இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட் பதவிக்காலம் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து தான் மேலும் இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர விரும்பவில்லை என்று ஏற்கனவே டிராவிட் அறிவித்து விட்டதால் அடுத்த பயிற்சியாளருக்கான தேடலை கடந்த சில மாதங்களாகவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ மேற்கொண்டு வந்தது.
அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்திருந்த வேளையில் 3000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பயிற்சியாளர் பதவிக்காக வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் அதில் பல விண்ணப்பங்கள் போலி என்றும் அதனால் சரியான விண்ணப்பங்களை தேர்வு செய்து முறைப்படி பயிற்சியாளர் பதவிக்கான தேர்வு நடைபெறும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்தது. அதன்படி இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் பிளமிங், ஜஸ்டின் லாங்கர் போன்ற வெளிநாட்டு வீரர்களின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டது.
அதேபோன்று முன்னாள் இந்திய வீரர்களான வி.வி.எஸ் லட்சுமணன், கவுதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா போன்ற வீரர்களில் பெயர்களும் பரிசீலனையில் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கௌதம் கம்பீர் தான் அடுத்த பயிற்சியாளர் என்றும் அவருடன் பேசி வார்த்தையை நடத்தி அவரது நிபந்தனைகளுக்கு பி.சி.சி.ஐ ஒப்புதல் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலில் கம்பீர் மட்டுமின்றி மேலும் ஒரு நபராக முன்னாள் இந்திய வீரரும், தமிழக வீரருமான டபிள்யூ வி இராமனும் நேர்காணலில் கலந்து கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரரின் அன்பு பரிசை பெற்றுக்கொண்ட விராட் கோலி – ரோஹித்.. விவரம் இதோ
மேலும் கம்பீரை விட டபிள்யூ வி ராமன் கொடுத்த விளக்கங்கள் பொருந்துவதாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 59 வயதான தமிழகத்தைச் சேர்ந்த ராமன் ஏற்கனவே இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.



