உங்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கு, 2023 உ.கோ அவங்க தான் ஜெய்ப்பாங்க – வாசிம் அக்ரம் உற்சாக பேட்டி

- Advertisement -

ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் கோப்பையை வெல்வதற்காக மோதுகின்றன. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் 10 வருடங்களாக சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடையே கோப்பையை வெல்வதற்கு கடினமான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு சவாலாக நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அண்டை நாடான பாகிஸ்தான் கோப்பையை வெல்வது மிகவும் கடினமாகவே பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் ஆசிய கோப்பை விவகாரத்தில் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்க மாட்டோம் என்று அடம் பிடித்து வந்த பாகிஸ்தான் கொஞ்சம் கொஞ்சமாக தனது நிலைப்பாடுகளில் இருந்து வெளியேறி விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது.

வாசிம் அக்ரம் நம்பிக்கை:
அந்த நிலையில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் தவிர்த்து சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் தடுமாறும் பாகிஸ்தான் அணியில் சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் அசத்துவதற்கு சடாப் கான் தவிர தரமான ஸ்பின்னர்களும் இல்லை. அதை விட இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இந்தியாவின் கால சூழ்நிலைகளை நன்கு தெரிந்து வைத்துள்ளனர். ஆனால் கடந்த 10 வருடமாக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் ஒருமுறை கூட இந்திய மண்ணில் விளையாடியதில்லை.

PAK vs NZ Pakistan

அதனால் நிச்சயமாக இங்குள்ள கால சூழ்நிலைகள் அந்த அணிக்கு சற்று புதிதாகவும் சவாலாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் கோப்பையை வெல்வது கடினமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் தங்கள் நாட்டில் நிலவும் அதே சூழ்நிலை தான் இந்தியாவில் இருக்கும் என்று தெரிவிக்கும் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் நிச்சயமாக அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எங்களிடம் சிறந்த அணி இருக்கிறது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தும் அளவுக்கு தரமான வீரர்களை கொண்ட எங்களது அணியை நவீன கிரிக்கெட்டில் மகத்தானவராக கருதப்படும் பாபர் அசாம் வழி நடத்த உள்ளார். எனவே காயங்களை சந்திக்காமல் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தங்களுடைய திட்டத்தை பின்பற்றி இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடுவார்கள். ஏனெனில் எங்கள் நாட்டில் நிலவும் கால சூழ்நிலைகளே இந்திய துணை கண்டத்திலும் இருக்கும்”

Wasim-Akram

“மேலும் பாபர் போன்ற சிறந்த வீரர் எங்களது அணியில் இருக்கிறார். அவர் செய்வதையும் விளையாடும் விதத்தையும் மொத்த நாடும் பின்பற்றுகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் மக்களை மைதானத்திற்கு வரவைத்து ஆர்வத்துடன் போட்டியை பார்க்கும் அளவுக்கு அவருடைய ஆட்டம் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக இந்த உலகிலேயே அவர் தான் மிகவும் அழகான கவர் டிரைவ் அடிக்கும் திறமையைக் கொண்டுள்ளார் என்று நினைக்கிறேன்” என கூறினார்.

இதையும் படிங்க:சம்பள உயர்வுடன் இந்திய அணியில் தேர்வுக்குழு தலைவராகும் – 2007 டி20 வென்ற நட்சத்திர முன்னாள் வீரர்

முன்னதாக 1992 உலக கோப்பையை ஆஸ்திரேலிய மண்ணில் வென்ற பாகிஸ்தான் கடந்த 2022 டி20 உலக கோப்பையில் கடைசி நேரத்தில் தென்னாப்பிரிக்கா தோற்று வெளியேறிய அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி ஃபைனல் வரை சென்று அசத்தியது. அந்த நிலையில் இம்முறை நம்பிக்கை நட்சத்திரம் ஷாஹீன் அப்ரிடி முழுமையாக குணமடைந்து விளையாடுவார் என்பதால் தங்களை புறக்கணிக்கும் இந்திய மண்ணில் கோப்பையை வென்று சரித்திரம் படைக்க பாகிஸ்தான் போராடும் என அந்நாட்டு ரசிகர்கள் நம்புகின்றனர்.

Advertisement