கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 14-வது போட்டியில் விளையாடிய இந்திய அணியானது பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் ஒருமுறை வெற்றியை பதிவு செய்திருந்தது. ஏற்கனவே லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை மிக எளிதாக வீழ்த்தியிருந்த இந்திய அணியானது சூப்பர் ஃபோர் சுற்றின் முதல் ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஷாஹீன் அப்ரிடியை நெட் பவுலர் மாதிரி இவர் அடிச்சாரு : சுனில் கவாஸ்கர்
அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றிபெற்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக ஃபர்கான் 58 ரன்களையும், சயீம் அயூப் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா 21 ரன்களையும் குவித்திருந்தனர்.
பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் அணியை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்களையும், சுப்மன் கில் 47 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர்.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற மிக முக்கியமான காரணமாக துவக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இருந்த வேளையில் மிடில் ஆர்டரில் களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மாவை இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியை வீழ்த்த சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் சிறப்பான அடித்தளத்தை அமைத்தாலும் மிடில் ஆர்டரில் விளையாடிய திலக் வர்மா பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடியை ஒரு நெட் பவுலர் போல அங்கும் இங்கும் அடித்து போட்டியை முடித்தது எனக்கு மகிழ்ச்சியை தந்தது.
இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரிலும் ரிஷப் பண்ட் இடம்பெற மாட்டார் என தகவல்.. என்ன ஆனது? – பேக்கப் யார்?
ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நட்சத்திர வீரராக வளம் வரும் ஒருவருக்கு எதிராக அலட்சியமாக ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் அடித்து திலக் வர்மா போட்டியை முடித்து கொடுத்தார். இதன் மூலம் அவரது திறமை என்ன? என்பது பலருக்கும் தெரியவந்துள்ளது என திலக் வர்மாவை பாராட்டியுள்ளார். இந்த போட்டியில் 19 பந்துகளை சந்தித்த திலக் வர்மா 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என ஆட்டமிழக்காமல் 30 ரன்களை குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.



