47 ரன்ஸ்.. டெல்லிக்காக போராடிய அக்சர்.. 2009, 2016 மேஜிக்கை மீண்டும் நிகழ்த்திய ஆர்சிபி.. பிளே ஆஃப் செல்லுமா?

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மே 12ஆம் தேதி 7.30 மணிக்கு பெங்களூருவில் 62வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கேப்டன் டு பிளேசிஸ் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 27 (13) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

அதனால் 36/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய பெங்களூரு அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த வில் ஜேக்ஸ் மற்றும் ரஜத் படிடார் ஆகியோர் 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தனர். அதில் அதிரடியாக விளையாடிய ரஜத் படிதார் அரை சதமடித்து 52 (32) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் அதிரடி காட்டிய வில் ஜேக்ஸ் 41 (29) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆர்சிபி வெற்றி:
அதைத்தொடர்ந்து கேமரூன் கிரீன் வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் எதிர்ப்புறம் ஸ்வப்னில் சிங் 13, தினேஷ் கார்த்திக் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் கேமரூன் க்ரீன் 32* (24) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் பெங்களூரு 187/9 ரன்கள் எடுத்தது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக ரசிக் சலாம் மற்றும் கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 188 ரன்களை துரத்திய டெல்லிக்கு டேவிட் வார்னர் ஒரு ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த அபிஷேக் போரெல் 2 ரன்னில் நடையை காட்டினார். போதாக்குறைக்கு அடுத்த பந்திலேயே மறுபுறம் அடித்து நொறுக்கிய ஜேக் பிரேசர்-மெக்குர்க் 21 (8) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த குமார் குஷக்ரா 2 (3) ரன்களில் சிராஜ் வேகத்தில் அவுட்டானார்.

- Advertisement -

அதனால் 30/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய டெல்லிக்கு தற்காலிக கேப்டன் அக்சர் படேல் அதிரடியாக விளையாடினார். ஆனால் அவருக்கு எதிர்ப்புறம் கைகொடுக்க முயற்சித்த சாய் ஹோப் 29 (23) ரன்களிலும் ட்ரிஷன் ஸ்டப்ஸ் 3 ரன்களிலும் அவுட்டாகி மிகப்பெரிய அழுத்தத்தை உண்டாக்கினர். அதனால் ஏற்பட்ட அழுதத்தில் அக்சர் படேல் அபாரமாக விளையாடி 57 (39) ரன்களில் அவுட்டானார்.

அடுத்து வந்த வீரர்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 19.1 ஓவரில் டெல்லி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்தளவுக்கு சிறப்பாக பந்து வீசிய பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக யாஷ் தயாள் 3, லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பெங்களூரு புள்ளிப்பட்டியலில் டெல்லி, லக்னோவை பின்னுக்கு தள்ளி 5வது இடத்திற்கு முன்னேறியது.

இதையும் படிங்க: பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனையை நிகழ்த்திய – சுனில் நரேன்

அதன் காரணமாக கடைசி போட்டியிலும் இதே போல வெற்றி பெற்று டெல்லி, லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகள் அதனுடைய அடுத்த போட்டிகளில் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் பெங்களூரு அணி பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு உருவாக்கியுள்ளது. குறிப்பாக 2009, 2016க்குப்பின் 3வது முறையாக ஒரு சீசனில் தொடர்ந்து 5 வெற்றிகளை பதிவு செய்து பெங்களூரு அசத்தியுள்ளது. ஆச்சர்யப்படும் வகையில் அந்த வருடங்களில் பெங்களூரு ஃபைனல் வரை சென்றது. எனவே இம்முறை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வோம் என்று ஆர்சிபி ரசிகர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

Advertisement