காயத்திலிருந்து குணமடைந்த தமிழக வீரர் – கவுண்டி தொடரில் விளையாட ஒப்பந்தம், ரசிகர்கள் வாழ்த்து

Sundar-1
- Advertisement -

கிரிக்கெட்டில் நாட்டுக்காக நெடுநாட்கள் விளையாடி பெருமை சேர்க்க வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்துடன் களமிறங்கும் அத்தனை வீரர்களாலும் குறைவான வாய்ப்பு அல்லது சுமாரான ஆட்டம் போன்ற அம்சங்களால் அந்த இலக்கை அடைய முடிவதில்லை. அதிலும் சிலருக்கு திறமை இருந்தும் துரதிஷ்டவசமாக களத்தில் ஏற்படும் காயங்களால் சாதிக்க முடியாமல் போகும் பரிதாப நிலை ஏற்படும். அதில் ஒருசில வீரர்கள் எத்தனை காயங்களை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டெழுந்து மீண்டும் மீண்டும் விளையாடுவதற்காக போராடிக் கொண்டே இருப்பார்கள். அந்த வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார்.

உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி அண்டர்-19 இந்திய அணிக்காக விளையாடிய இவருக்கு கடந்த 2017இல் 18 வயதிலேயே சீனியர் இந்தியா அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் அடுத்த சில மாதங்களில் 18 வருடம் 80 நாட்களில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி இந்தியாவுக்காக இளம் வயதில் டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். ஆனால் ஒருசில போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போது காயமடைந்த இவர் 2018இல் இலங்கையில் நடந்த நிதஹாஸ் கோப்பையில் இந்தியாவுக்காக மீண்டும் விளையாடினார். அதன் பின் மீண்டும் காயத்தால் விலகுவதும் அதிலிருந்து மீண்டு இந்திய டி20 அணியில் விளையாடும் போதும் என்று ஒருசில வருடங்கள் உருண்டோடின.

- Advertisement -

ஐபிஎல் காயம்:
2017இல் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் தனது 2-வது ஒருநாள் போட்டியை 4 வருடங்கள் கழித்து 2022 பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தான் விளையாடினார் என்பதிலிருந்து அவரின் காயம் – கம்பேக் கதைகளை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அதை தொடர்ந்து ஐபிஎல் 2022 தொடரில் ஹைதராபாத் அணிக்காக 8.75 கோடி என்ற பெரிய தொகைக்கு விளையாடிய அவரை மீண்டும் காயம் காயப்படுத்தியது. அதனால் 9 போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற அவர் 101 ரன்களையும் 6 விக்கெட்டுகளையும் எடுத்து காயத்தால் பாதியிலேயே வெளியேறினார்.

ஆனால் நமக்கு என்ன காயம் புதிதா என்ற வகையில் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய அவர் கடந்த ஒரு மாதமாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் அதிலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அதனால் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்க தொடரை தவறவிட்ட அவர் அடுத்ததாக நடைபெறும் அயர்லாந்து தொடரிலும் இடம் பெறவில்லை.

- Advertisement -

கவுன்டியில் சுந்தர்:
இந்நிலையில் காயத்திலிருந்து 99% குணமடைந்துள்ள வாசிங்டன் சுந்தர் இங்கிலாந்தின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரின் வாயிலாக கிரிக்கெட்டுக்கு திரும்ப முடிவெடுத்துள்ளார். லஞ்ன்க்க்ஷைர் அணிக்காக முதல் முறையாக 50 ஓவர் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அவர் இங்கிலாந்துக்கு செல்வதற்காக விசா அனுமதி கிடைத்ததும் அந்நாட்டிற்கு புறப்பட உள்ளார். அதாவது ஜூலையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடும் போது இவர் கவுண்டி தொடரில் விளையாட உள்ளார்.

அதில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்காக திரும்பும் வேலைகளில் ஈடுபடப்போகும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “லஞ்ன்சஷைர் அணிக்காக கவுண்டி கிரிக்கெட்டில் முதல் முறையாக விளையாட மிகுந்த ஆவலுடன் உள்ளேன். இங்கிலாந்து கால சூழ்நிலைகளில் விளையாடுவது எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருக்கும். ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த சமயத்தில் பிசிசிஐ மற்றும் லஞ்ன்சஷைர் ஆகிய 2 வாரியங்களுக்கும் இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே உள்ளே அணியுடன் அடுத்த மாதம் இணைய உள்ளேன்” என்று கூறினார்.

- Advertisement -

இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள லஞ்ன்சஷைர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு. “இந்திய வீரர் வாசிங்டன் சுந்தரை ஒப்பந்தம் செய்ததை லஞ்ன்சஷைர் கிரிக்கெட் உறுதிப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். இதற்கான விசா அனுமதி கிடைத்ததும் எங்கள் நாட்டுக்கு வந்து எங்கள் அணியுடன் வாஷிங்டன் இணைந்து கொள்வார்” என்று கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் வாழ்த்து:
இதை தொடர்ந்து லஞ்ன்சஷைர் அணிக்காக பருக் இன்ஜினியர், முரளி கார்த்திக், தினேஷ் மோங்கியா, விவிஎஸ் லக்ஷ்மன், சவுரவ் கங்குலி ஆகியோருக்குப் பின் விளையாடும் 6-வது இந்திய வீரர் என்ற பெருமையை வாசிங்டன் சுந்தர் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : அனில் கும்ப்ளேவுக்கு பின் இவர்தான் இந்திய அணியின் சிறந்த லெக் ஸ்பின்னராக திகழ்கிறார் – சஞ்சய் பாங்கர் பாராட்டு

இந்தியாவுக்காக இதுவரை 4 டெஸ்ட், 4 ஒருநாள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இனிமேலாவது காயமின்றி தொடர்ச்சியாக விளையாடி நாட்டுக்காகவும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

Advertisement