RCB vs KKR : மற்றவரையும் கெடுத்து தாமும் கெட்ட டிகே, இவர போய் தோனியுடன் கம்பேர் பண்ணலாமா – ரசிகர்கள் கோபம், காரணம் இதோ

DInesh Karthik
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபில் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற 36வது லீக் போட்டியில் பெங்களூருவை அதன் சொந்த ஊரில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்தது. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா வழக்கம் போல டெத் ஓவர்களில் ரங்களை வாரி வழங்கிய பெங்களூரு பவுலர்களை அடித்து நொறுக்கி 20 ஓவரில் 200/5 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 56 (29) வெங்கடேஷ் ஐயர் 31 (26) நிதிஷ் ராணா 48 (21) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியான ரன்களை குவித்தனர்.

பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக வணிந்து ஹஸரங்கா மற்றும் விஜயகுமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 201 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த டு பிளேஸிஸ் 17 (7) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த சபாஷ் அகமது 2, மேக்ஸ்வெல் 5 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். இருப்பினும் அடுத்து வந்த மகிபால் லோம்ரர் அதிரடியாக 34 (18) ரன்களும் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய கேப்டன் விராட் கோலி 54 (37) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள்.

- Advertisement -

ரசிகர்கள் கோபம்:
அப்போது கடைசி 8 ஓவரில் 86 ரன்கள் தேவைப்பட்டதால் பெங்களூருவின் வெற்றி சமமாகவே இருந்தது. ஆனால் அப்போது களமிறங்கி காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் 15வது ஓவரில் தேவையின்றி இல்லாத சிங்கிளை எடுக்க அழைப்பு விடுத்ததை நம்பி வெள்ளைக்கோட்டை விட்டு வெளியே வந்த பிரபதேசாய் பரிதாபமாக 10 (9) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார். அதனால் பொறுப்புடன் செயல்பட்டு காப்பாற்ற வேண்டிய தினேஷ் கார்த்திக் வழக்கம் போல அழுத்தமான சமயத்தில் வருண் சக்கரவர்த்தி சுழலில் 22 (18) ரன்களில் அவுட்டாகி சொதப்பினார்.

அதனால் 20 ஓவரில் 179/8 ரன்களுக்கு பெங்களூருவை கட்டுப்படுத்தி வென்ற கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்த வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். இப்போட்டியில் 4 விக்கெட்டுகள் இழந்தாலும் முன்கூட்டியே களமிறங்கி செட்டிலாகி கடைசியில் ஃபினிஷிங் செய்யும் அற்புதமான வாய்ப்பை பெற்ற தினேஷ் கார்த்திக் மீண்டும் அழுத்தமான சமயத்தில் பிரபுதேசாயை ரன் அவுட்டாக்கியதுடன் தாமும் அவுட்டாகி போராடியிருந்தால் கிடைத்திருக்க கூடிய பெங்களூருவின் வெற்றியை கோட்டை விட்டார்.

- Advertisement -

கடந்த 2004இல் அறிமுகமாகி ஆரம்ப காலம் முதலே அழுத்தமான போட்டிகளில் சொதப்புவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர் தோனி எனும் மகத்தான விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் வந்ததால் இந்திய அணியில் நிலையான வாய்ப்புகளை இழந்தார். குறிப்பாக 2018 நிதியாஸ் கோப்பை தவிர்த்து பெரும்பாலும் சொதப்பலாகவே செயல்பட்ட அவர் 2019 உலகக்கோப்பை விளையாடிய பின் வர்ணனையாளராக அவதரித்ததால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்டது.

ஆனால் கடந்த வருடம் பெங்களூரு அணியில் 330 ரன்களை 183.33 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முக்கிய பங்காற்றியதால் 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த அவர் இருதரப்பு தொடர்களில் அசத்தினார். ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலியின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை கடைசி ஓவரில் வீணடிக்க தெரிந்த அவர் சொதப்பலாகவே செயல்பட்டதால் மீண்டும் அதிரடியாக கழற்றி விடப்பட்டுள்ளார்.

- Advertisement -

தற்போது 37 வயது தாண்டி விட்ட அவர் இந்தியாவுக்காக விளையாடுவது கடினமாகவே வார்க்கப்படும் நிலையில் இந்த சீசனில் பெங்களூரு அணியின் தோல்விக்கு காரணமாகும் வகையில் சொதப்புவதால் பெரும்பாலான ரசிகர்கள் “பேசாமல் நீங்கள் வர்ணனை செய்ய வாருங்கள்” என்று அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

இதையும் படிங்க: KKR vs RCB : கடைசி 3-4 மேட்ச்சா நான் இதைத்தான் சொல்லிட்டு இருக்கேன். வெற்றி குறித்து – நிதீஷ் ராணா பேசியது என்ன?

அதை விட பேட்டிங்க்கு சாதகமாக இருந்த இதே பெங்களூரு மைதானத்தில் 2018 சீசனில் 206 ரன்களை சேசிங் செய்யும் போது இதை விட மோசமாக 74/4 என திணறிய சென்னைக்கு 70* (34) ரன்களை தெறிக்க விட்ட தோனி அபார வெற்றி பெற்று கொடுத்தார். ஆனால் நேற்றைய போட்டியில் கிட்டத்தட்ட அதே சூழ்நிலையில் சொதப்பிய தினேஷ் கார்த்திக்கை எப்போதுமே தோனியுடன் ஒப்பிடக்கூடாது என்று ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement