
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடிய அந்த அணி 14 போட்டிகளில் 7 வெற்றியும் 7 தோல்வியும் பெற்று 5வது இடத்தை மட்டுமே பிடித்தது. குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வியை சந்தித்தது.
அதனால் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தன்னுடைய ஐபிஎல் கேரியரை வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்யாமலேயே ஓய்வு பெற்றதாக நம்பப்படுகிறது. ஏனெனில் 42 வயதாகும் அவர் ஏற்கனவே சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை வருங்காலத்தை கருத்தில் கொண்டு ருதுராஜ் கையில் ஒப்படைத்தார். அத்துடன் சாதாரண விக்கெட் கீப்பராக முழங்கால் வலியால் அவர் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்தார்.
வாசிம் அக்ரம் கணிப்பு:
அதனால் இந்த வருடம் பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதி பெற்று சேப்பாக்கத்தில் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் கோப்பையை வென்று அவரை வெற்றிகரமாக வழியனுப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் சிஎஸ்கே தோற்றதால் இதுவே தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சென்னை மண்ணில் கேரியர் முடியாததால் அடுத்த வருடம் தோனி விளையாடுவார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் கேரியரை தோனி நிறைவு செய்து விட்டதாகவே தாமும் கருதுவதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிங் அக்ரம் தெரிவித்துள்ளார். அத்துடன் பெங்களூரு அணிக்கு எதிராக அடித்த 110 மீட்டரை தாண்டி வரலாற்றின் மிகச்சிறந்த வீரராக தோனியின் மரபு நின்று பேசும் என்றும் வாசிம் அக்ரம் பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த ஐபிஎல் தொடருடன் தோனி முடித்து விட்டார் என்பதே என்னுடைய உள்ளுணர்வாக இருக்கிறது”
“அவரைப் போன்ற வீரர்கள் வாழ்வில் ஒருமுறை மட்டுமே வருவார்கள். எனவே ஓய்வு என்பது அவரை பொறுத்ததாகும். அவருடைய மரபு வெறும் 110 மீட்டர் சிக்சரில் மட்டும் இல்லை. அதையும் தாண்டியது. இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் நிறைய செய்துள்ளார். ஒரு கேப்டனாக அவர் அமைதியை கொண்டு வந்தார். கேப்டனாக விளையாடிய ஆட்டங்கள், ஃபினிஷராக செயல்பட்ட விதம், இளம் வீரர்களை வளர்த்தெடுத்த விதம், நிலைத்தன்மையை காட்டிய விதம் ஆகியவை தான் அவருடைய பாரம்பரியமாக இருக்கும்”
இதையும் படிங்க: எதுவுமே டிஸ்கவுன்ட்ல கிடைக்காது.. 42 வயதிலும் இளம் வீரர்களுக்கு நிகராக விளையாடுவது பற்றி.. தோனி ஓப்பன்டாக்
“ஆனால் ஆம் ரசிகர்களுக்கு கடைசியாக அவர் அடித்த 110 மீட்டர் சிக்ஸர் நினைவில் நீங்காத புகைப்படமாக இருக்கும். இந்த வயதிலும் அவருடைய ஃபிட்னஸ் அற்புதமாக இருக்கிறது” என்று கூறினார். மொத்தத்தில் இந்த வருடம் 14 போட்டிகளில் தோனி 161 ரன்களை 220.54 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து இளம் வீரர்களுக்கு நிகராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.