வீடியோ : டிராவிஸ் ஹெட்டை சதமடிக்க விடாமல் போல்ட்டாக்கிய அக்சர் படேல் – பும்ராவின் தனித்துவ சாதனையை தகர்த்து புதிய சாதனை

Axar Patel
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வந்த பார்டர் – காவாஸ்கர் கோப்பை தொடரை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்றுள்ள இந்தியா 2017, 2018/19, 2020/21, 2023* என அடுத்தடுத்த 4 தொடர்களை வென்ற முதல் அணியாக சாதனை படைத்துள்ளது. முன்னதாக இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆரம்பத்திலேயே கோப்பையை தக்க வைத்த இந்தியாவை 3வது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அதனால் பின்னடைவை சந்தித்த இந்தியா அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

இருப்பினும் பிளாட்டாக இருந்த அந்த பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் எடுக்க அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் பேட்டிங் செய்த இந்தியாவும் 571 ரன்கள் குவித்து தக்க பதிலடி கொடுத்தது. உஸ்மான் கவஜா 180, கேமரூன் கிரீன் 114, விராட் கோலி 186, சுப்மன் கில் 128 என இரு அணிகளைச் சேர்ந்த முக்கிய பேட்ஸ்மேன்கள் சதமடித்து தங்களது அணிகளை வலுப்படுத்தினர். ஆனால் அதற்குள் 4 நாட்கள் முடிந்த நிலையில் கடைசி நாளில் 91 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 175/2 ரன்கள் குவித்த போது 5வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

- Advertisement -

அசத்திய அக்சர்:
அதனால் இப்போட்டி டிராவில் முடிந்தாலும் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றதால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலியாவுடன் மீண்டும் மோதுவதற்கு இந்தியா தகுதி பெற்றது. முன்னதாக இப்போட்டியின் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு 60* ரன்கள் குவித்த மார்னஸ் லபுஸ்ஷேனுடன் ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 2வது விக்கெட்டுக்கு 139 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 90 ரன்கள் குவித்து சதத்தை நெருங்கினார்.

ஆனால் அப்போது 60வது ஓவரை வீசிய அக்சர் பட்டேல் முதல் பந்தில் மேஜிக் நிகழ்த்தி அவரை சதத்தை நெருங்க விடாமல் க்ளீன் போல்ட்டாக்கினார். கடந்த 2021ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் இந்த விக்கெட்டையும் சேர்த்து வெறும் 12 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை பதிவு செய்து அசத்தியுள்ளார். அதை விட வெறும் 2205 பந்துகளிலேயே 50 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என்ற ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் பும்ரா 2465 பந்துகளில் 50 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

முன்னதாக இந்த தொடரில் 3வது ஸ்பின்னராக விளையாடிய அவர் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் கொத்தாக விக்கெட்டுகளை எடுத்ததால் பந்து வீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் பேட்டிங்கில் தாறுமாறாக சுழன்ற பிட்ச்களை கொண்ட நாக்பூர் மற்றும் டெல்லியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து ஆரம்பத்திலேயே 2 வெற்றிகளை பெற்று கோப்பையை கைப்பற்ற முக்கிய பங்காற்றிய அவர் இந்த போட்டியிலும் 79 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அந்த வகையில் மொத்தமாக 4 போட்டிகளில் 264 ரன்கள் எடுத்துள்ள அவர் விராட் கோலிக்கு பின் இத்தொடரில் அதிக ரன்கள் எடுத்த 2வது இந்திய பேட்ஸ்மேனாகவும் அசத்தல் சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் அறிவிக்கப்படாத ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனாக இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அவர் ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

இதையும் படிங்க:IND vs AUS : ஸ்டீவ் ஸ்மித் வாயாலே டிராவை அறிவிக்க வைத்த ரோஹித் சர்மா – செம பிளான் தான்

இதைத்தொடர்ந்து வரும் ஜூன் 7 – 11 தேதிகளில் லண்டன் ஓவலில் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வதற்காக இந்தியா பலப்பரீட்சை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement