IPL 2023 : வெற்றிக்கு போராடி வீழ்ந்த விராட் கோலி – டி20 கிரிக்கெட்டில் படைத்த தனித்துவமான உலக சாதனை இதோ

Virat Kohli
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற 36வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை அதன் சொந்த ஊரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் 3வது முறையாக பெங்களூருவை தலைமை தாங்கிய விராட் கோலி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 200/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 56 (29) கேப்டன் நிதிஷ் ராணா 48 (21) வெங்கடேஷ் ஐயர் 31 (26) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியான ரன்களை எடுக்க பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக விஜய் குமார் மற்றும் ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 201 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு அதிரடி காட்டிய டு பிளேஸிஸ் 17 (7) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த சபாஷ் அகமது 2, கிளன் மேக்ஸ்வெல் 5 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் அடுத்த களமிறங்கிய மகிபால் லோம்ரர் அதிரடியாக 1 பவுண்டரி 3 சிக்சருடன் 34 (18) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் விராட் கோலி 6 பவுண்டரியுடன் அரை சதமடித்து வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

புதிய உலக சாதனை:
பொதுவாகவே சற்று மெதுவாக துவங்கி நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்த கூடிய அவர் இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் அரை சதமடித்தார். அதே வேகத்தில் தொடர்ந்து ரன்களை குவிக்க முயற்சித்த அவர் ஆண்ட்ரே ரசல் வீசிய 12வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரை அடிக்க முயற்சித்தார். ஆனால் பவுண்டரி எல்லையில் அதை தடுத்த வெங்கடேஷ் ஐயர் அற்புதமான கேட்ச் பிடித்ததால் 54 (37) ரன்களில் விராட் கோலி அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றது பெங்களூரு ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்தது.

இறுதியில் எதிர்பார்க்கப்பட்டது போலவே பிரபுதேசாய் 10 (9) தினேஷ் கார்த்திக் 22 (18) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி சொதப்பியதால் 20 ஓவர்களில் 179/8 ரன்களுக்கு பெங்களூருவை கட்டுப்படுத்தி சிறப்பான வெற்றி பெற்ற கொல்கத்தா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். அதனால் பேட்டிங்கில் பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக 54 ரன்களை 145.95 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து போராடிய விராட் கோலியின் போராட்டம் வீணானது.

- Advertisement -

குறிப்பாக லேசான காயத்தால் அவதிப்பட்டு வரும் டு பிளேஸிஸ்க்கு பதிலாக கடந்த 2 போட்டிகளில் நீண்ட நாட்கள் கழித்து கேப்டன்ஷிப் செய்து வெற்றி பெற்ற அவர் இம்முறை இதர வீரர்களின் சொதப்பலால் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய முடியாமல் போனது.  இருப்பினும் கடந்த 2008 முதலே ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரராக சாதனை படைத்து வரும் விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் சாதனை படைத்து கடந்த 15 வருடங்களாக பெங்களூருவுக்கு முதல் கோப்பையை வென்று கொடுத்து விட வேண்டும் என்ற லட்சியத்துடன் போராடி வருகிறார்.

இருப்பினும் இதுவரை அது நிறைவேறாமல் இருந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் அடித்த 54 ரன்களுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா, ஐபிஎல், உள்ளூர் என அனைத்து வகையான டி20 போட்டிகளையும் சேர்த்து இதுவரை விராட் கோலி மொத்தம் 3015 ரன்களை அடித்துள்ளார்.

இதையும் படிங்க:RCB vs KKR : மற்றவரையும் கெடுத்து தாமும் கெட்ட டிகே, இவர போய் தோனியுடன் கம்பேர் பண்ணலாமா – ரசிகர்கள் கோபம், காரணம் இதோ

இதன் வாயிலாக உலக டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 3000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய தனித்துவமான உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 3015, சின்னசாமி மைதானம், பெங்களூரு, இந்தியா*
2. முஸ்திதுர் ரஹீம் : 2989, நேஷனல் ஸ்டேடியம், மிர்பூர், வங்கதேசம்
3. முகமதுல்லா : 2813, நேஷனல் ஸ்டேடியம், மிர்பூர், வங்கதேசம்
4. அலெக்ஸ் ஹெல்ஸ் : 2749, ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம், இங்கிலாந்து

Advertisement