் ஒரு நிமிடம் இருங்கள்” என்று சொல்லி விட்டு சிறப்பாக செயல்படுமாறு கை கொடுத்து பிரைன் லாரா வாழ்த்தினார்.

- Advertisement -

இது வரை டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் 499 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு பின் 500 போட்டிகளில் விளையாடும் 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார். மேலும் இதற்கு முன் சச்சின் போன்ற யாரும் தங்களுடைய 500வது போட்டியில் சதமடிக்காத நிலையில் விராட் கோலி அந்த மைல்கல்லை தொடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் தமது காலத்தில் சவாலாக இருந்த ராகுல் டிராவிட்டையும் சந்தித்த ப்ரைன் லாரா நீண்ட நேரம் பேசினார். அத்துடன் ஷார்துல் தாகூர், முகமது சிராஜ், அஜிங்க்ய ரகானே, கேஎஸ் பரத் போன்ற அனைத்து இந்திய வீரர்களும் ஜாம்பவானான அவரை சந்தித்து கை கொடுத்து வாழ்த்துக்களை பெற்றனர்.

இதையும் படிங்க:பிறந்தநாளில் முடிஞ்சா அந்த கிஃப்ட் கொடு பாக்கலாம், இஷான் கிஷானை – கலாய்த்த ரோஹித் சர்மா (வீடியோ பாருங்க)

இறுதியாக கேப்டன் ரோகித் சர்மாவையும் சந்தித்த பிரைன் லாரா சிறப்பாக விளையாடுமாறு வாழ்த்து தெரிவித்தார். அப்படி வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா இந்திய அணி நேரில் சந்தித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவகிறது.

Advertisement