ஐபிஎல் 2022 தொடரில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட டுப்லஸ்ஸிஸ் தலைமையில் முதல் கோப்பையை வெல்வதற்காக புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் தவிக்கிறது. தற்போதைய நிலைமையில் அடுத்த 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலைமை உள்ளது.

இருப்பினும் அதற்கு மிகச் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் முதுகெலும்பு வீரர் விராட் கோலியின் சுமாரான பார்ம் அந்த அணி நிர்வாகத்திற்கு கவலை அளிக்கிறது. ஏனெனில் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற மகத்தான சாதனை படைத்த அவர் இந்த வருடம் 10 இன்னிங்ஸ்சில் வெறும் 186 ரன்களை 20.67 என்ற சராசரியில் எடுத்து சுமாராக செயல்பட்டு வருகிறார்.
100 போட்டிகளாக:
அத்துடன் கடைசியாக கடந்த 2019இல் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த அவர் அதன்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக 103* போட்டிகளாக அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் திணறி வருகிறார். அதிலும் இந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டான அவர் அரைசதம் அடிக்க முடியாமல் திணறி வந்த நிலையில் ஒரு வழியாக குஜராத்துக்கு எதிரான கடைசி போட்டியின் போது 58 ரன்கள் எடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டார். இருப்பினும் கூட 53 பந்துகளில் மெதுவாக விளையாடி அரைசதம் கடந்த அவர் மீண்டும் அதற்காக விமர்சனத்திற்கு உள்ளானார்.

இப்படி தொடர்ச்சியாக பெரிய ரன்களை அடிக்க முடியாமல் தடுமாறி வரும் அவருக்கு 2 – 3 மாதங்கள் தற்காலிக ஓய்வு எடுக்குமாறு ரவி சாஸ்திரி உட்பட நிறைய ஜாம்பவான்கள் பலவிதமான ஆலோசனைகளை தெரிவித்து வருகின்றனர். அந்த அவர் வகையில் தடுமாறும் விராட் கோலி எப்படி மோசமான பார்மில் இருந்து மீள்வது என்ற கேள்விக்கு நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் வித்தியாசமாக பதிலளித்துள்ளார்.
பார்முக்கு திரும்பிய வார்னர்:
அவரும் விராட் கோலியை போலவே சமீப காலங்களில் மோசமான பார்மில் இருந்த நிலையில் தற்போது பழைய பார்முக்கு திரும்பினார். குறிப்பாக 2015 முதல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 562, 848, 641, 692, 548 என ஒவ்வொரு வருடமும் குறைந்தது 500 க்கும் மேற்பட்ட ரன்களை தெறிக்கவிட்ட அவர் அந்த அணிக்கு பல வரலாற்று வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். அதிலும் 2016இல் கேப்டனாக சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொடுத்த அவர் 3 ஆரஞ்சு தொப்பிகளுடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஆரஞ்சு தொப்பிகளை வென்ற வீரர் என்ற சரித்திர சாதனை படைத்திருந்தார்.

ஆனால் 2020இல் முதல் முறையாக பேட்டிங்கில் தடுமாறிய அவரை கேப்டன் பதவியை விட்டு நீக்கிய ஹைதரபாத் நிர்வாகம் அதன்பின் விளையாடும் 11 பேர் அணியில் இருந்தும் கழற்றி விட்டு பெரிய அவமானப்படுத்தியது. ஒரு கட்டத்தில் “டேவிட் வார்னர் முடிந்து போனவர்” என்ற முத்திரையை குத்தி அணியிலிருந்து மொத்தமாக ஹைதராபாத் அணி நிர்வாகம் கழற்றிவிட்டது. ஆனால் அதற்கெல்லாம் அசராத அவர் அதன்பின் துபாய் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அற்புதமாக செயல்பட்டு ஆஸ்திரேலியா முதல் முறையாக உலககோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருதை வென்று ஹைதராபாத்துக்கு மிகப்பெரிய சவுக்கடி கொடுத்தார்.
2 குழந்தைகள்:
அதன் காரணமாக 6.25 கோடி என்ற நல்ல தொகைக்கு டெல்லி அணிக்காக விளையாடி வரும் அவரிடம் நீங்கள் எப்படி அதுபோன்ற மோசமான பார்மில் இருந்து திரும்பினீர்கள் என்றும் அதை வைத்து விராட் கோலிக்கு உங்களது அட்வைஸ் என்ன என்றும் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “மேலும் 2 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக என்ஜாய் செய்யுங்கள். ஏனெனில் பார்ம் என்பது தற்காலிகமானது கிளாஸ் என்பது நிரந்தரமானது என்பதால் அதை எப்போதுமே நீங்கள் இழக்க மாட்டீர்கள்.

இதுபோன்ற தருணம் உலகின் ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் ஏற்படக்கூடியது. நீங்கள் எப்பேர்பட்ட உலகத்தரம் வாய்ந்த வீரராக இருந்தாலும் கூட இது போன்ற தருணங்களை சந்தித்தே தீர வேண்டும். எனவே நீங்கள் அடிப்படையை கடைபிடித்தாலே போதுமானது” என்று கூறினார். விராட் கோலியை போன்றவருக்கு பார்முக்கு எப்படி திரும்ப வேண்டும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை எனக் கூறும் டேவிட் வார்னர் இது போன்ற கடினமான தருணங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சகஜமானது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : இந்திய வீரரை சஹாவை மிரட்டிய பத்திரிக்கையாளருக்கு பி.சி.சி.ஐ கொடுத்த தண்டனை – என்ன தெரியுமா?
அதனால் அதைப் பற்றியே தீவிரமாக யோசிக்காமல் மேலும் 2 குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருந்தாலே போதும் ஃபார்ம் தானாக திரும்பிவிடும் என்று கலகலப்புடன் சிரித்துக்கொண்டே கூறினார்.



