ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 129/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஃபர்ஹான் 40, ஷாஹின் அப்ரிடி 33* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 2, அக்சர் படேல் 2, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய இந்திய அணி நேர்த்தியாக பேட்டிங் செய்து 15.5 ஓவரிலேயே 131/3 ரன்களை எடுத்து தங்களுடைய 2வது வெற்றியைப் பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 31, கேப்டன் சூரியகுமார் யாதவ் 47*, திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஆயுப் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
படிக்க முடியாத பாகிஸ்தான்:
இந்நிலையில் அப்போட்டியில் இந்திய பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் 63 பந்துகளில் ரன்கள் எடுக்காததே தங்களுடைய தோல்விக்கு காரணமானதாக ஜாம்பவான் வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். குறிப்பாக குல்தீப் யாதவின் சுழல் பந்துகளை படிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திண்டாடியதாகவும் அவர் சாடியுள்ளார். இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
“குல்தீப் பந்து வீசும் விதத்தை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால் படிக்க முடியவில்லை. அது பற்றி நான் போட்டிக்கு முந்தைய நிகழ்ச்சியில் கிரேட் பேட்ஸ்மேன் கவாஸ்கரிடம் பேசினேன். அப்போது குல்தீப்பின் முன்னங்கையை படிக்காத வரை உங்களால் அவர் எம்மாதிரியான பந்துகளை வீசுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியாது என கவாஸ்கர் தெரிவித்தார். அவர் சொன்னதே நடந்தது”
வாசிம் அக்ரம் விமர்சனம்:
“குல்தீப்புக்கு எதிராக ஒவ்வொரு 2வது பந்திலும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஸ்வீப் அடித்தார்கள். அப்படியானால் நீங்கள் அவருக்கு எதிராக எதையுமே படிக்கவில்லை என்று அர்த்தம். பாகிஸ்தான் தங்களுடைய ஆட்டத்தில் 63 டாட் பந்துகளை விளையாடியது. அப்படியானால் 10 ஓவருக்கு மேல் அவர்கள் டாட் பந்துகளை மட்டுமே எதிர்கொண்டுள்ளனர்”
இதையும் படிங்க: ஐசிசியில் இந்தியா மீது பாகிஸ்தான் அதிரடி புகார்.. பெருந்தன்மை பற்றி தலைவர் விமர்சனம்.. வெளியான அறிக்கை
“அந்தளவுக்கு சிறப்பாக பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு பாராட்டுக்கள். ஹசன் நவாஸ், ஹரிஷ், உங்களுடைய கேப்டன் ஹாரிஸ் ஆகிய அனைவருமே திறமையான வீரர்கள். ஆனால் நீங்கள் சூழ்நிலையைப் படித்து உங்களுடைய பவுலரை தேர்ந்தெடுத்து விளையாட வேண்டும். ஆனால் அவர்கள் அனைவருமே 150 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக மட்டுமே விளையாட முயற்சித்தனர்” என்று கூறினார்.



