மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளமாய் மோசமான சாதனை படைத்த ஆர்சிபி இந்திய பவுலர் – ரசிகர்கள் அதிருப்தி

Mohammed Siraj De Kock
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 27-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற முக்கியமான குவாலிபயர் 2 போட்டியில் பெங்களூருவை மண்ணை கவ்வ வைத்த ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அஹமதாபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்து மிகச் சிறப்பாக செயல்பட்டு பெங்களூருவை பெரிய ரன்கள் எடுக்க விடாமல் 20 ஓவர்களில் 157/8 ரன்களுக்கு மடக்கிப் பிடித்து. அந்த அணிக்கு விராட் கோலி 7 (8) கேப்டன் டுப்லஸ்ஸிஸ் 25 (27) கிளன் மேக்ஸ்வெல் 24 (13) தினேஷ் கார்த்திக் 6 (7) என முக்கிய நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் எலிமினேட்டர் போட்டியில் சதமடித்து காப்பாற்றிய ரஜத் படிதார் அதிகபட்சமாக 58 (42) ரன்கள் குவித்தார்.

faf

அந்த அளவுக்கு கைதட்டி பாராட்டும் வகையில் பந்துவீசிய ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா மற்றும் ஓபேத் மெக்காய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 158 என்ற சுலபமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் – பட்லர் ஓபனிங் ஜோடி 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு நல்ல அடித்தளமிட்டது.

- Advertisement -

பெங்களூரு வெளியேற்றம்:
அதில் ஜெய்ஸ்வால் 21 (13) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 (21) தேவ்தூத் படிக்கள் 9 (12) என சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். ஆனாலும் மறுபுறம் தொடக்க வீரராக களமிறங்கிய பெங்களூரு பவுலர்களுக்கு கருணை காட்டாமல் சொல்லி அடித்த ஜோஸ் பட்லர் 10 பவுண்டரி 6 சிக்சருடன் இந்த வருடத்தில் 4-வது சதத்தை பதிவு செய்து 106* (60) ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் பினிஷிங் கொடுத்தார். அதனால் 18.1 ஓவரில் 161/3 ரன்களை எடுத்த ராஜஸ்தான் சாம்பியன் பட்டம் வென்ற 2008க்கு பின் 13 வருடங்கள் கழித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

Jos Buttler vs RCB

அதனால் மே 29இல் நடைபெறும் குஜராத்துக்கு எதிரான மாபெரும் இறுதி போட்டியில் களமிறங்கும் அந்த அணி 2-வது கோப்பையை வெல்ல போராட உள்ளது. மறுபுறம் இந்த முக்கியமான போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் போராடாமல் தோல்வியடைந்த பெங்களூரு முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவை மீண்டும் நிஜமாக்காமல் பரிதாபத்துடன் வெளியேறியது.

- Advertisement -

சிராஜ் மோசம்:
வரலாற்றில் இதுபோல நட்சத்திர வீரர்கள் இருந்த போதிலும் முக்கியமான தருணங்களில் ஏதோ ஒரு வகையில் சொதப்பும் பெங்களூரு கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறுவது சகஜமாகிவிட்டது. இந்த குறிப்பிட்ட போட்டியில் கூட பேட்டிங்கில் விராட் கோலி போன்ற நட்சத்திரங்கள் கைகொடுத்த தவறினாலும் ரஜத் படிதார் உதவியால் 158 என்ற போராடக்கூடிய இலக்கை அந்த அணி எட்டியது. மேலும் இந்த போட்டி நடந்த அகமதாபாத் மைதானம் அளவில் பெரியது என்பதால் சிறப்பாக பந்து வீசினால் வெற்றிபெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. அதில் ஹர்ஷல் பட்டேல் மற்றும் ஜோஷ் ஹேசல்வுட் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஓரளவு சிறப்பாக பந்துவீசி வெற்றிக்கு போராடினார்கள்.

siraj

ஆனால் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 31 ரன்களை வாரி வழங்கியதால் எஞ்சிய 2 ஓவர்களை கேப்டன் டு பிளசிஸ் அவருக்கு வழங்கவில்லை. அந்த 2 ஓவர்களில் அவர் 3 சிக்ஸர்களையும் 3 பவுண்டரிகளையும் வழங்கினார். மேலும் இந்த வருடம் 15 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை 10.08 என்ற மோசமான எக்கனாமியில் எடுத்துள்ள அவர் மொத்தம் 31 சிக்ஸர்களை வழங்கியுள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்சர்களை கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. முகமத் சிராஜ் : 31, 2022*
2. வணிந்து ஹஸரங்கா : 30, 2022*
3. ட்வயன் ப்ராவோ : 29, 2018
4. யுஸ்வென்ற சஹால் : 28 மற்றும் 27*, 2015 மற்றும் 2022*

- Advertisement -

முருங்கை வேதாளம்:
மேலும் 15 போட்டிகளில்514 ரன்களையும் வாரி வழங்கியுள்ள அவர் இந்த வருடம் அதிக ரன்களை கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. முகமத் சிராஜ் : 514 (51 ஓவர்கள்)
2. பிரசித் கிருஷ்னா : 511 (62 ஓவர்கள்)
3. யுஸ்வென்ற சஹால் : 507 (64 ஓவர்கள்)

கடந்த 2017இல் அறிமுகமான இவர் பெங்களூர் அணிக்காக 2017, 2018, 2019, 2020 ஆகிய வருடங்களில் முறையே 9.21, 8.95, 9.55, 8.68 என ரன்களை வாரி வழங்கும் பவுலராக இருந்த காரணத்தால் பல ரசிகர்களால் கேலி கிண்டலுக்கு உள்ளானார். ஆனாலும் அப்போதைய கேப்டன் விராட் கோலியின் தொடர்ச்சியான ஆதரவுகளால் 2021இல் 6.78 என்ற துல்லியமான எக்கனாமியில் பந்து வீசிய அவர் அதே காரணத்துக்காக சமீபத்தில் இந்தியாவிற்காக அதிகமாக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

இதையும் படிங்க : 15 வருடங்கள் காத்திருந்து காத்திருந்து – இந்த வருடமும் ஈ சாலா கப் கிடைக்காததால் ஆர்சிபியை வெச்சு செய்யும் ரசிகர்கள்

அதனால் 7 கோடி என்ற பெரிய தொகைக்கு அந்த அணி நிர்வாகம் அவரை இந்த வருடம் தக்க வைத்திருந்தது. ஆனால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியதை போல இந்த வருடம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமாக பந்துவீசியுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Advertisement