IPL 2023 : காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து மொத்தமாக வெளியேறிய தமிழக வீரர் – ஹைதெராபாத் அணிக்கு பெரிய பின்னடைவு

Natarajan Washingtan Sundar Hari Nishanth
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பரபரப்பான போட்டிகளுடன் மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் கோப்பையை வெல்வதற்காக போராடி வரும் 10 அணிகளுக்கு மத்தியில் 2016க்குப்பின் 2வது சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் திண்டாடி வருகிறது. குறிப்பாக கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற புதிய டி20 தொடரில் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்த ஐடன் மார்க்ரம் இந்த வருடம் அந்த அணியை வழி நடத்தி வருகிறார்.

இருப்பினும் புவனேஸ்வர் குமார், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், மயங் மார்கண்டே போன்ற வீரர்களின் சிறப்பான செயல்பாடுகளால் பந்து வீச்சு துறையில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அந்த அணிக்கு பேட்டிங் துறையில் ஹரி ப்ரூக், ராகுல் திரிபாதி, கேப்டன் மார்க்ரம், ஹென்றிச் க்ளாஸென் போன்ற பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்பட்டு தோல்விக்கு காரணமாக அமைந்து வருகிறார்கள். குறிப்பாக கடைசியாக டெல்லிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட அந்த அணி 144/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. அதிலும் குறிப்பாக ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்த்த வாஷிங்டன் சுந்தர் போட்டியில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

- Advertisement -

காயத்தால் வெளியேற்றம்:
ஆனாலும் பேட்டிங்கில் சொதப்பி தோற்ற அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு அடுத்து வரும் போட்டிகளில் தொடர் வெற்றிகளை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. இந்நிலையில் தசைப்பிடிப்பு காயத்தால் 2023 ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மொத்தமாக விலகுவதாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டெல்லிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளுடன் 24* (15) ரன்கள் எடுத்து சிறப்பாகவே செயல்பட்ட அவர் வலைப்பயிற்சியின் போது காயத்தை சந்தித்ததாக தெரிகிறது.

அது பெரிய அளவில் இருப்பதால் முழுமையாக குணமடைய இன்னும் ஒரு மாதத்திற்கு மேலாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஏற்கனவே புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் திண்டாடும் ஹைதராபாத் அணிக்கு வாஷிங்டன் சுந்தர் போன்ற சிறப்பாக செயல்படும் வீரர் இப்படி காயத்தால் பாதியிலேயே வெளியேறியுள்ளது பிளே ஆஃப் சுற்று கனவில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் விளையாட வேண்டும் என்று நிறைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

அதே சமயம் அவர் காயமடைந்தது பல ரசிகர்களுக்கு அலுப்பு தட்டும் ஒன்றாக அமைந்துள்ளது. ஏனெனில் 2017இல் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆரம்பத்திலேயே காயமடைந்ததால் நிலையான இடத்தை பிடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். அப்படியே காலங்கள் உருண்டோடிய நிலையில் ஐபிஎல் தொடரிலும் அடிக்கடி காயமடைந்து வந்த அவர் 2020 சீசனில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் மீண்டும் கம்பேக் கொடுத்து 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் மறக்க முடியாத காபா வெற்றியில் அசத்தலாக செயல்பட்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் மறக்க முடியாத வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

ஆனால் அதன் பின் மீண்டும் காயப்படைந்த அவர் குணமடைந்து தன்னுடைய 2வது ஒருநாள் போட்டியை 5 வருடங்கள் கழித்து 2022 பிப்ரவரியில் விளையாடினார். அதை தொடர்ந்து நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடரிலும் இதே போல பாதியில் காயமடைந்து வெளியேறிய அவர் குணமடைந்ததால் ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் இந்தியாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:IPL 2023 : வெற்றிக்கு போராடி வீழ்ந்த விராட் கோலி – டி20 கிரிக்கெட்டில் படைத்த தனித்துவமான உலக சாதனை இதோ

ஆனால் மீண்டும் காயமடைந்து வெளியேறிய அவர் 2022 அக்டோபரில் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற தொடரில் தேர்வு செய்யப்பட்டு அசத்தலாக செயல்பட்டார். அதனால் 2023 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்கும் எண்ணத்துடன் இந்த சீசனில் அசத்தலாக செயல்பட்ட அவர் மீண்டும் காயமடைந்து வெளியேறியுள்ளது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement