அரிதான வீடியோ : அதே ஸ்டைல் மாறாமல் – 53 வயதிலும் உலகத் தரமான ரசீத் கானை தெறிக்க விட்ட பிரையன் லாரா

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் பிரைன் லாரா சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மகத்தான பேட்ஸ்மேன்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். கடந்த 1990ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் 2007 வரை மிகச் சிறந்த இடது கை பேட்ஸ்மனாக அந்த சமயத்தில் இருந்த கிளன் மெக்ராத் முதல் சோயப் அக்தர் வரை அத்தனை உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய 2 வகையான கிரிக்கெட்டிலும் தலா 10000க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர்.

அதிலும் குறிப்பாக முதல் தர கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து 501* ரன்கள் குவித்து வரலாறு படைத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400* ரன்கள் அடித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பேட்ஸ்மேனாக யாராலும் உடைக்க முடியாத உலக சாதனையை அசால்டாக படைத்தவர். மேலும் சுழல் மற்றும் வேகம் ஆகிய 2 வகையான பந்துகளையும் மிகச் சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய அவருடைய நுணுக்கத்தை நிறைய பயிற்சியாளர்கள் இளம் வீரர்களுக்கு பரிந்துரைப்பார்கள். அந்தளவுக்கு திறமை வாய்ந்த அவரது பேட்டிங்கை இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் எப்போதுமே ரசித்து பார்க்கக் கூடியவர்.

- Advertisement -

தெறிக்க விட்ட லாரா:
அதனாலேயே நிறைய இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாகவும் திகழும் அவர் கடந்த 2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் 2022 டி20 உலக கோப்பைக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் பங்கேற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பிரைன் லாரா வர்ணனையாளராக செயல்பட்டார். மறுபுறம் டிசம்பர் 13ஆம் தேதி முதல் துவங்கும் பிக்பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் ரசீத் கான் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளார்.

அந்த நிலையில் நேராக சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்ற அவர்கள் சர்வதேச அரங்கில் மோத வாய்ப்பில்லை என்றாலும் நட்பின் அடிப்படையில் வலைப் பயிற்சியில் மோதினால் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக போட்டி போட்டார்கள். அதை அறிந்து ஏராளமான ரசிகர்கள் அதைப் பார்க்க ஆவலுடன் கூடிய நிலையில் உலகின் நம்பர் ஒன் டி20 பந்து வீச்சாளராக கருதப்படும் ரஷீத் கானை எதிர்கொண்ட பிரைன் லாரா எந்த பந்துகளிலும் கொஞ்சமும் தடுமாறாமல் அதிரடியாக பேட்டிங் செய்தார். குறிப்பாக காத்திருந்து அடித்த ஸ்கொயர் கட் மற்றும் இறங்கி வந்து பவுண்டரி பறக்க விட்ட அவரது ஷாட்களை பார்த்து உற்சாகமான ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

மறுபுறம் தற்சமயத்தில் சிக்ஸர்களை அடித்து நொறுக்கும் எத்தனையோ காட்டடி பேட்ஸ்மேன்களை அசால்ட்டாக காலி செய்யும் நமது பவுலிங் இந்த ஜாம்பவானிடம் வேலையாகவில்லையே என்ற வகையில் ரஷித் கான் சிரித்த முகத்துடன் காணப்பட்டார். இறுதியில் இருவரும் கை கொடுத்துக் கொண்டார்கள். கடந்த 2007இல் ஓய்வு பெற்ற பிரைன் லாரா வயதானாலும் ஸ்டைல் மாறாது என்பது போல் 15 வருடங்கள் கழித்து 53 வயதில் விளையாடினாலும் கொஞ்சமும் மாறாமல் அதே பழைய சூப்பர் ஸ்டாரை போல் வெறும் 24 வயதாகும் நம்பர் ஒன் டி20 பவுலரான ரசித் கானை வெளுத்து வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த போட்டியின் முடிவில் ரஷித் கான் பேசியது பின்வருமாறு. “அவருக்கு எதிராக பந்து வீசப் போகிறேன் என்று தெரிந்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில் சுழல் பந்து வீச்சை அற்புதமாக எதிர்கொள்ளும் பிரைன் லாரா போன்ற ஒருவருக்கு பந்து வீசுவது சவாலாகும். இதில் வெற்றி தோல்வி என்பதை விட அவருக்கு எதிராக பந்து வீசியதே எனக்கு மிகப்பெரிய பெருமையாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ரோஹித் மட்டுமல்ல மேலும் 2 வீரர்கள் டெஸ்ட் தொடரில் இருந்து விலகல் – மாற்று வீரர்கள் அறிவிப்பு

அவரை எதிர்கொண்டது பற்றி லாரா பேசியது பின்வருமாறு. “இது மிகவும் வேடிக்கையாக இருந்தது. இருப்பினும் ரசித் தற்போது பார்மில் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவரைப் போன்ற பெரிய பவுலரை எதிர்கொள்வது அற்புதமானது. அது எனக்கு அதிர்ஷ்டமாகும்” என்று கூறினார்.

Advertisement