IND vs NZ : கடைசி போட்டியிலும் அதே தவறான முடிவு – மானம் காத்த தமிழனாய் காப்பாற்றிய சுந்தர், இந்தியாவின் ஸ்கோர் இதோ

Washington Sundar.jpeg
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வி சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு பயணித்து முதலில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மழைக்கு மத்தியில் சிறப்பாக செயல்பட்டு 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் கோப்பை வென்று தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணி என்பதை நிரூபித்த இந்தியா அடுத்ததாக 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. அதில் மூத்த வீரர் ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கிய அதே இளம் அணி முதல் போட்டியிலேயே 306 ரன்கள் குவித்தும் பந்து வீச்சில் சொதப்பியதால் பரிதாபமாக தோற்ற நிலையில் 2வது போட்டியை மழை ரத்து செய்தது.

அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கிய இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்ட நிலையில் குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய நவம்பர் 30ஆம் தேதியன்று நடைபெற்ற கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. கிறிஸ்ட்சர்ச் நகரில் இந்திய நேரப்படி காலை 7:00 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு தொடக்க வீரர்கள் சுப்மன் கில் 13 (22) ரன்களிலும் கேப்டன் ஷிகர் தவான் 28 (45) ரன்களிலும் ஆடம் மில்னே வேகத்தில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

மானம் காத்த தமிழன்:
அதனால் 55/2 என தடுமாற்றத் தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு ராஜா வீட்டு பிள்ளையான ரிஷப் பண்ட்டுக்கு இம்முறை சூரியகுமாரை பின்னுக்கு தள்ளி 4வது இடத்தில் அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுத்தது. அதில் 2 பவுண்டரி அடித்த அவர் வழக்கம் போல 10 (12) ரன்களில் அவுட்டான நிலையில் வழக்கத்திற்கு மாறாக 5வது இடத்தில் களமிறங்கிய சூரியகுமார் 6 (10) ரன்களில் அவுட்டாகி சென்றார். இருப்பினும் மறுபுறம் 3வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக நின்று சரிந்த இந்தியாவை காப்பாற்ற போராடிய ஷ்ரேயஸ் ஐயர் 8 பவுண்டரியுடன் 49 (59) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

அடுத்த சில ஓவர்களிலேயே அடுத்து வந்த தீபக் ஹூடா மற்றும் தீபக் சஹர் ஆகிய லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்றி தலா 12 ரன்களில் அவுட்டாகி இந்தியாவின் கதையை முடித்தார்கள். அதனால் 149/6 பின்னர் 170/7 என திணறிய இந்தியா 200 ரன்களை தாண்டுமா என்று ரசிகர்கள் கவலையடைந்த போது நங்கூரமாக நின்ற தமிழ வீரர் வாஷிங்டன் சுந்தர் மறுபுறம் நிதானமாக ரன்களை சேர்த்தார். அவருக்கு கம்பெனி கொடுத்த சஹால் 8 (22) ரன்கள் எடுத்து இந்தியாவை 200 ரன்கள் தாண்ட வைத்து அவுட்டான போது அடுத்து வந்த அர்ஷிதீப் சிங் 9 (9) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் அசத்திய வாஷிங்டன் சுந்தர் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் அரை சதமடித்து 51 (64) ரன்களை குவித்து இந்தியாவின் மானத்தை ஓரளவு காப்பாற்றிய தமிழனாய் கடைசி பேட்ஸ்மேனாக ஆட்டமிழந்தார். அவரது ஆட்டத்தால் ஓரளவு தப்பிய இந்தியா 47.3 ஓவரில் 219 ரன்களுக்கு சுருண்டது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஆடம் மில்னே மற்றும் டார்ல் மிட்சேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இப்போட்டியில் பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளம் இருந்தும் ரிசப் பண்ட் என்ற ஒருவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக பேட்டிங் வரிசையில் இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்காமல் செய்த தேவையற்ற மாற்றமே இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்தது. அதுபோக ஷ்ரேயஸ் ஐயர் தவிர்த்து ஓப்பனிங் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான பேட்டிங்கும் இந்தியாவுக்கு வலுவான ஸ்கோரை கொடுக்கவில்லை. இதனால் பந்து வீச்சில் மேஜிக் செய்தால் மட்டுமே இப்போட்டியில் வெல்ல முடியும் என்ற நிலைமையில் இந்தியா உள்ளது. அதை தொடர்ந்து நியூசிலாந்து 220 ரன்களை துரத்தி வருகிறது.

Advertisement