ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி 14ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்பது பலருடைய கணிப்பாக இருக்கிறது. ஏனெனில் ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் இந்தியா ஏற்கனவே 8 முறை ஆசியக் கோப்பைகளை வென்று நடப்புச் சாம்பியனாக திகழ்கிறது.
2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் பாகிஸ்தானை விட தரமான வீரர்கள் நிறைந்துள்ளார்கள். இந்நிலையில் அவ்விரு அணிகளை பொறுத்த வரை பாகிஸ்தானை விட இந்தியா வலுவான அணி என்று அந்நாட்டின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். அதே சமயம் இளம் வீரர்களுடன் களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சமமான போட்டியை கொடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமமான போட்டி:
மறுபுறம் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சமாளிப்பது மிகவும் கடினம் என்று தெரிவிக்கும் அக்ரம் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அது போட்டி மிகுந்த போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம் இரு அணிகளின் வீரர்களை ஒப்பிடும் போது இந்தியா வலுவாகத் தெரிகிறது. இருப்பினும் சமீபத்தில் முத்தரப்பு தொடரை வென்ற பாகிஸ்தான் நல்ல நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்”
“எனவே அவர்கள் நல்ல போட்டியைக் கொடுப்பார்கள். தற்போதைய இளம் பாகிஸ்தான் அணியாக நல்ல கேப்டன் மற்றும் பயிற்சியாளர் தலைமையில் விளையாடுகிறது. அதனால் அவர்கள் செட்டிலாக கொஞ்சம் நேரம் தேவை. ஒரு தேசமாக நாம் எதிர்பார்க்கும் வேகமான முடிவு இன்னும் கிடைக்கவில்லை. முகமது ஹாரிஸ் நல்ல ஃபார்மில் இல்லாததும் வழக்கமான ஓப்பனிங்கில் களமிறங்காததும் பாகிஸ்தான் அணியின் சில பிரச்சனைகளில் ஒன்றாகும்”
இந்தியா வலுவான அணி:
“ஹாரிஸ் போன்ற ஓப்பனிங் பேட்ஸ்மேன் மிடில் ஆர்டரில் விளையாடுவது அசாத்தியத்துக்கு நெருக்கமானது. அதே போல 2 பகுதி நேர பவுலர்கள் உங்களுடைய 5வது பவுலராக இருக்க முடியாது. உங்களுடைய 2 பகுதி நேர பவுலர்களையும் எதிரணி அட்டாக் செய்வார்கள். குல்தீப் – வருண் ஆகியோர் நல்ல பவுலர்கள் அவர்களைப் படிப்பது மிகவும் கடினம்”
இதையும் படிங்க: எனக்கு என்டே கிடையாது.. ஒருநாள் போட்டிகளுக்கு கம்பேக் கொடுப்பது குறித்து ரோஹித் சர்மா பதிவு – விவரம் இதோ
“கடந்தப் போட்டியில் குல்தீப் மிகவும் ஆபத்தாகவும் துல்லியமாகவும் செயல்பட்டார். உச்சத்தில் இருக்கும் பும்ராவை இந்தியா சிறப்பாக கையாள்கிறார்கள். இன்றைய காலத்தில் இருக்கும் பவுலர்களுக்கு பாராட்டு கொடுக்க வேண்டும். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதால் அவர்கள் மீது அதிகப்படியான அழுத்தம் இருக்கிறது” என்று கூறினார்.



