
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியன் இந்தியா தங்களது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. துபாயில் நேற்று நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய அமீரகத்தை 57 ரன்களுக்கு இந்தியா சுருட்டி வீசியது. அதிகபட்சமாக அலிசான் சராஃபு 22, கேப்டன் முகமது வாசிம் 19 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4, சிவம் துபே 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய இந்தியா 4.3 ஓவரிலேயே 60/1 ரன்களை எடுத்து எளிதாக வென்று ஆசியக் கோப்பையை வெற்றிகரமாகத் துவங்கியது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 30, சுப்மன் கில் 20*, கேப்டன் சூரியகுமார் 7* ரன்கள் எடுத்தனர்.
முன்னதாக இத்தொடரில் சுப்மன் கில் மீண்டும் இந்திய டி20 அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். ஒருநாள் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்திய அவருக்கு இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பில் அவர் தொடர்ந்து 150 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடத் தடுமாறினார்.
அதனால் அவரை கழற்றி விட்ட இந்திய அணி அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பில் அவர்கள் இருவருமே அதிரடியாக விளையாடி அசத்தினார்கள். ஆனால் தற்போது சுப்மன் கில்லை பிசிசிஐ தங்களுடைய வருங்கால கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது. குறிப்பாக டெஸ்ட் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் இங்கிலாந்தில் 754 ரன்களை அடித்து இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார்.
அதனால் டி20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை கழற்றி விட்டு சாம்சனை மிடில் ஆர்டரில் களமிறக்கியுள்ள இந்திய அணி அவருக்கு ஓப்பனிங்கில் வாய்ப்பளித்துள்ளது. அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் முகமது கான் வீசிய 2வது ஓவரின் கடைசி பந்தில் இறங்கி வந்த கில் தன்னுடைய மணிக்கட்டை சுழற்றி ஆஃப் சைட் திசையில் அட்டகாசமாக சிக்ஸரை பறக்க விட்டார். அதை நேரலையில் பார்த்த பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் மெய்மறந்து சுப்மன் கில்லை பாராட்டினார்.
இதையும் படிங்க: உலக சாம்பியன்னா சும்மாவா? அவர் இல்லாம ஜெய்ச்சதே இந்தியாவின் திறமை.. அமீரக கோச் ராஜ்புட் பாராட்டு
இது பற்றி அவர் நேரலையில் வர்ணித்தது பின்வருமாறு. “அந்த ஷாட்டை பாருங்கள், அந்த ஷாட்டை பாருங்கள். அது நம்ப முடியாதது. பந்து ஸ்டேண்ட்டில் போய் விழுந்துள்ளது. அது வெறும் மணிக்கட்டை திருப்பி சுண்டி விட்டு அடிக்கப்பட்ட நம்ப முடியாத ஷாட்” என்று பாராட்டினார். இதைத் தொடர்ந்து தமது இடத்தை தக்க வைக்க சுப்மன் கில் அடுத்து வரும் போட்டிகளிலும் பெரிய ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.