ஒரு ஓவருக்கு 5 பால் தானா? உலகக்கோப்பையில் அம்பயர்கள் செய்த மெகா தவறு – கலாய்க்கும் ரசிகர்கள்

AUs vs AFG
- Advertisement -

2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நவம்பர் 4ஆம் தேதியன்று நடைபெற்ற 38வது லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த ஆப்கானிஸ்தானை பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா எதிர்கொண்டது. அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் போராடி 168/8 ரன்கள் சேர்த்தது.

கேமரூன் கிரீன் 3 (2) ஸ்டீவ் ஸ்மித் 4 (4) டேவிட் வார்னர் 25 (18) மார்கஸ் ஸ்டோனிஸ் 25 (21) கேப்டன் மேத்தியூ வேட் 6 (8) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 54* (32) ரன்கள் விளாசி ஓரளவு காப்பாற்றினார். ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹத் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பின் 169 ரன்களை துரத்திய அந்த அணிக்கு ரஹ்மத்துல்லா குர்பாஸ் அதிரடியாக 2 பவுண்டர் 2 சிக்ஸர்களும் 30 (17) ரன்களும் குல்ஃபதின் நைப் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 39 (23) ரன்களும் குவித்து அவுட்டானார்கள்.

- Advertisement -

மெகா சொதப்பல்:
ஆனால் உஸ்மான் கானி 2 (7) இப்ராஹிம் ஜாட்ரான் 26 (33) கேப்டன் முகமது நபி 1 (2) நஜிபுல்லா ஜாட்ரான் 0 (2) என முக்கிய வீரர்கள் மிடில் ஓவர்களில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 103/6 என ஆப்கானிஸ்தான் தடுமாறியது. அதனால் குறைந்தது 60 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது கடைசி நேரத்தில் உள்ளே புகுந்த ரஷீத் தான் 3 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 48* (23) ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார். ஆனாலும் 20 ஓவர்களில் 164/7 ரன்கள் மட்டுமே எடுத்த ஆப்கானிஸ்தான் போராடி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

அதன் காரணமாக இப்போட்டியில் வென்றும் பயனில்லாததை போல் நாளைய போட்டியில் இங்கிலாந்தை இலங்கை தோற்கடித்தால் மட்டுமே அரையிறுதிக்கு சென்று கோப்பையை தக்க வைக்க முடியும் என்று அசாத்தியமான பரிதாப நிலைமைக்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டுள்ளது. அதை விட இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு 4வது ஓவரை நவீன்-உல்-ஹக் வீசினார். அதில் 4வது பந்தை மிட்சேல் மார்ஷ் அடித்த பின் ஆப்கானிஸ்தான் ஃபீல்டர்கள் ஓவர் த்ரோ செய்ததால் ஆஸ்திரேலியா 3 ரன்களை எடுத்தது.

- Advertisement -

அந்த பரபரப்பில் 5வது பந்தை டேவிட் வார்னருக்கு எதிராக வீசிய நவீன்-உல்-ஹக் ரன் எதுவும் கொடுக்கவில்லை. அப்போது அதே பரபரப்பில் அந்த ஓவர் முடிந்து விட்டதாக நினைத்துக் கொண்டு கடைசிப் பந்தை வீசாமலேயே அவர் சென்று விட்டார். ஆனால் களத்தில் ஒவ்வொரு பந்தையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கும் 2 அம்பயர்களும் அதை கவனிக்க தவறினார்கள். சரி அவர்கள் தான் விட்டுவிட்டார்கள் என்று பார்த்தால் பெவிலியனில் இருக்கும் 3வது நடுவரும் ஒட்டுமொத்த போட்டியையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் மேட்ச் ரெஃபரி எனப்படும் 4வது நடுவரும் அதை கவனிக்காமல் கோட்டை விட்டார்கள்.

அவர்கள் தான் விட்டுவிட்டார்கள் என்று பார்த்தால் மைதானத்தில் அதிகாரப்பூர்வமாக பிரம்மாண்ட ஸ்கோரை போர்ட் கட்டிடத்தில் ஸ்கோரை அப்டேட் செய்பவர்களும் நடுவர்கள் எதுவும் சொல்லாததால் அந்த தருணத்தை கவனிக்க தவறினார்கள். ஆனால் அதை உன்னிப்பாக கவனித்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் “என்னப்பா ஐசிசி உலகக் கோப்பையில் கூட இவ்வளவு பெரிய தவறு நடந்திருக்கிறது” என்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

இதையும் படிங்க : எப்படியாவது செமி பைனல் போலாம்னு நெனச்ச ஆஸ்திரேலியாவின் வாயில் மண்ணை தூவிய – ஆப்கானிஸ்தான் (நடந்தது என்ன?)

சமீப காலங்களில் ஐபிஎல் உட்பட முக்கிய தொடர்களிலும் சர்வதேச இருதரப்பு தொடர்களிலும் இது போன்ற குளறுபடிகள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. ஆனால் இவ்வளவு பெரிய டெக்னாலஜி வளர்ந்த நவீன கிரிக்கெட்டிலும் அதுவும் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பையிலேயே இவ்வளவு பெரிய தவறு அம்பயர்களின் கவனக்குறைவால் நடந்தது ரசிகர்களை அதிர்ச்சியிலும் அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ளது.

Advertisement