அங்க பாருய்யா, உங்களை விட அவர் நல்லா பீல்டிங்ல பின்றாரு – இந்திய வீரர்களை கலாய்க்கும் ரசிகர்கள்

Ball Boy Catch
- Advertisement -

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்களை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா புறப்பட்டுள்ள நிலையில் ஷிகர் தவான் தலைமையிலான இளம் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அக்டோபர் 6ஆம் தேதியன்று லக்னோவில் மழையால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு தாமதமாக துவங்கிய இந்தத் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா போராடி 249/4 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு ஜானெமன் மாலன் 22 (42) குயின்டன் டி காக் 48 (54) என தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுத்து அவுட்டானாலும் கேப்டன் பவுமா 8, மார்க்ரம் 0 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். அதனால் 110/4 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் 5வது விக்கெட்டுக்கு 139 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய பவுலர்களை பந்தாடிய ஹென்றிச் க்ளாஸென் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 74*(65) ரன்களும் டேவிட் மில்லர் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 75* (63) ரன்களும் குவித்து அசத்தினர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷார்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

போராடி தோல்வி:
அதை தொடர்ந்து 250 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சுப்மன் கில் 3 (7), கேப்டன் தவான் 4 (16) ருதுராஜ் கைக்வாட் 19 (42), இஷான் கிசான் 20 (37) என டாப் 4 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் மெதுவாக விளையாடி அவுட்டானதால் 51/4 என ஆரம்பத்திலேயே திண்டாடியது. அப்போது களமிறங்கி அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் அய்யர் 8 பவுண்டரியுடன் 50 (33) ரன்கள் எடுத்து போராடி அவுட்டான நிலையில் அடுத்ததாக களமிறங்கிய ஷர்துல் தாகூருடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் நங்கூரமாக 6வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடினார்.

அதில் பொறுப்புடன் செயல்பட சர்துல் தாக்கூர் 33 (31) ரன்களில் கடைசி நேரத்தில் அவுட்டானாலும் மறுபுறம் கடைசி வரை போராடிய சாம்சன் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 86* (63) ரன்கள் எடுத்தார். ஆனாலும் 40 ஓவர்களில் 240/8 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. மறுபுறம் லுங்கி நிகிடி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியத நிலையில் சிறப்பான வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா டி20 தொடரின் தோல்விக்கு பதிலடியாக வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

சொதப்பிய பீல்டர்கள்:
இந்த வெற்றிக்கு 74* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ஹென்ரிச் க்ளாஸென் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் ஆரம்பத்தில் நிதானமாகவும் கடைசி நேரத்தில் அதிரடியாகவும் பேட்டிங் செய்த அவர் ஆவேஷ் கான் வீசிய 38வது ஓவரின் முதல் பந்தில் கொடுத்த அழகான கேட்ச்சை இந்திய வீரர் முகமது சிராஜ் கோட்டை விட்டார். அடுத்த பந்திலேயே 75* ரன்கள் குவித்து தோல்வியை பரிசளித்த டேவிட் மில்லர் கொடுத்த கேட்ச்சை ரவி பிஷ்னோய் கோட்டை விட்டார். ஒருவேளை அந்த கேட்ச்களை பிடித்திருந்தால் வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றிருக்காது என்பதே நிதர்சனம்.

ஏனெனில் அதே ஓவரின் 4வது பந்தில் டேவிட் மில்லர் பறக்க விட்ட மிரட்டலான சிக்ஸர் மிட் விக்கெட் திசைக்கு மேல் ஷ்ரேயஸ் ஐயர் வேடிக்கை பார்க்கும் வகையில் அவரது தலைக்கு மேல் பவுண்டரி எல்லையை தாண்டி சென்றது. அந்த பந்தை “பால் பாய்” எனப்படும் பந்தை பிடித்து போடும் பையன் மைதானத்திற்கு வெளியே இருந்து கச்சிதமாக பிடித்தார். அதை பார்த்த ரசிகர்கள் “பாருங்க இந்த ரசிகர் பையன் கூட எவ்வளவு அழகாக பிடிக்கிறார், அவரை பார்த்து முழுநேர கிரிக்கெட் வீரர்களாக செயல்படும் இந்திய வீரர்கள் கேட்ச பிடிப்பதை பற்றி கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் சாடுகிறார்கள்.

இதையும் படிங்க : IND vs RSA : கடைசி வரைக்கும் எங்களுக்கு விளையாட்டு காட்டிட்டாரு – இந்திய வீரரை பாராட்டிய பவுமா

மேலும் உலகின் நம்பர் ஒன் அணியாக கருதப்படும் இந்தியா சமீப காலங்களில் இது போன்ற எளிதான கேட்ச்களை கோட்டை விட்டு வெற்றியையும் தாரை வார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. அதற்காக ரசிகர்கள் முதல் ஜாம்பவான்கள் வரை எவ்வளவோ திட்டியும் கூட சீனியர்கள் முதல் ஜூனியர் வீரர்கள் வரை இன்னமும் பீல்டிங்கில் முன்னேறாமல் இருப்பது தொடர்ந்து இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement