சீரிஸ் ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ள ஆஸ்திரேலியாவை அலற விட்டிங்களே அஷ்வின் – 2 முன்னாள் வீரர்கள் பாராட்டு

Ravichandran Ashwin David Warner
- Advertisement -

வரலாற்று சிறப்பு மிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் பிப்ரவரி 9 முதல் நாக்பூரில் துவங்குகிறது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளில் வென்று வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் மட்டுமே இந்தியா களமிறங்குகிறது. ஆனால் ஏற்கனவே ஃபைனல் வாய்ப்பு உறுதியாகி விட்ட காரணத்தால் 2004க்குப்பின் இந்தியாவில் தொடர்ந்து டெஸ்ட் தொடர்களில் தோற்று வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்கும் வெறியுடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

அதற்காக கடந்த 2017 இந்திய சுற்றுப்பயணத்தில் பயிற்சி போட்டிகளில் ஒரு வகையான பிட்ச்சும் முதன்மை போட்டிகளில் ஒரு வகையான பிட்ச்சும் கொடுத்திருந்தால் இம்முறை இந்தியாவிடம் நம்பிக்கையும் நியாயத்தையும் எதிர்பார்க்கவில்லை என்று ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஸ்லெட்ஜிங் போரை துவக்கினார்கள். மேலும் கடந்த முறை போலவே இம்முறையும் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்பதால் இந்தியா தான் 2 – 1 (4) என்ற கணக்கில் இத்தொடரை வெல்லும் என்று முன்னாள் வீரர் இயன் ஹீலி வேண்டுமென்றே வம்பிழுத்தார்.

- Advertisement -

அலற விடும் அஷ்வின்:
அதை விட இந்த தொடரில் மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரவிச்சந்திரன் அஷ்வினை சிறப்பாக எதிர்கொள்வதற்காக பிக்பேஷ் தொடரின் போதே தேவையான திட்டங்களை வகுத்து விட்டதாக மார்னஸ் லபுஸ்ஷேன், மாட் ரென்ஷா போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் வெளிப்படையாக பேசினார்கள். அதன் உச்சகட்டமாக அஷ்வின் போலவே பந்து வீசும் மகேஷ் பிதியா எனும் லோக்கல் பவுலரை தேடிக் கண்டுபிடித்து பெங்களூருவில் ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

மொத்தத்தில் 11 இந்திய வீரர்களை காட்டிலும் அஷ்வினை மட்டும் குறி வைத்து ஆஸ்திரேலிய அணியினர் தயாராகி வருகிறார்கள். அதை பார்த்த முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் “முதல் டெஸ்ட் துவங்குவதற்கு இன்னும் 5 நாட்கள் இருக்கிறது ஆனால் அதற்குள் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆஸ்திரேலியாவின் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறார்” என்று தனது ட்விட்டரில் கலகலப்பாக ஆஸ்திரேலியாவை கலாய்த்து அஷ்வினை பாராட்டியுள்ளார். அதே போல் “பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் பந்து வீசுவதற்கு முன்பாகவே ரவிச்சந்திரன் அஷ்வின் விளையாடத் துவங்கி விட்டார். இதை மிகவும் விரும்புகிறேன் என்று மற்றொரு முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

அப்படி ஆஸ்திரேலிய அணியினர் அஷ்வினை குறி வைப்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. ஏனெனில் ஆரம்ப காலங்களில் வெளிநாடுகளில் தடுமாறிய அஷ்வின் தற்போது அனுபவத்தால் மிகப்பெரிய முன்னேற்றங்களை கண்டு கடந்த பார்டர் – கவாஸ்கர் தொடரில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித்தை 3 முறை சொற்ப ரன்களில் காலி செய்தார். மேலும் தற்போது நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் மார்னஸ் லபுஸ்ஷேனுக்கும் கடந்த தொடரில் மிகப்பெரிய சவாலை கொடுத்தார்.

அத்துடன் ஏற்கனவே இடது கை பேட்ஸ்மேன்களை அதிகமாக அவுட்டாக்கி அஷ்வின் உலக சாதனை படைத்துள்ள நிலையில் தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டரில் டேவிட் வார்னர், கவாஜா உட்பட பாதிக்கும் மேற்பட்ட வீரர்கள் இடது கை பேட்ஸ்மேன்களாக இருக்கின்றனர். அதனாலேயே ஆரம்பத்திலேயே அஷ்வினை மனதளவில் சாய்க்க வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்யத் தொடங்கி விட்டார்கள்.

இதையும் படிங்க: IND vs AUS : மேலும் ஒரு வீரருக்கு ஏற்பட்ட காயம். முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகல் – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ

ஆனால் அதற்கு அசராத அஷ்வின் ஸ்லெட்ஜிங் செய்வது ஆஸ்திரேலியாவுக்கு என்ன புதுசா? வருவதை பார்த்துக் கொள்வோம் என்று ஏற்கனவே தனது யூடியூப் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அப்படி இப்போதே அனல் பறக்கும் இந்த தொடருக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement