
ஆஸ்திரேலிய அணிக்கு முதல் தர போட்டியில் விளையாடாமல் வெறும் திறமையை மட்டும் வைத்தே 2010 ஆம் ஆண்டு அறிமுகமானவர் டேவிட் வார்னர். அதிரடி ஆட்டக்காரரான இவர் இடதுகை விரேந்தர் சேவாக் என்றும் அழைக்கப்படுபவர். டெஸ்ட் டி20 ஒருநாள் என எந்த விதமான போட்டியாக இருந்தாலும் அதிரடியாக ஆடுவதில் வல்லவர்.
இந்நிலையில் தனக்கும், விராட் கோலிக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்து பேசியுள்ளார் வார்னர். இதுகுறித்து அவர் கூறுகையில் : எனக்கும் விராட் கோலிக்கும் பல ஒற்றுமைகள் இருக்கிறது. ஆனால் கிரிக்கெட் மீதான தீராத ஆசையும், வெல்ல வேண்டுமென்ற தீராத உணர்வும்தான் எங்களை வழிநடத்துகிறது. எதிரணிகளை வெற்றி பெறுவதைக் காட்டிலும் எதிரணியில் உள்ள வீரரை விட அதிகமாக ரன்கள் குவிக்க வேண்டும் என்று எங்கள் இருவருக்கும் தோன்றும்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடர் நடைபெறும்போது இந்திய இரண்டு அணிகளுக்கும் இடையே உள்ள சண்டைகளை விட போட்டியில் ரன்கள் அடித்து செயல்படுத்துவதையே இருவரும் விரும்புவோம். இது போன்ற சிறிய சிறிய சண்டைகளை ஆட்டத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.
இவ்வாறு எதிரணியை விட அபாரமாக செயல்பட வேண்டும் என்ற வேட்கை எங்களுக்குள் எப்போதும் இருக்கும். இது தான் என்னையும் விராட் கோலியும் வழி நடத்துகிறது என்று கூறியுள்ளார் டேவிட் வார்னர் . வார்னர் ஐ.பி.எல் போட்டிகளில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிவருவது மட்டுமின்றி கேப்டன்ஷிப்பும் செய்துவருவதால் இந்திய வீரர்களை பற்றி நன்கு புரிந்து வைத்துள்ளார்.
மேலும் தனிப்பட்ட முறையிலும் விராட் கோலியுடன் நட்பில் இருக்கும் அவர் எப்போதும் இந்தியாவில் விளையாடுவதை மகிழ்ச்சியாக நினைக்கிறார். மேலும் தற்போது ஐ.பி.எல் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் டிக்டாக்கில் ஹிந்தி பாடல் உட்பட இந்திய பாடல்களுக்கு தனது மனைவி மற்றும் மகள்களுடன் சேர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார் எனபதும் குறிப்பிடத்தக்கது.