நான் ரஞ்சி போட்டியில் விளையாடி மீண்டும் இந்திய அணியில் ஆடும் வாய்ப்பை பெறுவேன் – தமிழகவீரர் சபதம்

tn
- Advertisement -

தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் நடராஜன் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர் மிகச் சிறப்பாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக கடைசி கட்ட நேரத்தில் ஓவரின் 6 பந்துகளையும் மிகத் துல்லியமான “யார்கர்” பந்துகளாக வீசும் இவரின் திறமை பலரையும் திரும்பிப்பார்க்க வைத்ததுடன் பாராட்டுகளையும் பெற்று தந்தது.

natarajan

- Advertisement -

இதன் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு நடராஜனுக்கு தேடி வந்தது. சொல்லப்போனால் அந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நெட் பந்து வீச்சாளராக இடம் பிடித்திருந்த நடராஜனுக்கு ஒரு முக்கிய பந்துவீச்சாளர் காயம் அடைந்த காரணத்தால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அசத்திய நடராஜன்:
முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரில் முதல் முறையாக இந்தியாவுக்காக களமிறங்கிய நடராஜன் அதன்பின் ஒருநாள் தொடரிலும் களமிறங்கும் வாய்ப்பைப் பெற்றார். கிடைத்த வாய்ப்புகளை கனகச்சிதமாக பயன்படுத்திய அவர் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய போதிலும் அபாரமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்ற துவங்கினார்.

Natarajan

அதன்பின் அதே ஆஸ்திரேலியாவில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி என முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் விலகியதால் வேறு வழி இல்லாமல் அவர் களமிறக்கப்பட்டார். அந்தப் போட்டியிலும் கிடைத்த வாய்ப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் 32 ஆண்டுகளுக்குப்பின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்து டெஸ்ட் தொடரை வெல்ல துருப்பு சீட்டாக விளங்கினார்.

- Advertisement -

காயத்தால் விலகல்:
இந்த அடுத்தடுத்த எழுச்சியின் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா போல இந்தியாவின் முக்கிய பந்துவீச்சாளராக அறியப்பட்ட நடராஜன் அதன் பின் நடந்த ஐபிஎல் 2021 தொடரில் துரதிர்ஷ்டவசமாக விளையாடுவதற்கு முன்பாகவே காயமடைந்து விலகினார். அதைத்தொடர்ந்து காயத்திலிருந்து குணமடைந்த அவர் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரான சயீத் முஷ்டாக் அலி கோப்பை 2021 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு அணியில் விளையாடினார். இருப்பினும் அதற்கு அடுத்த மாதம் நடந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மீண்டும் லேசான காயமடைந்த அவர் தற்போது அதிலிருந்து மீண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

nattu

இருப்பினும் விரைவில் நடைபெற உள்ள ஐபிஎல் 2022 சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூபாய் 1 கோடி பிரிவில் பங்கேற்க நடராஜன் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்நிலையில் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்த பின்னரே இந்தியாவுக்காக விளையாட வருவேன் என நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “ஐபிஎல் ஏலம் மற்றும் டி20 உலககோப்பை போன்றவற்றை பற்றி தற்போது நான் பெரிதாக எதுவும் கனவு காணவில்லை. 2022 ஒரு மிகப்பெரிய வருடமாக இருக்கும் என அனைவரும் பேசி வருகிறார்கள். ஆனால் நான் எனது பலத்தில் கவனம் செலுத்தி கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறேன். இதை நான் சரியாக செய்தாலே மற்ற அனைத்தும் தாமாக வந்து சேரும். மேலும் நான் நீண்ட நாட்கள் கழித்து திரும்ப வருகிறேன் என்பதால் எனக்கு படபடப்பாக இல்லை என கூற மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

பழைய பன்னீர்செல்வமாக:
விரைவில் துவங்க இருக்கும் இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக விளையாட நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதில் விளையாடுவது பற்றி நடராஜன் கூறியது பின்வருமாறு. “இதற்கு முன் ஐபிஎல் மற்றும் இந்தியாவுக்காக நான் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் தற்போதும் என்னிடம் இருந்து சிறப்பான செயல்பாட்டை அனைவரும் எதிர்ப்பார்ப்பார்கள். எனவே ஒரு சில போட்டிகளில் விளையாடிய பின் எனது பார்ம் முழுமையாக திரும்ப வரும். தற்போது நான் புத்துணர்ச்சி அடைந்துள்ளேன் என்பதால் இதற்கு முந்தைய காலங்களில் நான் என்ன செய்தேனோ அதைத் திரும்பவும் சிறப்பாக செய்ய உள்ளேன். குறிப்பாக எனது யார்க்கர் மற்றும் கட்டர் பந்துகளில் கவனம் செலுத்தி பழைய நடராஜனாக திரும்ப வர உள்ளேன்” என கூறியுள்ளார்.

nattu

இந்த ஆண்டிற்கான ரஞ்சி கோப்பையில் தமிழகத்துக்காக சிறப்பாக செயல்பட்டு காயத்துக்கு முன் இருந்த நடராஜனை போலவே மீண்டும் முழுமையாக திரும்ப உள்ளதாக நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹர்டிக் பாண்டியா போன்ற சில வீரர்கள் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாமல் அரைகுறையாக திரும்பி மோசமாக விளையாடியதால் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்கள். எனவே அப்படி இல்லாமல் ரஞ்சி கோப்பையில் விளையாடி முழுமையாக தகுதி பெற்ற பின்னரே இந்தியாவுக்காக விளையாடுவேன் என நடராஜன் தெரிவித்துள்ளது தமிழக ரசிகர்களுக்கு பெருமையை கொடுக்கிறது என்றே கூறலாம்.

Advertisement