வீடியோ : கடைசி வரை மைதானத்தில் காத்திருந்த குட்டி ரசிகருக்கு ட்ரென்ட் போல்ட் கொடுத்த – ஸ்பெஷல் கிப்ட்

Trent Boult Young Fans
- Advertisement -

கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் 2022 தொடரின் பிளே ஆப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் ராஜஸ்தானை தோற்கடித்த குஜராத் நேரடியாக பைனலுக்கு சென்றது. அதேபோல் லக்னோவை எலிமினேட்டர் போட்டியில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்த பெங்களூரு குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த நிலைமையில் பைனலில் விளையாட போகும் 2-வது அணியை தீர்மானிக்கும் முக்கியமான குவாலிபயர் 2 போட்டி மே 27இல் நடைபெற்றது. அஹமதாபாத் நகரில் பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் பெங்களூருவை தோற்கடித்த ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்று மே 29இல் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் கோப்பைக்காக குஜராத்துடன் மீண்டும் பலப்பரீட்சை நடத்த தகுதி பெற்றது.

2008க்கு பின்:
அந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச தீர்மானித்ததை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவை சிறப்பாக பந்துவீசி மடக்கி பிடித்த பவுலர்கள் 20 ஓவர்களில் 157/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். அந்த அணிக்கு விராட் கோலி 7 (8), கேப்டன் டுப்லஸ்ஸிஸ் 25 (27) கிளன் மேக்ஸ்வெல் 24 (13) தினேஷ் கார்த்திக் 6 (7) போன்ற நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் எலிமினேட்டர் போட்டியில் சதமடித்த காப்பாற்றிய ரஜத் படிடார் அதிகபட்சமாக 58 (42) ரன்கள் சேர்த்தார். அப்படி நட்சத்திர வீரர்கள் கூட பெரிய ரன்களை எடுக்க விடாமல் சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஓபேத் மெக்காய் மற்றும் பிரஸித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

அதை தொடர்ந்து 158 என்ற சுலபமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு பட்லர் – ஜெய்ஸ்வால் ஓபனிங் ஜோடி ஆரம்பத்திலேயே சரவெடியாக 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தது. அதிலும் ஜெய்ஸ்வால் 21 (13) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 (21) தேவ்தூத் படிக்கள் 9 (12) என சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றனர். இருப்பினும் கடைசி வரை அவுட்டாகாமல் பெங்களூர் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு 10 பவுண்டரி 6 சிக்சருடன் இந்த வருடத்தின் 4-வது சதமடித்து 106* (60) ரன்கள் விளாசிய ஜோஸ் பட்லர் சிறப்பான பினிஷிங் கொடுத்தார். அதனால் 18.1 ஓவரில் 161/3 ரன்களை எடுத்த ராஜஸ்தான் முதல் சாம்பியன் பட்டத்தை வென்ற 2008க்குப் பின் 13 வருடங்கள் கழித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற அசத்தியுள்ளது.

குட்டி ரசிகர்:
அதனால் இறுதிப் போட்டியில் குஜராத்தை எதிர்கொண்டு 2008க்கு பின் 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல அந்த அணி போராட தயாராகியுள்ளது. குறிப்பாக தங்களுக்கு முதல் கோப்பையை வென்று கொடுத்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே சமீபத்தில் மறைந்த நிலையில் அவருக்கு கோப்பையை வென்று அஞ்சலி செலுத்தும் வகையில் இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் முழு மூச்சுடன் போராட உள்ளது. மறுபுறம் இந்த முக்கியமான போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கோட்டைவிட்ட பெங்களூரு முதல் கோப்பையை வெல்ல முடியாமல் வரலாற்றில் 15-ஆவது முறையாக பரிதாபமாக வீட்டுக்கு கிளம்பியது.

- Advertisement -

முன்னதாக இப்போட்டி அஹமதாபாத் நகரில் இருக்கும் 1,25,000 ரசிகர்கள் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் 80,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒன்றுகூடி இப்போட்டியை கண்டு களித்த நிலையில் நேற்றைய போட்டி முடிந்து இரவு 12 மணி கடந்த பின்பும் கூட 10 வயதுக்கும் கீழே நிரம்பிய ஒரு குட்டி பெங்களூரு ரசிகர் தமக்கு மிகவும் பிடித்த ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட்டை பார்ப்பதற்காக காத்திருந்தார்.

ஜெர்ஸி பரிசு:
அதை அறிந்த டிரென்ட் போல்ட் உடனடியாக அந்த ரசிகரை அருகே வரவழைத்து தனது ஜெர்சியை கழற்றி கொடுக்க முயற்சித்தார். அதை போடுவதற்காக அந்த குட்டிப் பையன் இப்படி மோசமாக 15 வருடங்களாக தோற்று வரும் பெங்களூர் அணி ஜெர்சியே வேண்டாம் என்பதுபோல் உடனடியாக கழற்றினார். அதற்கிடையில் தடுப்பு வேலி இருந்ததால் ஜெர்சியை கொடுக்க முடியாமல் தவித்த டிரென்ட் போல்ட் மற்றொரு ராஜஸ்தான் வீரரிடம் கொடுத்தனுப்பியதுடன் அங்கே சென்று வாங்கிக்கொள் என்று கூறிவிட்டு பெவிலியனுக்குள் சிரித்துக்கொண்டே நுழைந்தார்.

இதையும் படிங்க : மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளமாய் மோசமான சாதனை படைத்த ஆர்சிபி இந்திய பவுலர் – ரசிகர்கள் அதிருப்தி

அதை வேகமாக ஓடி வாங்கிக் கொண்டு அந்த சிறுவன் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் கட்சி மாறியது போல் ராஜஸ்தான் ஜெர்சியை அணிந்து புன்னகை மலர்ந்த முகத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். மேலும் குட்டி இந்திய ரசிகருக்காக நியூசிலாந்தைச் சேர்ந்த டிரென்ட் போல்ட் தனது ஜெர்சியை பரிசளித்தது தற்போது பாராட்டுகளுடன் வைரலாகி வருகிறது.

Advertisement