ரொம்ப தேங்க்ஸ் தம்பி, ஓவர் தன்னம்பிக்கையால் பல்ப் வாங்கிய வங்கதேசம் – தண்டனை கொடுத்த அம்பயர்

penalty runs
- Advertisement -

சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 14ஆம் தேதியன்று தொடங்கியது. இத்தொடரை 2 – 0 (3) என்ற கணக்கில் வென்றால் மட்டுமே 2023இல் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 20, கேஎல் ராகுல் 22, விராட் கோலி 1 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதால் 48/3 என தடுமாறிய இந்தியாவை புஜாரா 90, ஸ்ரேயாஸ் ஐயர் 86, ரிஷப் பண்ட் 46 என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ரன்களை குவித்து மீட்டடெடுத்தார்கள்.

இறுதியில் 8வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் 58 ரன்களும் குல்தீப் யாதவ் 40 ரன்களும் எடுத்த நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜூல் இஸ்லாம் மற்றும் மெகதி ஹாசன் ஆகியோர் தலா 4 விக்கெட் எடுத்தனர். அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேசம் முதல் பந்திலிருந்தே அனலாக பந்து வீசிய இந்திய பவுலர்களிடம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

ரொம்ப தைரியம்:
குறிப்பாக முதல் பந்திலேயே சாண்டோ டக் அவுட்டான நிலையில் யாசிர் அலி 4, ஜாகிர் ஹசன் 20, லிட்டன் தாஸ் 24, சாகிப் அல் ஹசன் 3, முஸ்பிக்கர் ரஹீம் 28, நுருள் ஹசன் 16 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் 2வது நாள் முடிவில் 138/8 ரன்களை எடுத்துள்ள வங்கதேசம் இந்தியாவை விட 271 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்தியா சார்பில் தற்போது வரை அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட் எடுத்துள்ளனர்.

முன்னதாக இப்போட்டியில் 58 ரன்கள் குவித்து வங்கதேசத்துக்கு தொல்லை கொடுத்த அஸ்வின் டைஜுல் இஸ்லாம் வீசிய 112வது ஓவரின் 2வது பந்தை எதிர்கொண்டு தேர்ட் மேன் திசையில் அடித்தார். அதை துரத்திச் சென்ற ஃபீல்டர் பந்தை தடுத்து நிறுத்தி ஸ்டம்ப்புகளை நோக்கி தூக்கி எறிந்தார். ஆனால் அப்போது அதைப் பிடிக்க வேண்டிய விக்கெட் கீப்பர் இல்லாத நிலையில் பந்து நேராக அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டில் கச்சிதமாக அடித்தது. அதனால் அடிப்படை விதிமுறைப்படி நடுவர் உடனடியாக வங்கதேசத்துக்கு 5 ரன்களை பெனால்டியாக வழங்கினார்.

- Advertisement -

இங்கு விஷயம் என்னவெனில் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது தான் விக்கெட் கீப்பர்கள் தங்களது ஹெல்மட்டை கழற்றி வைத்து விட்டு தொப்பியை மட்டும் அணிந்து கொண்டு ஃபீல்டிங் செய்வார்கள். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷார்ட் லெக் ஃபீல்டர் நிற்கும் பட்சத்தில் அவர் பயன்படுத்தும் ஹெல்மட்டை உடனுக்குடன் பவுண்டரி எல்லைக்கு வெளியே கொண்டு வருவது தான் வழக்கமாகும். ஏனெனில் வரலாற்றில் பல தருணங்களில் இது போல் ஹெல்மெட் மற்றும் கிளவுஸ் ஆகியவற்றில் லேசாக உரசினாலே நடுவர்கள் 5 ரன்களை தண்டனையாக கொடுத்துள்ளார்கள்.

ஆனால் அந்த தருணத்தில் வங்கதேச விக்கெட் கீப்பர் ஹெல்மெட் அணிந்திருந்தார். அது போக இதர ஃபீல்டர்கள் பயன்படுத்துவதற்காக எக்ஸ்ட்ராவாக ஒன்றுக்கு 2 ஹெல்மெட் அவருக்கு பின்புறத்தில் இருந்தது. சாதாரணமாக ஒரு ஹெல்மெட் இருந்தாலே எப்படியாவது பந்து உரசி விடும் என்ற நிலைமையில் வங்கதேச அணியினர் தைரியமாக 2 ஹெல்மெட்டை களத்தின் நடுவே வைத்திருந்தார்கள். அதை விட 2 ஹெல்மெட் உள்ளதே என்ற பயம் இல்லாத விக்கெட் கீப்பர் பந்தை தடுக்க வேண்டிய இடத்தில் நிற்காமல் வேறு இடத்தில் இருந்தார்.

இதையும் படிங்க: இந்தியாவை ஜெயித்த பிறகு எனக்கு பாகிஸ்தானில் எப்படிப்பட்ட மரியாதை கிடைச்சது தெரியுமா? – ரிஸ்வான் பேட்டி

மொத்தத்தில் வங்கதேசத்தின் அந்த அதிகப்படியான தைரியமே இறுதியில் அவர்களுக்கு பல்ப்பாக மாறி 5 ரன்களை தண்டனையாக கொடுக்க வைத்தது. கிரிக்கெட்டில் 1 ரன்னால் எவ்வளவோ பெரிய வெற்றிகள் கைமாறிய நிலையில் அந்த 5 ரன்கள் தான் இந்தியா 400 ரன்கள் தொடுவதற்கு உதவியது. அதனால் இந்திய ரசிகர்கள் வங்கதேசத்துக்கு “ரொம்ப தேங்க்ஸ் தம்பி” என்று சமூக வலைதளங்களில் நன்றி தெரிவிக்கிறார்கள்.

Advertisement