
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனின் பேட்டிங் ஆர்டர் குறித்து தான் கடந்த சில வாரங்களாகவே அதிகளவு பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் கடந்த ஓராண்டாகவே டி20 அணியின் துவக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் இணைந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக வெளியான அறிவிப்பில் சுப்மன் கில் மீண்டும் டி20 அணிக்கு துணை கேப்டனாக திரும்புகிறார் என்று அறிவிக்கப்பட்டதால் அவரே தற்போது அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். இதன் காரணமாக துவக்க வீரருக்கான தனது இடத்தை இழந்த சஞ்சு சாம்சன் தற்போது மிடில் ஆடரில் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார்.
அந்தவகையில் ஆசிய கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத சஞ்சு சாம்சன் ஓமன் அணிக்கு எதிரான போட்டியின் போது மூன்றாவது இடத்தில் களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார்.
அதேவேளையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் ஐந்தாவது இடத்தில் களமிறங்கிய அவர் 17 பந்துகளை சந்தித்து 13 ரன்களை மட்டுமே அடித்து ஏமாற்றத்தை அளித்திருந்தார். அதனால் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் விளையாடி பழக்கப்பட்டவர் கிடையாது என்பதனால் அவருக்கு மூன்றாம் இடத்திலேயே பேட்டிங் செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்று பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டாம் என்றும் ஐந்தாவது இடத்திலேயே தொடர்ந்து விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது : சஞ்சு சாம்சன் ஐந்தாவது இடத்தில் விளையாட வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன்.
ஏனெனில் அந்த இடத்தை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை ராஜஸ்தான அணியிலும் சரி, இந்திய அணியிலும் சரி அவர் ஐந்தாவது இடத்தில் பெரியளவில் விளையாடியது கிடையாது. ஆனால் இனிவரும் போட்டிகளில் அவர் அந்த இடத்தில் விளையாடி பழகிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் ஒரு தரமான வீரர்.
இதையும் படிங்க : ஷாஹீன் அப்ரிடியை நெட் பவுலர் மாதிரி ஈஸியா அடிக்கிறாரு.. 22 வயது இந்திய வீரரை பாராட்டிய – சுனில் கவாஸ்கர்
அதுமட்டுமின்றி அவர் ஒரு க்ளீன் ஸ்ட்ரைக்கர் என்பதனால் பின் வரிசையிலும் அவரால் மிகச் சிறப்பாக விளையாடி போட்டிகளை முடித்துக் கொடுக்க முடியும். இனியும் சஞ்சு சாம்சன் மூன்றாவது இடத்தில் களமிறங்கி சாதிக்கப்போவது எதுவும் கிடையாது. அதனால் ஐந்தாவது இடத்திலேயே களமிறங்கி அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரராக தான் பார்க்க விரும்புவதாக வாசிம் ஜாபர் பேசியது குறிப்பிடத்தக்கது.