வீடியோ : வரலாறு காணாத ஃபீல்டிங்கை செட் செய்து மேஜிக் நிகழ்த்திய பென் ஸ்டோக்ஸ் – தைரியத்தால் சாதிக்குமா இங்கிலாந்து?

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நூற்றாண்டு பழமை மிகுந்த ஆஷஸ் 2023 கிரிக்கெட் தொடரில் ஜூலை 16ஆம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து அதிரடியாக விளையாடி 393/8 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான அணுகுமுறையை பின்பற்றி கடந்த வருடம் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளை அடித்து நொறுக்கி இங்கிலாந்தை வெற்றி நடை போட வைத்துள்ள கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதல் நாளிலேயே ஆஸ்திரேலியாவுக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் நோக்கத்தில் தைரியமாக டிக்ளேர் செய்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து 118* ரன்களும் ஜாக் கிராவ்லி 61 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 78 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 9, மார்னஸ் லபுஸ்ஷேன் 0, ஸ்டீவ் ஸ்மித் 16 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் தடுமாறிய அந்த அணியை மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா நங்கூரமாக நின்று நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி மீட்டெடுக்க போராடினார்.

- Advertisement -

வரலாறு காணாத ஃபீல்டிங்:
அவருக்கு உறுதுணையாக எதிர்புறம் டிராவிஸ் ஹெட் 50, கேமரூன் கிரீன் 38, அலெக்ஸ் கேரி 66 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்து ஆஸ்திரேலியாவை வலுப்படுத்தி அவுட்டானார்கள். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக செயல்பட்ட கவாஜா இங்கிலாந்து மண்ணில் தன்னுடைய முதல் சதமடித்து பெரிய சவாலை கொடுத்தார். அதன் காரணமாக 370 ரன்களை கடந்த ஆஸ்திரேலியா முன்னிலை பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் ஏற்பட்டதுடன் தைரியமாக டிக்ளேர் செய்த இங்கிலாந்தின் முடிவு கேள்விக்குறியானது.

ஆனால் பேட்டிங்கில் மட்டும் அதிரடியாக விளையாட மாட்டோம் ஒவ்வொரு பந்திலும் அதிரடியாக செயல்படுவோம் என்பதை நிரூபிக்கும் வகையில் கவாஜாவை ரன்கள் அடிக்க விடாமல் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நெருக்கமான ஃபீல்டிங்கை செட்டிங் செய்தார். பொதுவாகவே எந்த வகையான போட்டியாக இருந்தாலும் ரன்களை எடுக்க விடாமல் தடுத்தால் தாமாகவே அழுத்தம் ஏற்பட்டு பேட்ஸ்மேன்கள் அடிக்க முயற்சித்து அவுட்டாவார்கள். அந்த எளிமையான தத்துவத்தை பின்பற்றிய பென் ஸ்டோக்ஸ் பழமைகளை தூக்கி எறிந்து விட்டு கவாஜாவுக்கு நேர் எதிராக இருபுறத்திலும் தலா 3 ஃபீல்டர்களை நிறுத்தினார்.

- Advertisement -

குறிப்பாக எதிரணிகள் தொடர் வீக்கெட்டுகளை இழந்தாலும் கூட பெரும்பாலான கேப்டன்கள் விக்கெட் கீப்பருக்கு பக்கவாட்டு ஸ்லிப் பகுதியில் தான் வரிசையாக 7 – 8 ஃபீல்டர்களை நிறுத்துவார்கள். ஆனால் அந்த காலம் காலமாக இருந்து வரும் நடைமுறையை பின்பற்றாத அவர் பவுலர் வீசும் நேர்திசையை தவிர்த்து கவர்ஸ் மற்றும் மிட் ஆன் திசைகளில் தலா 3 ஃபீல்டர்களை நிறுத்தி சிங்கிள் கூட எடுக்க விடாமல் கேட் போட்டார் என்றே சொல்லலாம். அப்படி வரலாறு காணாத ஃபீல்டிங்கை செட்டிங் செய்தது ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்திய நிலையில் வர்ணனையாளராக கெவின் பீட்டர்சன் சிரித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் மிகவும் நெருக்கமாக ஃபீல்டிங் செட்டிங் செய்யப்பட்டதால் ஓலி ராபின்சன் வீசிய அடுத்த பந்தில் இறங்கி வந்து தூக்கி அடிக்க முயற்சித்த கவாஜா 141 ரன்களில் க்ளீன் போல்ட்டாகி சென்றார். அதை கச்சிதமாக பயன்படுத்திய இங்கிலாந்து அடுத்து வந்த டெயில் எண்டர்களை பெரிய சேதத்தை ஏற்படுத்தாமல் பெவிலியன் அனுப்பி வைத்து ஆஸ்திரேலியாவை 386 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 7 ரன்கள் முன்னிலையும் பெற்று அசத்தியது.

இதையும் படிங்க:TNPL 2023 : அஸ்வின் தலைமையில் டாப்பராக அசத்தும் திண்டுக்கல் – சொந்த மண்ணில் மதுரையை சுருட்டி வீசியது எப்படி

குறிப்பாக தாங்கள் தைரியமாக எடுத்த டிக்ளேர் முடிவை வீணாக்காத வகையில் கெத்தாக பந்து வீசிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 7, பென் டூக்கெட் 19 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மழை வந்ததால் 3வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. களத்தில் ஓலி போப், ஜோ ரூட் ரன்கள் எதுவும் எடுக்காமல் இருக்கும் நிலையில் இங்கிலாந்து 28/2 என்ற ஸ்கோருடன் விளையாடி வருகிறது.

Advertisement