கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடுமா? ஆசிய கோப்பைக்காக தீ மிதித்து அனலாக பயிற்சி எடுக்கும் வங்கதேச வீரர்

- Advertisement -

ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கப் போகும் ஆசிய கோப்பை 2023 தொடர் வரும் ஆகஸ்ட் 30 முதல் பாகிஸ்தானில் கோலாகலமாக துவங்குகிறது. பல விவாதங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 2 நாடுகளில் நடைபெறும் இந்த தொடரில் ஆசிய கண்டத்தின் டாப் 6 கிரிக்கெட் அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த தொடர் இம்முறை 50 ஓவர் போட்டிகளாக நடைபெற உள்ளது.

அதில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாள் ஆகிய 6 அணிகள் கோப்பையை வெல்வதற்காக மோத உள்ளன. இந்த 6 அணிகளும் குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் தலா ஒரு முறை மோத உள்ளன. அதில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மாபெரும் ஃபைனலில் கோப்பையை வெல்வதற்காக மோதும் என்ற வகையில் இந்த தொடரின் ஃபார்மட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தீ மிதிப்பு:
அந்த வகையில் அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தொடரில் கோப்பையை வெல்வதற்காக வங்கதேச அணி தற்போது இறுதிக்கட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் உச்சகட்டமாக வங்கதேச தொடக்க வீரர் முகமது நைம் இந்த ஆசிய கோப்பையில் அதிரடியாக விளையாடுவதற்காக நெருப்பு மீது நடந்து வித்தியாசமான அனல் பறக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதாவது நெருப்பு மீது நடப்பது மனதளவில் அமைதியை ஏற்படுத்தும் என்பதால் அந்த வகையான பயிற்சியை அவர் பயிற்சியாளர் வழிகாட்டுதலுடன் எடுத்து வருகிறார்.

குறிப்பாக இரவு நேரத்தில் சுமார் 3 – 5 அடி அளவுக்கு நெருப்பை மூட்டி அதில் முகமது நைம் கூலாக நடந்து சென்று பயிற்சிகளை எடுத்த போது அவருடைய பயிற்சியாளர் கைதட்டி பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட்டில் இதற்கு முன் எத்தனையோ பயிற்சிகளை பார்த்துள்ள ரசிகர்களுக்கு இப்படி ஒரு புதுமையான பயிற்சியை வங்கதேச வீரர்கள் மேற்கொள்வது திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் வரலாற்றில் பல ஜாம்பவான் வீரர்கள் யாருமே இப்படி நெருப்பு மீது நடந்து வித்தியாசமான பயிற்சிகளை மேற்கொண்டதே இல்லை. மேலும் இது போன்ற பயிற்சியை மேற்கொள்ளும் போது காலில் காயங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உருவாகும் என்பதால் போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இப்படி நெருப்பு மீது நடந்து வங்கதேச வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்வதை பார்க்கும் ரசிகர்கள் “கண்ணாடியை திருப்பினால் எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்” என்பது போல் இந்த பயிற்சி இருப்பதாக கலகலப்பை வெளிப்படுத்துகின்றனர்.

இருப்பினும் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற தரமான எதிரணிகளில் இருக்கும் பவுலர்கள் வீசும் பந்துகளை அனல் பறக்க அடிப்பதற்காகவே தங்களுடைய வீரர்கள் இப்படி தனித்துவமான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக வங்கதேச ரசிகர்கள் பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகின்றனர். இதைத் தொடர்ந்து இந்த ஆசியக் கோப்பையில் வங்கதேசம் தன்னுடைய முதல் போட்டியில் இலங்கையை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க:IND vs IRE : சேவாக், தோனி, விராட், ரோஹித் போன்ற இந்திய கேப்டன்களை மிஞ்சிய பும்ரா – அறிமுக போட்டியிலேயே வரலாற்று சாதனை

2018 நிதஹாஸ் கோப்பையில் இலங்கையை தோற்கடித்து பாம்பு நடனம் ஆடியதால் வங்கதேசம் மீது அந்நாட்டு வீரர்களும் ரசிகர்களும் ஒரு மறக்காத பகையை வைத்துள்ளார்கள் என்றே சொல்லலாம். அதன் காரணமாக இந்த போட்டியில் வங்கதேத்தை தோற்கடித்து இலங்கை பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புடன் அந்த போட்டிக்கான டிக்கெட் முழுவதையும் இலங்கை ரசிகர்கள் வாங்கி குவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த நிலையில் தமிம் இக்பால் கேப்டன்ஷிப் பதவியில் செய்த குளறுபடிகளை கடந்து இந்த தொடரில் சாகிப் அல் ஹசன் தலைமையில் வங்கதேசம் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement