ரிஷப் பண்ட்க்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படுவது ஏன்? அனைவரது கேள்விக்கு பயிற்சியாளர் லக்ஷ்மன் கொடுத்த பதில் இதோ

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்து பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை மழைக்கு மத்தியில் வென்ற இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை இழந்தது. அதை விட இந்த சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்பட்டும் கேரள வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காததும் சொதப்பலாக செயல்பட்டும் ரிஷப் பண்ட்டுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படுவதும் அனைத்து ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது. அதில் 2015இல் அறிமுகமானாலும் 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளை பெறாத சஞ்சு சாம்சன் குப்பை போல பயன்படுத்தப்பட்டு வந்தார்.

Rishabh Pant Sanju Samson

- Advertisement -

இருப்பினும் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இந்தியாவுக்காக கிடைத்த வாய்ப்புகளில் பெரும்பாலும் அசத்தலாக செயல்பட்டு நல்ல ரன்களை குவித்து நல்ல ஃபார்மில் இருக்கும் அவருக்கு டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த நிலையில் இந்த நியூசிலாந்து டி20 தொடரில் வாய்ப்பு பெறாத அவர் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 36 ரன்கள் குவித்து அசத்திய போதிலும் 6வது பவுலர் தேவை என்பதற்காக மனசாட்சியின்றி அதிரடியாக நீக்கப்பட்டார்.

லக்ஷ்மன் விளக்கம்:

மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சிய செயல்பாடுகளை வெளிப்படுத்தி தன்னை நிரூபித்துள்ள ரிசப் பண்ட் டி20 கிரிக்கெட்டில் 65 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்புகளை பெற்றும் எப்போதுமே சிறப்பாக செயல்பட்டதில்லை. அதே போல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற தொடரின் கடைசி போட்டியில் சதமடித்த அவர் அத்தொடரின் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியதை தவிர்த்து எஞ்சிய போட்டிகளில் சுமாராகவே செயல்பட்டுள்ளார்.

Rishabh Pant IND vs ENG Rohit Sharma

மேலும் இந்த சுற்றுப்பயணத்திலும் 6, 11, 15 என சொதப்பிய அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் 1 முதல் 7 வரை அனைத்து பேட்டிங் இடங்களிலும் வாய்ப்பு பெற்றும் எதிலுமே சிறப்பாக செயல்படவில்லை. ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் சதமடித்து தொடரை வெல்ல முக்கிய பங்காற்றிய காரணத்தாலேயே இந்த நியூசிலாந்து ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட்டுக்கு முழுமையான வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக தற்காலிக பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி 3வது போட்டியின் போது அவர் பேசியது பின்வருமாறு. “இது அவர்களுக்கு (வீரர்கள்) வாய்ப்புகளை வழங்குவது மற்றும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படாத போதெல்லாம் அதற்கான காரணத்தை தெரிவிப்பதாகும். அந்த வகையில் பண்ட் 4வது இடத்தில் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய போட்டியில் அவர்  சதமடித்து நீண்ட காலங்கள் ஆகவில்லை. அதனால் இப்போது அவரை ஆதரிப்பது முக்கியமாகும். டி20 கிரிக்கெட்டில் எவ்வளவு பெரிய அவுட்ஃபீல்டு இருந்தாலும் மைதானத்தை எளிதாக கடந்து பவுண்டரிகளை அடிப்பது பேட்ஸ்மேன்களுக்கு அதிக நம்பிக்கையை கொடுக்கிறது” என்று கூறினார்.

Laxman-1

அதாவது இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 போட்டிகளின் முடிவில் 1 – 1 என்ற கணக்கில் சமனில் இருந்த தொடரின் முக்கியமான 3வது போட்டியில் முதல் முறையாக சதமடித்த ரிஷப் பண்ட் 125* ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்தார். அந்த தொடருக்கு பின் எந்த ஒருநாள் போட்டியிலும் பங்கேற்காத ரிஷப் பண்ட் டி20 தொடர்கள் மற்றும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்ற நிலையில் இப்போது தான் முதல் முறையாக மீண்டும் ஒருநாள் தொடரில் விளையாடுவதால் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக லக்ஷ்மன் கூறியுள்ளார்.

ஆனால் அந்த சதத்துக்கு பின் களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் சுமாராக செயல்பட்ட ரிஷப் பண்ட் சுமாரான பார்மில் இருப்பது தெரியாதா? என்று அவரது இந்த கருத்துக்கு ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். மேலும் இதிலிருந்து ஒரு போட்டியில் அசத்தலாக செயல்பட்டால் அதை வைத்து 10 போட்டிகளில் சொதப்பலாக விளையாடலாம் என்ற அணுகுமுறை இந்தியாவில் இருப்பது பயிற்சியாளர் வாயிலேயே வந்து விட்டதாகவும் கிரிக்கெட் ரசிகர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

Advertisement