200 ரன்கள் அடித்தும் நாங்கள் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்திக்க இதுதான் காரணம் – சுப்மன் கில் வருத்தம்

Gill
- Advertisement -

அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் போட்டியில் விளையாடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது குஜராத் அணியை அதன் சொந்த மண்ணில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதோடு இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணியானது துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் தமிழக வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியாரது சிறப்பான ஆட்டம் காரணமாக சுதாரித்துக் கொண்டு பெரிய ரன் குவிப்பிற்கு சென்றது.

- Advertisement -

இறுதியில் 20 ஓவர்களில் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது சிறிய போராட்டத்திற்கு பிறகே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் யாரும் எதிர்பாரா விதமாக 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 206 ரன்களை குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பாக வில் ஜேக்ஸ் 100 ரன்களையும், விராட் கோலி 70 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் கோலி மற்றும் வில் ஜேக்ஸ் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தனர்.

- Advertisement -

அடுத்த போட்டியில் நாங்கள் இன்னும் சிறப்பான ஒரு திட்டத்துடன் வரவேண்டும். மேலும் மைதானத்தில் எங்களுடைய திட்டங்களை சரியாக வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் வெற்றிக்கு திரும்ப முடியும். எப்போது பேட்டிங் செய்தாலும் 15 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாக அடிக்க நினைக்க வேண்டும். ஏனெனில் தற்போது வெற்றிக்கான ஸ்கோர் அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க : 212 ரன்ஸ்.. சதத்தை தவறவிட்ட ருதுராஜ்.. கலக்கிய மிட்சேல், துபே.. இந்தியாவை முந்தி சிஎஸ்கே புதிய உலக சாதனை

இந்த போட்டியில் 200 ரன்களை நாங்கள் எடுத்தபோது நிச்சயம் இந்த ரன் குவிப்பு போதும் என்று நினைத்தோம். ஆனால் இந்த போட்டியில் எங்கள் வசம் எதுவும் செல்லவில்லை. பெங்களூரு அணி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போனதாலே நாங்கள் தோல்விக்கு சென்றோம் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement