வனிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் லீக் சுற்று போட்டிகளின் முடிவிலேயே இந்த தொடரில் இருந்து வெளியேறியது. அதிலும் குறிப்பாக லீக் சுற்று போட்டிகளின் முடிவில் 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்து படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளியேறி உள்ளதால் அந்த அணியின் மீது தற்போது விமர்சனங்களும் அதிகரித்துள்ளன.
ஏனெனில் கடந்த 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு இலங்கை அணியில் இருந்த முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பலரும் அந்த அணியில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் அதனை தொடர்ந்து கடந்த 9 ஆண்டுகளாகவே அந்த அணி மிகப்பெரிய சரிவை சந்தித்து அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஏற்கனவே 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் டி20 உலககோப்பை என ஐசிசி தொடர்களை அந்த அணி கைப்பற்றி இருந்தாலும் அதையெல்லாம் மறக்கும் அளவிற்கு தற்போதைய அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த டி20 தொடரில் தாங்கள் தோல்வியை சந்தித்தது குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் வனிந்து ஹசரங்கா கூறுகையில் :
நீங்கள் ஒரு போட்டியை தோற்ற பிறகு ஆடுகளம், மைதானத்தின் சூழல், போட்டியின் சூழல் உட்பட பல காரணங்களை அடுக்கடுக்காக சொல்லலாம். ஆனால் தொழில் முறையாக நீங்கள் கிரிக்கெட் விளையாடும்போது அவ்வாறு காரணங்களை சொல்வது சரியான விடயம் கிடையாது. ஏனெனில் எதிர்த்து விளையாடும் அணியும் அதே ஆடுகளத்தில் தான் விளையாடுகிறது.
எனவே மைதானமோ, சூழ்நிலையோ எந்த ஒரு காரணமும் தோல்விக்கான காரணம் அல்ல. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு ஆட்டமுறையை மாற்றிக் கொள்வதுதான் கிரிக்கெட் வீரராக நம்முடைய வேலை. ஒரு தேசிய அணிக்காக விளையாடும்போது அதனை அந்த பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அந்த வகையில் நாங்கள் இந்த அமெரிக்கா ஆடுகளங்கள் மீது எந்த ஒரு குறையும் சொல்ல விரும்பவில்லை.
இதையும் படிங்க : கம்பீர் மட்டுமல்ல.. இன்னொரு முன்னாள் இந்திய தமிழக வீரரும் பயிற்சியாளர் பதவிக்கு போட்டியில் உள்ளாராம் – யார் அவர்?
முடிந்தவரை எங்களால் அந்த சூழலுக்கு தகவமைத்து கொண்டோம் இருந்தாலும் துருதிஷ்டவசமாக எங்களால் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. ஒரு அணியாக ஒரு அணியின் கேப்டனாக நான் இந்த தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று ஹசரங்கா மன்னிப்பு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.



