IND vs IRE : சேவாக், தோனி, விராட், ரோஹித் போன்ற இந்திய கேப்டன்களை மிஞ்சிய பும்ரா – அறிமுக போட்டியிலேயே வரலாற்று சாதனை

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள இந்தியா அடுத்ததாக அயர்லாந்துக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்களுடன் இத்தொடரில் களமிறங்கியுள்ள இந்தியாவை ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து கேப்டனாக வழி நடத்துவது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிலையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி டப்லின் நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் மழைக்கு மத்தியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாத அயர்லாந்து 20 ஓவர்களில் போராடி 139/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பேரி மெக்கார்த்தி அதிரடியாக 51* (33) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 140 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாடி 24 (23) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பும்ராவின் அசத்தல் சாதனை:
அப்போது வந்த திலக் வர்மா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் மறுபுறம் நிதானத்தை காட்டிய ருதுராஜ் 19* (16) ரன்களும் சஞ்சு சாம்சன் 1* ரன்னும் எடுத்திருந்த போது வந்த மழை போட்டியை மொத்தமாக நிறுத்தியது. அப்போது அயர்லாந்தை விட 2 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததன் காரணமாக டக் வொர்த் லெவிஸ் முறைப்படி இந்தியா வென்றதாக நடுவர்கள் அறிவித்தனர். முன்னதாக இந்த போட்டியில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை கேப்டனாக வழி நடத்தும் முதல் பவுலர் என்ற தனித்துவமான சாதனையுடன் களமிறங்கிய பும்ரா தம்முடைய முதல் ஓவரிலேயே ஆண்டி பால்பரின் 4, லார்கன் டுக்கர் 0 என 2 பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கினார்.

Jasprit Bumrah 2

அந்த வகையில் கடந்த 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சந்தித்த காயத்திலிருந்து 11 மாதங்கள் கழித்து குணமடைந்து களமிறங்கிய அவர் தம்முடைய முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே 327 நாட்கள் கழித்து 2 விக்கெட்களை சாய்த்து மாஸ் கம்பேக் கொடுத்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. சொல்லப்போனால் முதல் ஓவரிலேயே அவர் அப்படி அடுத்தடுத்த விக்கெட்டுகளை எடுத்த பெரிய அழுத்தத்தை கொடுத்த காரணத்தாலேயே அயர்லாந்து 150 ரன்கள் கூட தொட முடியாமல் கடைசியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு உதவியது.

- Advertisement -

அதன் காரணமாக ஆட்டநாயகன் விருதையும் வென்ற அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக இந்தியாவை வழி நடத்திய அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வெல்லும் முதல் இந்திய வீரர் என்ற அசத்தலான சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் 2006இல் முதல் கேப்டனாக செயல்பட்ட சேவாக், நீண்ட காலமாக இந்தியாவை வழிநடத்தி டி20 உலக கோப்பையை வென்ற எம்எஸ் தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்களுடன் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட சுரேஷ் ரெய்னா, ரகானே, ஷிகர் தவான், ஹர்டிக் பாண்டியா போன்ற யாருமே தங்களுடைய அறிமுக போட்டியிலேயே கேப்டனாக ஆட்டநாயகன் விருதை வென்றதில்லை.

Jasprit Bumrah India Jaiswal

இதையும் படிங்க:அது கடவுள் ஆடிய இன்னிங்ஸ், அந்த ரெக்கார்டை உடைக்க 2023 உலக கோப்பையுடன் ரிட்டையராகிடுங்க – கிங் கோலிக்கு அக்தர் கோரிக்கை

அத்துடன் ரோகித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்குப் பின் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆட்டநாயகன் விருது வெல்லும் 4வது இந்தியர் என்ற பெருமையும் அவர் பெற்றார். அது போக ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு பின் போட்டியின் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை எடுத்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பும்ரா பெற்றுள்ளார். அந்தளவுக்கு கருப்பு குதிரையாக கருதப்படும் அவர் தற்போது குணமடைந்து ஃபார்முக்கு திரும்பியுள்ளது 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் இந்தியாவை வலுப்படுத்தும் என்று உறுதியாக சொல்லலாம்.

Advertisement