ஆசிய கோப்பை அணியில் மெகா குழப்பம், 8 நிமிடங்கள் காணாமல் போன சுப்மன் கில் – கலாய்த்த வாசிம் ஜாபர், நடந்தது என்ன?

- Advertisement -

ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கப் போகும் 2023 ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 30 முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஒருநாள் போட்டிகளாக நடைபெறும் இந்த தொடருக்கான அணியை பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் முன்னதாகவே அறிவித்துவிட்ட நிலையில் முக்கிய வீரர்களின் காயத்தால் இந்தியா மட்டும் தாமதிப்படுத்தி வந்தது. அந்த நிலைமையில் ஒரு வழியாக ஆகஸ்ட் 21ம் தேதி டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் புதிய தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்ற அஜித் அகர்கார் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தனர்.

அதை ஆசிய கோப்பையை ஒளிபரப்பப்போகும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்தது. அப்போது அஜித் அகர்கர் அணியை வெளியிடுவதற்கு முன்பாகவே 17 பேர் கொண்ட இந்திய அணியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் நேரலையில் ஒளிபரப்பியது. அதில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்கள் என்று காண்பிக்கப்பட்டது மொத்த ரசிகர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

ஆரம்பத்திலேயே குழப்பமா:
ஏனெனில் கடந்த ஒரு வருடமாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் 2022க்குப்பின் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய கிரிக்கெட் வீரராக சாதனை படைத்து ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்துள்ளார். மேலும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவருக்கு 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவதற்காக தற்போது நடைபெற்று வரும் அயர்லாந்து டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் 1.26 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பிய அந்த அணியில் அவர் இடம் பெறாதது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் சமூக வலைதளங்களில் தேர்வுக்குழுவினரை வழக்கம் போல ரசிகர்கள் வறுத்தெடுத்ததால் அந்த செய்தி உடனடியாக ட்ரெண்டிங்கானது. அப்போது அதை கவனித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் தங்களுடைய ஒளிபரப்பில் ஏற்பட்ட டெக்னிக்கல் தவறு காரணமாக சுப்மன் கில் இடம் பெறாததை கண்டறிந்தது.

- Advertisement -

அதை தொடர்ந்து உடனடியாக அப்டேட் செய்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சரியாக 1.35 மணிக்கு அகர்கர் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் செய்தியாளர் சந்திப்பை துவங்கிய போது 8 நிமிடங்கள் காணாமல் போன சுப்மன் கில்லையும் சேர்த்து சரியான அணியை ஒளிபரப்பியது. அப்படி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் அறிவிப்பதற்கு முன்பாகவே அவசரமாக இந்திய அணியை தவறாக அறிவித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியை தற்போது சமூக வலைதளங்களில் வாசிம் ஜாபர் போன்ற முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர்.

மேலும் தேர்வுக்குழு தலைவர் வெளியிடுவதற்கு முன்பாக எப்படி இந்திய அணி விவரம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நிறுவனத்தின் கைகளுக்கு சென்றது? என்ன தான் ஒளிபரப்பு உரிமையை வாங்கியிருந்தாலும் அதற்காக இந்திய அணியையும் முன்கூட்டியே அறிவிக்கும் உரிமையையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு விற்று விட்டீர்களா? என பிசிசிஐயை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அத்துடன் ஆரம்பத்திலேயே இவ்வளவு பெரிய குழப்பம் அரங்கேரியுள்ளதால் இந்த ஆசிய கோப்பையில் என்ன நடக்கப் போகிறதோ என்றும் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

- Advertisement -

அந்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தேர்வாகியுள்ளது ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. மேலும் விராட் கோலி, இசான் கிசான், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் இடது கை பேட்ஸ்மேன் பிரச்சனையை தீர்ப்பதற்காக திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் சுமாராக செயல்பட்டும் சூரியகுமார் யாதவ் நேரடியாக தேர்வாகியுள்ளார்.

இதையும் படிங்க:IND vs IRE : வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அசத்தும் அர்ஷ்தீப் சிங் – பும்ராவை முந்தி டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை

ஆனால் சஞ்சு சாம்சன் பேக்-அப் வீரராக மட்டுமே தேர்வாகியுள்ள நிலையில் ஸ்பின்னர்களாக குல்தீப், அக்ஸர் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட்டு சஹால் கழற்றி விடப்பட்டுள்ளார். அதே போல பும்ரா, ஷமி, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, தாகூர் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வாகியுள்ளனர்.

Advertisement